Published:Updated:

பாம்பன் பாலத்தில் பலப்படுத்தும் பணிகள் - ஜனவரி 2 வரை ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் ரத்து!

பாம்பன் பாலத்தில் பலப்படுத்தும் பணிகள் - ஜனவரி 2 வரை ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் ரத்து!
பாம்பன் பாலத்தில் பலப்படுத்தும் பணிகள் - ஜனவரி 2 வரை ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் ரத்து!

பாம்பன் ரயில் பாலத்தைப் பலப்படுத்தும் பணிகள் தொடர்வதால் கன்னியாகுமரி, திருப்பதி ரயில்கள் மதுரையுடன் நிறுத்தப்பட உள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில், பாம்பன் கடலின்மீது முதன்முதலாக உருவாக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். 1914-ம் ஆண்டு முதல் ரயில் பயணம் நடந்துவரும் இந்தப் பாலத்தின் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் 'ஷெர்ஷர் ' தூக்குபாலம் ஒன்று திறந்து மூடும் வகையில் உள்ளது. கஜா புயலின்போது, தீவுப் பகுதியில் உள்ள படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் இந்த தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அப்போது, தூக்குப்பாலத்தைத் திறக்க உதவும் இரும்பு வடம் பழுதுபட்டு, உடனடியாகச் சரி செய்யப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தொடர்ந்து நடந்துவந்தது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி தூக்குபாலத்தின் இரு பகுதிகளும் இணையும் இடத்தில் திடீர் என இடைவெளி ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள், இந்த இடைவெளியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஏதுவாக, வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மாலை நேரத்தில் வரும் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. பழுதுநீக்கும் பணிகள் நிறைவடைந்த பின்,  ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் இன்றி மண்டபம் வரை இயக்கப்படும் என்றும், அங்கிருந்து  இரவு 9 மணிக்குமேல் பயணிகளுடன் ரயில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாலத்தில் சோதனை ஓட்டம் செய்தபோது அதிக அதிர்வு காணப்பட்டது. இதையடுத்து அன்றைய தினம் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதைத்  தொடர்ந்து தென்னக ரயில்வேயின் பாலங்கள் பிரிவு பொறியாளர்கள் பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிர்வு ஏற்படாமல் இருக்க ஷெர்ஷர் பாலத்தின் மேற்பகுதிகளில் இரும்புத் தகடுகள் பொறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரும் பாலத்தில் ஏற்பட்ட அதிர்வு குறையவில்லை. இதனால் ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. விரைவு ரயில்களான ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தைப் பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் கன்னியாகுமரி-ராமேஸ்வரம், திருப்பதி-ராமேஸ்வரம் இடையிலான விரைவு ரயில்கள் ஜனவரி 2-ம் தேதி வரை மதுரை வரை மட்டும் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மானாமதுரை - ராமேஸ்வரம் பிரிவில் இயக்கப்படும் பயணிகள் ரயில் அனைத்தும் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்ப சீஸன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காலமான தற்போது ராமேஸ்வரத்துக்கு அதிக அளவிலான பயணிகள் வந்து செல்லும் நிலையில், ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருப்பது பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாம்பன் பாலப் பணிகளை விரைவாக மேற்கொண்டு ரயில் போக்குவரத்தைத் தொடங்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் கோரியுள்ளனர்.