Published:Updated:

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்
பிரீமியம் ஸ்டோரி
72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

Published:Updated:
72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்
பிரீமியம் ஸ்டோரி
72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

ந்த ஆளில்லா ரயில்வே கேட் திறந்து கிடக்கிறது... ஆமை வேகத்தில் ஒரு ரயில் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் எந்தப் பதற்றமுமின்றி கார், பைக், ஆட்டோ, சைக்கிள் என அனைத்து வாகனங்களும் ரயில்வே கேட்டைக் கடந்துசெல்கின்றன. அந்த ரயில் திடீரென ரயில்வே கேட்டுக்குச் சற்று முன்பே நிற்கிறது. ரயில் இன்ஜினிலிருந்து ஒருவர் இறங்கிவந்து ரயில்வே கேட்டை மூடுகிறார். ரயில் நகர்கிறது. ரயில்வே கேட்டைக் கடந்ததும், ரயில் மீண்டும் நிற்கிறது. கடைசிப்பெட்டியிலிருந்து ஒருவர் வந்து ரயில்வே கேட்டைத் திறந்துவிட்டு, ரயிலில் ஏறிக்கொள்கிறார். ரயில் புறப்படுகிறது. இப்படியொரு வீடியோ, சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வைரலாக வலம்வந்தது.

இந்தப் ‘புகழ்பெற்ற’ ரயில்... காரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில் தடத்தில் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்களைத் தேடி உலகம் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் 72 கி.மீ தூரத்தைச் சென்றடைய 3:15 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது இந்த ரயில்.

காரைக்குடி-திருத்துறைப்பூண்டி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அதனால் இந்தப் பாதையில் ரயில்கள் இயக்கம், 2012 மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. அகலப்பாதையாக மாற்றும் பணி மந்தமாக நடைபெற்றுவந்த நிலையில், காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே 72 கி.மீ தூரப் பணிகள் நிறைவுபெற்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 110 கி.மீ வேகத்தில் பயணித்த ரயில், 52 நிமிடங்களில் பட்டுக்கோட்டையை அடைந்தது. காரைக்குடி வாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஏனென்றால், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்றால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகும்.

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

இந்த ரயில், வாரத்தில் திங்கள், வியாழன் என இரண்டு நாள்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இது ஆமை வேகத்தில் சென்றதைப் பார்த்துப் பயணிகள் நொந்துபோயினர். சோதனை ஓட்டத்தின்போது 52 நிமிடங்களில் பட்டுக்கோட்டையை அடைந்த ரயில், வழக்கமான இயக்கம் தொடங்கிய பிறகு ஏழு மணி நேரம் பயணித்தது. கண்டனூர் புதுவயல், பெரியகோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, ஒட்டங்காடு உள்ளிட்ட நிலையங்கள் வழியாக இந்த ரயில் செல்கிறது.

‘72 கி.மீ-க்கு ஏழு மணி நேரப் பயணமா’ என்ற ஆச்சர்யம் கிளம்ப, இந்த ரயிலில் பயணித்துப்பார்க்க முடிவுசெய்தோம். காரைக்குடி ரயில் நிலையத்தை அடைந்ததும், ‘‘பயணிகளின் கனிவான கவனத்துக்கு... காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை செல்லும் ரயில், சரியாக 9.45 மணிக்குப் புறப்படும்’’ என அறிவிப்பாளரின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

ஒரு டிக்கெட் 20 ரூபாய். இதுவே, பஸ்ஸில் பயணம் செய்தால் 70 ரூபாய் ஆகும். இரண்டு டிக்கெட்கள் வாங்கிக்கொண்டு நாமும் புகைப்படக்காரரும் ரயிலில் ஏறினோம். இப்போதெல்லாம், தமிழ்நாட்டில் எந்த ரயிலில் ஏறினாலும் நிற்கக்கூட இடம் கிடைப்பதில்லை. பல ரயில்களில் கழிப்பறை பகுதியில் அமர்ந்து பலர் பயணம் செய்கிறார்கள். ஆனால், இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒன்றிரண்டு பயணிகளே இருந்தனர். நாம் ஏறிய பெட்டியில் நாமும் புகைப்படக்காரரும் மட்டுமே இருந்தோம். சரியாக 9.45-க்கு ரயில் புறப்பட்டது. கிளம்பியது முதல் மெதுவாகவே ரயில் சென்றுகொண்டிருந்தது. போகப்போக ரயில் வேகமெடுக்கும் என நினைத்தோம். ஆனால், அதே ஆமை வேகத்தில்தான் பயணித்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஆங்காங்கே நின்றுவிட்டு, பிறகு புறப்பட்டது.

