Published:Updated:

மாமல்லபுரத்தில் குண்டர்களை நியமித்து கட்டணக் கொள்ளை! - பொதுமக்கள் வேதனை

"ஒரு பஸ்சிற்கு பார்க்கிங் கட்டணத்தோடு சேர்த்து 125 ரூபாய் வாங்க வேண்டும். ஆனால் 250 ரூபாய் கட்டணம் வசூல் செய்தார்கள். பிறகு உள்ளூர் மக்களின் எதிர்ப்புக் கிளம்பவே தற்போது 200 ரூபாய் வசூல் செய்கிறார்கள். வேனுக்கு மினிபஸ் எனக் கூறி 200 ரூபாய், டூ வீலருக்கு 30 ரூபாய் எனக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி குண்டர்களை நியமித்து கட்டாய வசூல் செய்கிறார்கள்."

மாமல்லபுரத்தில் குண்டர்களை நியமித்து கட்டணக் கொள்ளை! - பொதுமக்கள் வேதனை
மாமல்லபுரத்தில் குண்டர்களை நியமித்து கட்டணக் கொள்ளை! - பொதுமக்கள் வேதனை

லகப் பாரம்பர்யச் சின்னங்கள் அடங்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும், இங்குவரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சென்னை இ.சி.ஆர். சாலையில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் புடைப்புச் சிற்பம், குகைவரை சிற்பம், முப்பரிமாணம் கொண்ட தனித்த சிற்பம் என மூன்று வகையிலான 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னமாக 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் வருவதற்குக் காரணம் இதுதான். தொடர் விடுமுறை என்பதால், கடந்த சில தினங்களாக மாமல்லபுரத்துக்கு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுபோல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஜனவரி சீசனில் அதிகமாக வருவார்கள். அவர்களுக்குத் தேவையான குடிநீர், மொபைல் டாய்லெட் போன்ற அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிர்வாகம் செய்யும். ஆனால் தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், அடிப்படை வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரம் வரும் பயணிகள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நுழைவுக் கட்டணமும் சுற்றுலாப் பயணிகளை வேதனையடையச் செய்துள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக மாமல்லபுரத்தில் உள்ள இந்து முன்னணியினர் கண்டன போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.

இதுகுறிந்து இந்து முன்னணி மாவட்டப் பொருளாளர் பாபு, ``உலகப் பாரம்பர்யம் கொண்ட மாமல்லபுரத்துக்குப் பேருந்து நிலையமே கிடையாது. மேல்மருவத்தூருக்கு அதிகளவு வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது மாமல்லபுரத்துக்கும் வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மாமல்லபுரத்துக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்ய 1.75 அளவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பேருந்து ஒன்றுக்கு பார்க்கிங் கட்டணத்தோடு சேர்த்து 125 ரூபாய் வாங்க வேண்டும். ஆனால் 250 ரூபாய் கட்டணம் வசூல் செய்தார்கள். பிறகு, உள்ளூர் மக்களின் எதிர்ப்பு கிளம்பவே, தற்போது 200 ரூபாய் வசூல் செய்கிறார்கள். வேனுக்கும், மினிபஸ் எனக் கூறி 200 ரூபாயும், டூ-வீலருக்கு 30 ரூபாயுமாகக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி, குண்டர்களை நியமித்து கட்டாய வசூல் செய்கிறார்கள். பார்க்கிங் கட்டணம் எனச் சொல்லி வாகனங்களுக்கு ஏற்றார்போல மீண்டும் இன்னொரு முறை வசூல் செய்கிறார்கள்.

அந்த ரசீதுகளிலும் கட்டணம் குறித்த முறையான தகவல் கிடையாது. ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே பார்க்கிங் வசதி உள்ளது. அங்கும் வாகனம் நிறுத்தும் அளவுக்கு இடம் கிடையாது. விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இந்தப் பிரச்னைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ``டோல்கேட் கட்டணங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி செய்வதுபோல இருக்கிறது. மாமல்லபுரம் வருபவர்கள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மாமல்லபுரம் பேரூராட்சி என இரண்டு நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து பார்க்கிங் கட்டணம், நினைவுச் சின்னங்களைப் பார்வையிட தொல்லியல் துறைக்கு நுழைவுக் கட்டணம் என நான்கு இடங்களில் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் ஒருமுறை வாங்கினால் 24 மணிநேரமும் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஒரே வாகனத்துக்குப் பலமுறை வசூல் செய்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இவ்வளவு பணம் வசூல் செய்யும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியாகச் செய்துகொடுக்கப்படவில்லை. பல்வேறு கட்டணங்கள் பகல் கொள்ளையாகச் சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சொர்க்கமாக இருக்க வேண்டிய சுற்றுலாத்தலம் நரகமாகக் காட்சியளிக்கிறது. அதுபோல் மாமல்லபுரத்தில் உள்ள எல்லாச் சாலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஒத்தையடி பாதைபோலக் காட்சியளிக்கிறது.

மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் சுற்றுவட்டாரப் பேரூராட்சிகளிலிருந்து துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டுவந்து மாஸ் கிளீனிங் செய்வார்கள். அதையும் தற்போது செய்வதில்லை. பார்க்கிங் கட்டணம் எனத் தனியாக வசூல் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு உள்ளது. ஆனால், அதையும் மீறி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்கிறார்கள். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். தற்போது நாட்டிய விழா நடைபெறுவதாலும், மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் வருவதாலும் சுற்றுலா களைக்கட்டுகிறது. இந்த நிலையில் மாமல்லபுரத்துக்குச் செயல் அலுவலரும் கிடையாது; சட்டமன்ற உறுப்பினரும் கிடையாது; உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கிடையாது. கண்களுக்கு அழகாய்த் தெரிய வேண்டிய மாமல்லபுரம், அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறது” என்றார் வேதனையாக.

கண்டுகொள்ளுமா அரசு?