Published:Updated:

திருச்செந்தூரில் 2 -வது முறையாக இயக்கப்பட்ட நீராவி இன்ஜின் - குடும்பத்துடன் பயணம் செய்த கலெக்டர்

திருச்செந்தூரில் 2 -வது முறையாக இயக்கப்பட்ட நீராவி இன்ஜின் - குடும்பத்துடன் பயணம் செய்த கலெக்டர்
திருச்செந்தூரில் 2 -வது முறையாக இயக்கப்பட்ட நீராவி இன்ஜின் - குடும்பத்துடன் பயணம் செய்த கலெக்டர்

திருச்செந்தூர் டு ஸ்ரீவைகுண்டம் இடையே இரண்டாவது முறையாக 163 ஆண்டுகள் பழைமையான ஹெரிடேஜ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியைத்து துவங்கி வைத்ததுடன் தனது குடும்பத்துடன் பயணம் செய்தார்.

இங்கிலாந்து நாட்டில் கடந்த 1855-ம் ஆண்டில் ஈ.ஐ.ஆர்.-21 மற்றும் ஈ.ஐ.ஆர்.- 22 என இரண்டு நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது. இவை கடந்த 1857-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட ரயில் வழித்தடங்களில் இயக்கப்பட்டது. சுமார் 55 ஆண்டுகள் ரயில் சேவைக்குப் பிறகு இந்த நீராவி இன்ஜின்கள் ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டன. அங்கு பராமரிப்பின்றி சிதிலமடைந்த இந்த நீராவி இன்ஜின்களின் பாகங்கள் காணாமல் போனது.

இந்த நிலையில், தெற்கு ரயில் நிர்வாகம் ஈ.ஐ.ஆர்.-21 நீராவி ரயில் இன்ஜினை பராமரிப்பு செய்தது. கடந்த மாதம் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு, நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கொண்டு வரப்பட்டது. பாரம்பர்ய ரயில் சேவை திட்டத்தில் உலகிலேயே பழைமையான நீராவி இன்ஜின் மூலம் குறிப்பிட்ட வழித்தடங்களில் அவ்வப்போது ஹெரிடேஜ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி முதன்முறையாக திருச்செந்தூர் டு ஸ்ரீவைகுண்டம் வரை  35 பயணிகளுடன் இந்த ஹெரிடேஜ் ரயில் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், ரயில் பயணிகளை மகிழ்விக்க இரண்டாவது முறையாக இன்று (25.11.18) ஹெரிடேஜ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த ஹெரிடேஜ் ரயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பழைமையான ரயில் சேவையைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் இந்த ஹெரிடேஜ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஈ.ஐ.ஆர். 22 பழைமையான நீராவி இன்ஜின் உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்தது.

தற்போது இந்த பழைமையான நீராவி இன்ஜின் மூலம் இந்த ரயிலில் பயணம் செய்வது மிகுந்த சந்தோஷம் மிக்க அனுபவத்தை தரும். இதேபோல் மேலும் இரு முறை ஹெரிடேஜ் ரயில் இயக்கப்பட உள்ளது.” என்றார். 40 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவரின் மனைவி அட்ஷா பரிதா, 6 வயது மகன் சம்மரத் நந்தூரி, ரயில்வே அதிகாரிகள் மற்றும் 10 பெண்கள் உட்பட 35 பயணிகள் பயணம் செய்தனர்.