Published:Updated:

"நான்கு நாள் ஸ்ட்ரைக்கில் ரூ.100 கோடி நஷ்டம்!" - குமுறும் லாரி உரிமையாளர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நான்கு நாள் ஸ்ட்ரைக்கில் ரூ.100 கோடி நஷ்டம்!" - குமுறும் லாரி உரிமையாளர்கள்
"நான்கு நாள் ஸ்ட்ரைக்கில் ரூ.100 கோடி நஷ்டம்!" - குமுறும் லாரி உரிமையாளர்கள்

"இந்த நான்கு நாளில் மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகளுக்கு அரசு பஸ் சர்வீஸ் கைகொடுக்கலாம். பெருவாரியான எண்ணிக்கையில் பொருள்களைக் கொண்டு  செல்வோருக்கு லாரியை விட்டால் வேறு வழியில்லை. எனவே, பேச்சுவார்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்; சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும்; 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பு, அகில இந்திய அளவில் லாரி ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுத்தது. 

கடந்த 20-ம் தேதியன்று ஸ்டிரைக் தொடங்கியது. நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. பெரும்பாலானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால், லட்சக்கணக்கான லாரிகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் காய்கறி உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'அரசு பஸ்களில் விவசாய விளைபொருள்களைக் கட்டணமின்றி கொண்டு செல்லலாம்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலித்துவிட்டு சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இது பொதுமக்களின் கோரிக்கையும்கூட. ஆகவே, மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகத் தீர்வுகாண வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறுகையில், ''நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகளும் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. பால், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மட்டும் ஓடுகின்றன. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டேங்கர் லாரிகள் மூலம்தான் பெருமளவில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படுகின்றன. அந்த லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த லாரிகளின் வேலை நிறுத்தத்தால் 1.20 கோடிக்கும் அதிகமான லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாள்கள் லாரி வேலைநிறுத்தம் நீடித்தால், இப்போது கையிருப்பில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடப்பதால், பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டுகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு, உடனே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்'' என்றார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நலச்சங்க சம்மேளனத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம், ``டீசல் விலை உயர்வு, லாரி தொழிலைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் டீசல் விலைக்கு இணையாக மத்திய அரசின் பெட்ரோல் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இன்னும் ஐந்தாறு ரூபாயை உயர்த்தினால், தனியார் டீசல் நிறுவனங்களின் விலையும் அரசு நிறுவனங்களின் டீசல் விலையும் சமநிலைக்கு வந்துவிடும். எரிபொருள்களின் விலையைக் குறைக்க அதை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்று முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளோம். 

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் சுமார் 50 கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம், 42 டோல்கேட்கள் உள்ளன. மாநில அரசு, 4 டோல்கேட்களை நடத்துகின்றன. இந்த டோல்கேட்களில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும். ரெக்கவரி வேன் இருக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் உதவி செய்ய டாக்டர், நர்ஸ் பணியாற்ற வேண்டும். சாலைகளை முறையாகப் பராமரிப்பதுடன் சாலை ஓரங்களில் மரம், பூச்செடிகளை  வைத்துப் பராமரிக்க வேண்டும். இது டோல்கேட் விதிகளில் உள்ளது. இதெல்லாம் இருப்பதாகத்தான் நம்மிடம் வரி வசூலிக்கிறார்கள். ஒரு டோல்கேட்டிலாவது, இந்த வசதிகள் எல்லாம் உள்ளதா... என்று கேட்டால், 'இல்லை' என்பதுதான் உண்மை. கொள்ளைக் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட்களும் காலாவதியான டோல்கேட்களும் உள்ளன. இதை எடுத்துவிட்டு ஆண்டுக்கு ஒரு டோல் என்ற முறையை வலியுறுத்துகிறோம்.

சரக்கு வாகனங்களுக்கான இன்ஸூரன்ஸ் கட்டணம் 60 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மாபெரும் கொள்ளை. 30,000 ரூபாய் இன்ஷுரன்ஸ் கட்டிவருபவர்கள் இனி, 48,000 ரூபாய் கட்ட வேண்டும். டோல்கேட் கொள்ளை, டீசல் விலை உயர்வு, இன்ஷூரன்ஸ் கட்டணம் உயர்வு ஆகியவை லாரி வாடகையை உயர்த்த நிர்பந்தம் செய்கிறது. அதோடு, லாரி ரிப்பேர் ஆனால், அதற்கு வாங்கும் உதிரிபாகங்களுக்கான விலைகளில் 14 முதல் 28 வரை ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதையும் குறைக்க வலியுறுத்தி உள்ளோம். எனவே, எங்கள் கோரிக்கைகளில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து உடனே அரசு, எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இல்லை என்றால், காய்கறி உள்ளிட்ட அன்றாட உணவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்வதைத் தடுக்க முடியாது. இந்த நான்கு நாளில் மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகளுக்கு அரசு பஸ் சர்வீஸ் கைகொடுக்கலாம். பெருவாரியான எண்ணிக்கையில் பொருள்களைக் கொண்டு  செல்வோருக்கு லாரியை விட்டால் வேறு வழியில்லை. எனவே, பேச்சுவார்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்'' என்றார். 

ஜவுளிகள், காய்கறிகள், துணி வகைகள், மோட்டார் வாகன உற்பத்திப் பொருள்கள், கோழி முட்டை , தீவனங்கள் என்று அனைத்துத் தரப்பு வியாபாரிகளும், அதன் வாடிக்கையாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 4-வது நாளாக நீடிக்கும் லாரிகள் வேலை நிறுத்தத்தால், தமிழக லாரிகள் வெளிமாநிலங்களுக்குச் செல்லவில்லை. அதுபோல, வெளிமாநில லாரிகளும் தமிழகத்துக்குள் வரவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு