Published:Updated:

பஞ்சு, மிளகு மூட்டைகளுடன் பயணித்த போடி டு மதுரை ரயில்! - நினைவலைகளைப் பகிரும் பயணியர்கள்!

``இந்த ரயில் பாதைத் திட்டத்தை வேகமா முடிச்சுத் தர்றதா உறுதிசொல்லித்தான் ஓட்டு வாங்குறாங்க; ஜெயிச்சிடுறாங்க; பிறகு, வாக்குறுதியைக் காத்துல விட்டுடுறாங்க."

பஞ்சு, மிளகு மூட்டைகளுடன் பயணித்த போடி டு மதுரை ரயில்! - நினைவலைகளைப் பகிரும் பயணியர்கள்!
பஞ்சு, மிளகு மூட்டைகளுடன் பயணித்த போடி டு மதுரை ரயில்! - நினைவலைகளைப் பகிரும் பயணியர்கள்!

8 ஆண்டுகளின் வெறுமை நாள்களைக் கடந்து, தனிமையை மொழிபெயர்த்து உச்சரித்துக்கொண்டிருக்கிறது, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரயில் நிலையம். இந்த நிலையத்துக்கு வயது, 96! 

கேரளத்தின் ஏலம், மிளகு உள்ளிட்ட விளைபொருள்கள் அத்தனையையும் வணிகப்படுத்துவதற்கும், தாங்கள் விரும்பிய காலங்களில் இந்த மலைப்பிரதேசத்தில் வந்து தங்கி ஓய்வெடுத்துச் செல்வதற்கும் ஏதுவாய் 1922-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மீட்டர்கேஜ் பாதையாகத் தொடங்கிவைக்கப்பட்டது, போடி - மதுரை ரயில் பாதை

``தேனி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ஜன்னல்களில் ரசித்துக்கொண்டே பயணிப்பதில் கிடைக்கும் அலாதி சுகத்துக்கு ஈடுயிணையில்லை" என்று போடிநாயக்கனூர்ப் பயணிகள் மெச்சிப் புகழ்ந்து மகிழ்கின்றனர், தங்களின் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே! `சண்டக்கோழி', `பிதாமகன்' உள்ளிட்ட பல திரைப்படங்களின் காட்சிகளில் இடம்பெற்ற இந்த ரயில் பாதையும் ரயில்களும் எப்போதும் நெருக்கம்தான், தேனி மாவட்ட மக்களின் உணர்வோடும் வாழ்வோடும்!

அகலப்பாதை பணிகளுக்காக 88 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2010 டிசம்பர் 31-ம் தேதியோடு, இந்தத் தடத்தில் ரயிலோட்டம் நிறுத்தப்பட்டது. ஒருசில வருடங்களில் தண்டவாளங்களையும் முழுமையாக அப்புறப்படுத்தினர், ரயில்வே துறையினர். அன்றோடு இந்த ரயில் பயணத்துக்குப் பிரியாவிடை கொடுத்த இப்பகுதி மக்களின் வாழ்வில் இன்னும் புதிய பயணத்துக்கான நாள் மட்டும் புலரவே இல்லை.

தேனி மாவட்ட மக்களும் கேரளத்தின் இடுக்கி மாவட்ட மக்களும் பயன்பெற்று வந்த இந்தப் பாதை, இப்போது வெறிச்சோடிக்கிடக்கிறது. இப்பாதை இயக்கமற்றுப் போனதால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழித்தடங்களில் அமைந்துள்ள மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்காணப்படுவது தொடர்கிறது. இதனால், சாலைகளை அகலப்படுத்துவதாய்க் கூறி பழைய மரங்களை வெட்டுவதும் தொடர்கதையாகிறது. மேலும், பேருந்துப் பயணக் கட்டணங்களும் விண்ணைத் தொட்டு உயர்ந்து நிற்கின்றன. பயணக் கட்டணங்களை ஒப்பிடும்போது ரயில் கட்டணங்கள்தாம் எளிய மக்களுக்கானதாய் இருக்கிறது. இதைத்தான் முதன்மைக் காரணமாகச் சொல்கின்றனர், ரயில் சேவையை எதிர்பார்க்கும் இப்பகுதி மக்கள்.

இளமைக்காலத்து ரயில் பயணம் பற்றி மெய்சிலிர்க்கப் பேசுகிறார், போடி ரயில் நிலையப் பகுதியில் வீடுகட்டிக் குடியிருக்கும் விவசாயி, முத்துவீரன். ``1973-ல கால்ரூபாய்க்கு இந்த டிரெயின்ல போயிட்டு வருவேன். இதுலதான் போடிக்குக் `குறுணை’ வந்துசேரும். அதைத்தான் ஆக்கித் தின்போம். பஞ்சு, மிளகு, ஏலக்காய்னு மூட்டை மூட்டையா இங்கிருந்துதான் போகும்” - வயதுமுதிர்ந்த முத்துவீரனின் பேச்சில் பழைய நினைவுகள் கரும்புகை விட்டுக்கொண்டே கிளம்புகின்றன. முத்துவீரனின் மகன் சுந்தரேஸ்வரனிடம் பேசினோம். போடியிலிருந்து தேனிக்கு 2007-ம் ஆண்டில் 3 ரூபாய்க்கு ரயிலில் சென்றதாகச் சொல்லிப் பெருமைப்படுகிற இவர், டிப்ளோமா முடித்துத் தற்போது சென்னையில் வேலைபார்க்கிறார்.

6 பெட்டிகளோடு தினமும் காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் போடியிலிருந்து கிளம்புகிற ரயில் 1.30 மணி நேரத்தில் மதுரையை அடைந்திடுமாம். கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர் எனப் பலரும் நிம்மதியாய்ப் பயணிக்க முடிந்திருந்தது. ஆனால், அந்த சௌகரியத்தை 8 ஆண்டுகளாக இழந்து தவிப்பதாய்ச் சொல்கின்றனர், மக்கள். தேனி மாவட்டத்தின் கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு வழியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சபரிமலை சீசனையொட்டி ஐயப்பப் பக்தர்கள் சந்நிதானத்துக்குச் சென்றுவருகின்றனர். ரயில் ஓடிய நாள்களிலெல்லாம் வாகனநெரிசல் போன்ற சிக்கலின்றி எளிதாகப் போடி வரையிலும் பக்தர்களால் சென்றுவர முடிந்திருந்தது. அந்தக் காலங்களில் போடியிலிருந்து மேல்மருவத்தூருக்குச் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டிருக்கின்றன. 

கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் டெய்லர் ராமர் கூறுகையில், ``கடந்த 10 வருஷமா எதிர்க்கட்சி, ஆளுங்கட்சினு தேனி மாவட்டத்தில யாரு எங்க ஓட்டுக் கேட்க வந்தாலும் இந்த ரயில் பாதைத் திட்டத்தை வேகமா முடிச்சுத் தர்றதா உறுதிசொல்லித்தான் ஓட்டு வாங்குறாங்க; ஜெயிச்சிடுறாங்க; பிறகு, வாக்குறுதியைக் காத்துல விட்டுடுறாங்க. திண்டுக்கல் - பழநி மீட்டர்கேஜ் பாதையும் இந்தப் பாதையும் ஒரே நாள்லதான் நிறுத்தப்பட்டுச்சு. ஆனா, பழநியில வேலை முடிஞ்சு பல வருஷமா ரயில் ஓடிக்கிட்டிருக்கு. ஆனா, இங்கதான் எல்லாம் அப்படியே கெடக்கு” என்று தவிப்பும் ஏக்கமுமாய்ப் பேசுகிறார். இவர், 2009-ம் ஆண்டில் போடியிலிருந்து மதுரைக்கு 21 ரூபாயில் பயணித்திருக்கிறார். இவரது மகன் ஸ்ரீராமதயா பிறந்த காலத்தில் நிறுத்தப்பட்டதாம், இந்த ரயில்சேவை. ஸ்ரீராமதயா இப்போது நெடுநெடுவென வளர்ந்துவிட்டார்!

அந்த நிலையத்தின் காவல் துறை அலுவலகத்தில் இருந்த ஏட்டு முத்துப்பாலிடம் பேசினோம். ``ரயில் ஓடினவரைக்கும் ரயிலில் பாதுகாப்புப் பணிக்குச் சென்றுவருவேன். அதெல்லாம் பசுமையா இன்னும் நெனப்புல இருக்கு. வேலையெல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கணும். அதுலயும் நான் பாதுகாப்புப் பணி பார்க்கணும். இதான் என்னோட ஆசை” என்று எதிர்பார்ப்புகளுடன் நம்மிடம் சொன்னார்.

நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த போடி - மதுரை ரயில் அகலப்பாதைப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ரயில் பாதையில் ஆற்றுப்பாலங்கள், கட்டடங்கள் எனப் பல்வேறு பணிகள் நடக்கின்றன. பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஓரப்பகுதிகளில் ஸ்லீப்பர் கட்டைகள், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்து ஆங்காங்கே தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். தேனி மக்களின் 8 ஆண்டுக்காலக் கனவு மெள்ளமெள்ள நனவாகத் தொடங்கியிருக்கிறது. கூடுமான வரையில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் முழுமையாய்க் கவனம்செலுத்திப் பணிகளைத் துரிதப்படுத்தினால், தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாய் அமையப்போகிற போடி - மதுரை ரயில்சேவை விரைவில் கைகூடும்.

போடிநாயக்கனூர் நிலையத்தின் பெயர்க்கற்களும், கல் இருக்கைகளும், அலுவலகங்களின் ஓட்டுக் கட்டடமும், நடைமேடையின் இரும்புக்கம்பிகளும் மௌனமாய்க் காதுகளில் செப்புகின்றன, எட்டாண்டுக்காலச் சோம்பல் முறித்துச் சுறுசுறுப்பாய் நாளைத் தொடங்கக் கொள்ளை ஆசையென!