Published:Updated:

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்.ஜி.ஆர் பெயரா? - வலுக்கும் எதிர்ப்பு

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்.ஜி.ஆர் பெயரா?  - வலுக்கும் எதிர்ப்பு
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்.ஜி.ஆர் பெயரா? - வலுக்கும் எதிர்ப்பு

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களை அரசியல்வாதிகளின் பெயரில் மாற்ற அரசியல் கட்சியினர் நடவடிக்கை எடுத்துவருவதற்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து ரயில்கள் செல்வதால், லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையங்களைத் தினந்தோறும் பயன்படுத்திவருகின்றனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பர்யம் மிகுந்த கட்டடங்களில் இந்த இரு ரயில் நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ’சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்ய வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 12-ம் தேதி கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். 

இதனிடையே, மத்திய சென்னை எம்.பி-யான எஸ்.ஆர்.விஜயகுமாரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 377-வது சட்ட விதிகளின் கீழ் அவர் விடுத்துள்ள கோரிக்கையில், ’தமிழகத்துக்கு சேவையாற்றிய எங்களுடைய தலைவரான பாரத ரத்னா புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதைப் பரிசீலித்து, எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார். 

ஆனால், பாரம்பர்யம் மிகுந்த சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஸ்டேஷன்களின் பெயரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக, எட்வர்ட் ஜெனி வெளியிட்டுள்ள செய்தியில், ’’தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றம் செய்து அரசியல்வாதிகளின் பெயரை வைக்க அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. 

தற்போதைய ஆளும் கட்சி, அந்தக் கட்சியின் தலைவர் பெயரையும், எதிர்க்கட்சியினர் அவர்களின் தலைவர் பெயரையும் வைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்கள், தங்கள் கட்சித்தலைவரின் பெயரை வைக்க வேண்டுமானால், அவர்கள் கட்சி செலவில் புதிதாக ஒரு ரயில் முனையம் கட்டி, அதற்கு அவர்கள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக்கொள்ளலாமே தவிர, அடுத்தவரின் குழந்தைக்கு பெயர் வைக்க முயற்சிக்கக் கூடாது. 

அதனால், ரயில் பயணிகள் அனைவரும் மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே போர்டு தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு இதைத் தடுக்க மனு அனுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கையுடன், சென்ட்ரல், எழும்பூர் வராமல் அங்கிருந்தே ரயில்கள் இயக்கப்படக்கூடிய தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களை சென்னை தாம்பரம், சென்னை பெரம்பூர் என அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.