Published:Updated:

ஒரே நாளில் 5,000 திருமண விழாக்கள்! - டெல்லியை ஸ்தம்பிக்கவைத்த உறவுகள்

ஒரே நாளில் 5,000 திருமண விழாக்கள்! - டெல்லியை ஸ்தம்பிக்கவைத்த உறவுகள்
ஒரே நாளில் 5,000 திருமண விழாக்கள்! - டெல்லியை ஸ்தம்பிக்கவைத்த உறவுகள்

நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளால் டெல்லியின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

File Photo

அதிக வாகனப் பயன்பாடு இருக்கும் மாநிலங்களில், இந்தியாவின் தலைநகர் டெல்லியும் ஒன்று. அதிக வாகனப் பயன்பாட்டின் காரணமாக காற்று மாசுபாடு இருப்பதால், வாகனங்களின் இயக்கத்தைக் குறைக்க தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது டெல்லி அரசு. இருப்பினும் வாகனங்களின் அதிகரிப்பையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியவில்லை. 

அதிலும், நேற்று மாலை டெல்லி சாலையில் பயணம்செய்தவர்கள், சுமார் இரண்டு மணி நேரமாவது போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்திருந்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. முகூர்த்த நாளான நேற்று மாலை, டெல்லியில் மட்டும் சுமார் 5,000 வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இதனால் ஆங்காங்கே ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் போக்குவரத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். டெல்லியின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் அதிக திருமண மண்டபங்கள் உள்ளன. நேற்று, அனைத்து மண்டபங்களும் நிறைந்து காணப்பட்டன. 

எப்போதும் இல்லாத அளவு நேற்று மாலை முதல் இரவு வரை டெல்லியின் முக்கிய நகரங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ‘இன்று, பல இடங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என டெல்லி காவல் துறை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. மேலும் சில போக்குவரத்துக் காவலர்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.