Published:Updated:

இந்தோனேஷிய விமானம் ஏறுமுன் இந்திய பைலட் சுனேஜாவின் மனநிலை என்னவாக இருந்தது? #LionAirCrash

நிலநடுக்கம், சுனாமி, புயல், மழை எதுவாகினும் இயற்கையின் கோர முகத்துக்குத் தன் மக்களை தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறது இந்தோனேஷியா. சமீபத்தில் அங்கே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் கூட ஏறத்தாழ 2000 பேர் இறந்துபோனார்கள். ஆனால் 5000 க்கும் மேல் இருப்பார்கள் என்கிறது அங்குள்ள உள்ளூர் பத்திரிகைகள். அந்த வடுக்களே ஆறாத சூழலில் இந்த விமான விபத்து இந்தோனேஷியாவுக்கு மேலும் துயரத்தைக் கொடுக்கக்கூடியது.

இந்தோனேஷிய விமானம் ஏறுமுன் இந்திய பைலட் சுனேஜாவின் மனநிலை என்னவாக இருந்தது? #LionAirCrash
இந்தோனேஷிய விமானம் ஏறுமுன் இந்திய பைலட் சுனேஜாவின் மனநிலை என்னவாக இருந்தது? #LionAirCrash

ந்தியாவைச் சேர்ந்த விமானியான பாவ்யே சுனேஜா, வரும் தீபாவளி பண்டிகைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், இந்தோனேசியாவின் லயன் ஏர் விமான விபத்தில் அவர் உயிரிழந்திருப்பது, மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, நேற்று காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் என்ற நகருக்குப் புறப்பட்ட லயன் ஏர் விமானம் ஒன்று, சுமத்ரா தீவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

1 மணி 10 நிமிட நேரத்தில் பங்கல் பினாங்கு நகருக்குச் சென்றடைந்திருக்க வேண்டிய அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும் என்று கோரி, அதன் விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் அதற்கான அனுமதியை வழங்கினர். ஆனால், அடுத்த 10 நிமிடத்துக்குள் விமானம் மாயமானது. பின்னர் அந்த விமானம், நடுக்கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த யாரையும் காப்பாற்ற முடியாத சூழலில் அனைவரும் பலியானார்கள். 

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய பைலட் பாவ்யே சுனேஜா இந்தியாவைச் சேர்ந்தவர். 31 வயதான இவர், டெல்லி மயூர் விகார் பகுதியைச் சேர்ந்தவர். 

கடந்த 2011-ம் ஆண்டு முதல் `லயன் ஏர்' விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுனேஜாவுக்கு 6000 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. 1,500 மணி நேரம் ஒரு பைலட் விமானத்தை ஓட்டியிருந்தாலே, அவரை பைலட்டுக்கான முழுத் தகுதி கொண்டவராக விமானத்துறை ஏற்றுக் கொள்ளும். பொதுவாக ஒரு விமானி, வருடத்துக்குச் சராசரியாக 840 மணி நேரம் விமானத்தை ஓட்டுவார். 

அந்தவகையில் மிகுந்த அனுபவமும், திறமையும் கொண்ட இவரை, இந்தியாவிலுள்ள பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் வேலைக்கு எடுக்க முடிவெடுத்திருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறுகையில் ``கடந்த ஜூலை மாதம் சுனேஜாவிடம் பேசினேன். அவருக்கு 6000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருந்தது. அவரைப் போன்ற அனுபவம் மிகுந்த விமானி ஒருவரை வேலைக்கு எடுக்க, நாங்கள் தீவிரமாக விருப்பம் கொண்டிருந்தோம். எங்களிடம் சுனேஜா வைத்த ஒரே கோரிக்கை, தன் சொந்த ஊரான டெல்லியிலேயே பணியமர்த்த வேண்டும் என்பதுதான். `நீங்கள் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்துக்குள் உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று அவரிடம் சொல்லியிருந்தோம். ஆனால், அதற்குள் அவரின் முடிவு இப்படி ஆகிவிட்டது" என்றார் வருத்தத்துடன். 

சொந்த ஊரை விட்டுச் சென்று வெளியூர், வெளிநாடுகளில் பணி புரியும் பலருக்கும் உள்ள வழக்கமான ஏக்கம்தான் சுனேஜாவுக்கும் இருந்துள்ளது. சொந்த ஊரிலேயே தான் விரும்பும் வேலை கிடைத்து, ஊரோடு ஒன்றி வாழ முடியாதா என்பதுதான் அவர்களின் விருப்பம். எந்தப் பணியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி வகிப்பவராக இருந்தாலும், சொந்த ஊரில் பணி ஆசையைத் தவிர்க்க முடியாது என்பதற்கு சுனேஜாவும் ஓர் உதாரணம். 

சுனேஜாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, சொந்த ஊருக்கு வந்து, குடும்பத்தினருடன்தான் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அதேபோல், இந்த ஆண்டும், வரும் வாரம் தீபாவளியைக் கொண்டாட, குடும்பத்தினரைச் சந்திக்க ஊருக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், சுனேஜா பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் குடும்பத்தினர் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். சுனேஜாவின் குடும்பத்தினரைப் போன்றே, அவருடன் விபத்தில் உயிரிழந்த 188 பேரின் குடும்பங்களின் கனவுகளையும் விழுங்கிவிட்டு சலனமின்றி இருக்கிறது இந்தியப் பெருங்கடல். 

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி, புயல், மழை எதுவானாலும் இயற்கையின் கோரப் பிடிக்கு ஏராளமான மக்கள் பலி்யாகிக் கொண்டிருப்பது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் அங்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் ஏறத்தாழ 2000 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். இந்த எண்ணிக்கை 5000மாக இருக்கக்கூடும் என்று உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அந்த சோகத்தின் வடுக்களே ஆறாத சூழலில் தற்போது நிகழ்ந்துள்ள விமான விபத்து இந்தோனேஷியாவுக்கு மேலும் துயரத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.