Published:Updated:

களைகட்டும் குற்றால சீஸன்: சென்னை - செங்கோட்டை இடையே 10 சிறப்பு ரயில்கள்!

களைகட்டும்  குற்றால சீஸன்: சென்னை - செங்கோட்டை இடையே 10 சிறப்பு ரயில்கள்!
களைகட்டும் குற்றால சீஸன்: சென்னை - செங்கோட்டை இடையே 10 சிறப்பு ரயில்கள்!

குற்றால சீஸன் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், செங்கோட்டை-சென்னை இடையே 10 சிறப்புக் கட்டண ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்புக் கட்டண ரயிலுக்கான முன்பதிவு, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

நெல்லை மாவட்டத்தில் குற்றால சீஸன் இந்த ஆண்டு அருமையாக உள்ளது. தென்றல் காற்றும் சாரல் மழையும் மட்டும் அல்லாமல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுவதால், சீஸனை அனுபவித்து மகிழ ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். குற்றாலத்தைச் சுற்றிலும் இருக்கும் தனியார் அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. அத்துடன், கேரளாவின் பாலருவி, கும்பாவுருட்டி அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்த நிலையில், ஜூலை 2-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 10 சிறப்புக் கட்டண ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்திருக்கிறது. ஜூலை 2, 9, 16,23,30 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு இந்த ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே ஜூலை 2-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும் சிறப்புக் கட்டண ரயில் (06011) இயக்கப்படும். இந்த ரயில், சென்னை எழும்பூரிலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும். 

அதேபோல, செங்கோட்டையிலிருந்து ஜூலை 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை  சென்னை எழும்பூருக்கு, அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் சிறப்புக் கட்டண ரயில் (06012) இயக்கப்படும். இந்த ரயில், செங்கோட்டை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயில்களில், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் தலா ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். 

மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் இரண்டும், 8 தூங்கும் வசதிகொண்ட சாதாரண பெட்டிகள், 3 முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள்,            2 லக்கேஜ் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை , சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய இடங்களில் நின்று செல்லும். 

செங்கோட்டை- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் (06012) மட்டும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த சிறப்புக் கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, நாளை (28-ம் தேதி) காலை 8 மணி முதல் தொடங்குகிறது’’ என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.