பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்!

`அல்சைமர்’ நோயின் அறிகுறிகளை எப்படித் தெரிந்துகொள்வது? ஆரம்பக் கட்டம் என்றால் சிகிச்சைக்கு யாரை அணுக வேண்டும்?

- கல்பனா, வேதாரண்யம்

தெர்ல மிஸ்!

"மறதி என்பது நிம்மதியான வாழ்க்கைக்கு இயற்கை கொடுத்த வரம். எப்போதாவது எளிய விஷயங்களை மறப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், அன்றாடம் நாம் செய்யும் பணிகளை மறப்பது ஆபத்தே; அதைத்தான் ‘அல்சைமர்’ என்கிறோம். காலையில் பல் துலக்கியது, குளித்தது,  காலையில் சாப்பிட்ட உணவு, சந்தித்த நபர் என அன்றாடப் பழக்கங்களை மறந்துவிடுவார்கள் இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள். சில நேரங்களில் மிகவும் பழகிய இடத்துக்குச் செல்லும் வழி தெரியாமல் திணறுவார்கள், வழக்கமாகச் செய்யும் வேலையைச் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள். பேசுவது, எழுதுவதில் சிரமம் உண்டாகும். குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, கவலை, பயம் போன்றவை ஏற்படும். வழக்கமான குணாதிசயம் மாறி, ஆளுமைத் தன்மை ஒழிந்துவிடும். இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை நோயால் பாதிக்கப்பட்டவரால் உணர முடியாது. உடன் இருப்பவர்களால்தான் அறிய முடியும். ஒரு கட்டத்தில் தன் துணை, மகன், மகள், உறவினர்கள், நண்பர்களைக்கூட மறந்துவிடுவார்கள். இதுபோன்ற சூழலில், முதலில் நரம்பியல் மருத்துவரையும் அடுத்ததாக மனநல மருத்துவரையும் சந்திக்க வேண்டும்.

தெர்ல மிஸ்!

அதேநேரத்தில் மறதிக்கும் அல்சைமர் நோய்க்கும் வித்தியாசம் உண்டு. உதாரணமாக,  வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றதும் வீட்டைப் பூட்டினோமா, விளக்குகளை அணைத்துவிட்டோமா என சந்தேகம் வரும். மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டே தேடுவது, வீட்டில் சொல்லும் வேலைகளை அவ்வப்போது மறப்பது போன்றவை அல்சைமர் நோயின் அறிகுறிகள் அல்ல. இவை கவனக்குறைபாட்டால் ஏற்படக்கூடியவை. இவை எப்போதாவது வரும். இந்த மறதியை அல்சைமர் என பயப்பட வேண்டாம். அல்சைமர் என்பது பெரும்பாலும் வயதானவர்களில் சிலருக்கு மட்டுமே வரக்கூடியது."

- அசோகன், மனநல மருத்துவர்

``என் பெயர் கல்யாணி. வயது 49. எனக்கு சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளது. என் வயதில் உள்ளவர்களுக்கான சைக்கிள் போட்டி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறுகிறதா... யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?''
 
- கல்யாணி,  புதுச்சேரி.


``சைக்கிளிங், இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதனால் அனைத்து நகரங்களிலும் இப்போது போட்டிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. உங்கள் வயதுள்ளவர்களுக்கான போட்டிகள், சென்னையிலேயே நடைபெறுகின்றன. `அண்டர் 18' கேட்டகரியில் சிறுவர்-சிறுமியர் பங்கேற்பதுபோல், 40+ கேட்டகரியிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 65 வயதுள்ளவர்கள் வரை பங்கேற்கிறார்கள்.

தெர்ல மிஸ்!

சென்னையில் ECR உட்பட பல இடங்களில் வாரம்தோறும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் `ஜெனரல் ரைடு' போவார்கள். மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் ரேஸ்கள் நடைபெறும். 40 கிலோமீட்டர் வரை பந்தயத் தூரம் இருக்கும். `தமிழ்நாடு சைக்கிள் க்ளப்' ஃபேஸ்புக் பக்கத்திலேயே ரேஸ் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைக்கும். புதுச்சேரியில்கூட ஒரு வெளிநாட்டவர் குழு `சைக்கிளிங் டூர்' நடத்துகிறார்கள். ஆனால், அது ரேஸ் அல்ல.''

- சுரேஷ் குமார்,  தமிழ்நாடு சைக்கிளிங் க்ளப், சென்னை.

எந்த ஆண்டு யாருடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கூர்க்காக்களைப் பணியில் அமர்த்தினார்கள்... இவர்களுக்கு சம்பளம் தருவது யார்?

- சேலம் ராஜா.

தெர்ல மிஸ்!

இந்தியாவிற்கு வாணிபம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனியினர், கூர்க்காக்களின் காவல்திறனை அறிந்துகொண்டனர். பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் அவர்களைச் சேர்த்துக்கொண்டது. பின்னர் இந்தியாவிலுள்ள முக்கிய மாகாணங்களில் வசிக்கும் பிரித்தானிய அரசர்களின் வீடுகளுக்குப் பாதுகாவலர்களாக கூர்க்காக்கள் சென்றனர். தமிழகத்திற்கு வந்த காலகட்டமும் அதுவாகத்தான் இருந்திருக்கக்கூடும். மற்றபடி, அவர்கள் தமிழகத்திற்கு வந்ததற்கான குறிப்பிட்ட கால வரையறை என்று ஏதுமில்லை. இவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கோ, கொடுப்பதற்கோ பிரத்யேகமான அமைப்புகள் என்று எதுவுமில்லை. தாங்கள் இரவுநேரக் காவல் பணி புரியும் தெருக்களில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் அங்குள்ள தொழில் நிறுவனங்கள் ஆகிய இடத்திற்கு மாதமொருமுறை சென்று அவர்கள் கொடுக்கும் தொகையை ஊதியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். தனிப்பட்ட அப்பார்ட்மென்ட்களுக்குக் காவல்புரிகிற பட்சத்தில் அந்த அசோசியேஷன் கொடுக்கிற மாதத் தொகையே அவர்களின் சம்பளம். கடந்த சில வருடங்களில் செக்யூரிட்டி ஏஜென்சிகள்,கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் கூர்க்காக்களை யாரும் முன்புபோலப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், தான் காவல் காக்கிற மனிதர்களுக்காக உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் கூர்க்காக்கள்.

 - கேசவன், வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர் நல ஆர்வலர்

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு