Published:Updated:

காஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்!

காஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்!
காஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்!

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ராட்சத ஏர் பலூனில் ராணுவ வீரர்கள் சாகச பயணம் செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் வந்தடைந்த ராட்சத பலூனைக் காண அப்பகுதி மக்கள் திரளாகக் குவிந்து வரவேற்றனர்.

இந்திய ராணுவ வீரர்கள் மேஜர் அனுரூத் தலைமையில் 60 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் சாகச பயணம் மேற்கொள்வதற்காக ஜம்மு- காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ராட்சத ஏர் பலூனில் பயணம் மேற்கொள்கிறார்கள். ராட்சச ஏர் பலூனில் நான்கு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் மீதமுள்ள ராணுவ வீரர்கள் ஏர் பலூனை பின்தொடர்ந்து தரைவழியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முகாம் இருக்கும் பகுதிக்கும் செல்கிறார்கள். அங்கிருந்து அடுத்த நான்கு பேர் ராட்சச ஏர் பலூனில் பயணம் மேற்கொள்வார்கள். இப்படியாகக் கடந்த மாதம் 6-ம் தேதி ஜம்முவிலிருந்து ஆகாய வழியாகப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆக்ரா, போபால், திருப்பதி வழியாகச் சென்னை வந்த ராணுவ வீரர்கள், சென்னையிலிருந்து காஞ்சிபுரம், குருவிமலைப் பகுதியில் உள்ள விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் அருகில் தரை இறங்கினார்கள்.

திடீரென ராட்சத ஏர் பலூன் ஊருக்குள் வந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமுடன் வானத்தில் வேடிக்கை பார்த்தனர். ராட்சத பலூன் தரை இறங்கியதும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு ராணுவத்தினருடன் கைகுலுக்கி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். காஞ்சிபுரம் பச்சையப்பா ஆண்கள் கல்லூரியில் உள்ள என்.சி.சி முகாமில் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் நாளை காலை பயணத்தைத் தொடங்க உள்ளனர். சென்னை, பெரம்பலூர், திருச்சி ,மதுரை, சிவகாசி திருநெல்வேலி வழியாக டிசம்பர் 29-ம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார்கள்.