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

இடையில் ஒரு ரயில் நிலையத்தில் ஏறிய சரவணகுமார் என்பவரிடம் பேசினோம். ‘‘காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைவரை 36 ரயில்வே கேட்கள் இருக்கு. ஒவ்வொரு கேட்லயும் ரயில் நின்னுதான் போகும். அந்தக் கொடுமையை நீங்களே பாருங்க’’ என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள், பெரியகோட்டை ரயில்வே கேட்டுக்கு சற்றுமுன்பாக ரயில் நின்றுவிட்டது. நாம் கீழே இறங்கினோம். ரயில் இன்ஜினிலிருந்து ஒருவர் கீழே இறங்கினார். விறுவிறுவென்று போய் ரயில்வே கேட்டை மூடினார். உடனே ரயில் புறப்பட்டு கேட்டைத் தாண்டி நின்றது. கடைசிப் பெட்டியிலிருந்து ஒருவர் கீழே இறங்கிப்போய், மூடப்பட்டிருந்த கேட்டைத் திறந்துவிட்டுவந்து, ரயிலில் ஏறிக்கொண்டார். இந்த வழித்தடத்தில் உள்ள கேட்களை மூடித்திறப்பதற்கு கேட்கீப்பர்களே இல்லை. அந்த வேலையைச் செய்வதற்காக, இந்த ரயிலிலேயே நான்கு கேட் கீப்பர்கள் பயணிக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு இந்த ரூட்டில் ரயில் செல்வதால், ஒவ்வொரு கேட் பகுதியிலும் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் காத்திருந்து ஆர்வத்துடன் ரயிலைப் பார்த்து மகிழ்கிறார்கள். இளைஞர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுக்கிறார்கள்.

மதியம் ஒரு மணிக்குப் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்தது. “பஸ்ஸைவிட மிகவும் குறைவான கட்டணம் என்றபோதிலும், ஆமை வேகத்தில் செல்வதால் இந்த ரயிலைப் பயணிகள் விரும்பவில்லை. சோதனை ஓட்டம் நடந்தவரை அனைத்து கேட்களிலும் கேட்கீப்பர்கள் இருந்தனர். ஆனால், ரயில் இயக்கப்பட்டால் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கருதிய தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான், ரயில் இவ்வளவு மெதுவாக இயக்கப்படுகிறது. கேட்கீப்பர்கள் அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியும் இதுதான். அதனால், வழக்கம்போல தனியார் பஸ்கள் லாபத்துடன் இயங்குகின்றன” என்கிறார் உள்விவரம் அறிந்த ரயில்வே ஊழியர் ஒருவர்.

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

பேராவூரணியைச் சேர்ந்த ராமமூர்த்தி, “காலையிலும் மாலையிலும் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு ரயிலும், அதே நேரத்தில் காரைக்குடியிலிருந்து ஒரு ரயிலும் இயக்கப்பட்டால் நன்றாக இருக்கும். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கொடுமை என்னவென்றால், டீசல் பிடிப்பதற்காகவே இந்த ரயில் காலிப் பெட்டிகளுடன் திருச்சிக்குச் செல்கிறது. அங்கு டீசலை நிரப்பிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காரைக்குடிக்கு வருகிறது. பிறகு திங்கள், வியாழன் என இரண்டு தினங்கள் பட்டுக்கோட்டை வரை பயணிக்கிறது. டீசல் காலியானதும் மீண்டும் திருச்சிக்குச் செல்கிறது. ஏன் இவ்வளவு நஷ்டத்தில் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று தணிக்கையின்போது கேள்வி எழுப்பி, இந்த ரயில் சேவையை ரத்துசெய்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது’’ என்றார்.

காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஆதிஜெகநாதன், ‘‘காரைக்குடி – பட்டுக்கோட்டை வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ரூ.700 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயிலை மதுரை வரை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக்கழகம் மற்றும் பொதுநல அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கோரிக்கை வைத்துள்ளோம். காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு இந்த ரயிலை இயக்கினால், வணிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பிருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பஸ் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும்’’ என்கிறார்.

72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “பட்டுக்கோட்டையிலிருந்து காலையில் ரயிலை இயக்க வேண்டுமானால், அங்கே ரயில் பைலட்கள் தங்குவதற்கு ரூம்கள் கட்டவேண்டும். 35 கேட் கீப்பர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும். மதுரை வரை இந்த ரயிலை நீட்டிப்பது குறித்து மதுரை டிவிஷன் மேலாளர்தான் முடிவுசெய்ய வேண்டும்’’ என்றார்.

ஆரம்பத்தில் ஏழு மணி நேரமாக இருந்த இந்த ரயிலின் பயண நேரம், தற்போது மூன்றேகால் மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக காரைக்குடியைச் சேர்ந்த ரயில் பயணி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர், 9.45 மணி என்பதற்குப் பதிலாக, காலை 7 அல்லது 8 மணிக்கு இயக்கப்பட்டால், நிறைய பேர் இந்த ரயிலைப் பயன்படுத்துவார்கள் என்றார்.

இது குறித்து சிவகங்கை எம்.பி-யான பி.ஆர்.செந்தில்நாதனிடம் கேட்டதற்கு, “இந்த ரயிலின் நேரத்தை மாற்றியமைப்பது, மதுரைவரை நீடிப்பது, கேட் கீப்பர்களை நியமிப்பது என அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் இன்னும் ஒரு வாரத்தில் ரயில்வே அமைச்சரைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன். இதுபற்றி நாடாளுமன்றத்திலும் பேசவுள்ளேன்” என்றார்.

- தெ.பாலமுருகன்
படங்கள்: பி.சாய் தர்மராஜ்