Published:Updated:

32 நாள்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்! அதிர்வு குறித்து ஆய்வு

32 நாள்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்! அதிர்வு குறித்து ஆய்வு
32 நாள்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்! அதிர்வு குறித்து ஆய்வு

நாட்டின் முக்கிய ரயில் பாலமான பாம்பன் பாலத்தில் 32 நாள்களுக்குப் பின் இன்று பயணிகள் இல்லா ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது. 

 ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப்பரப்புடன் இணைப்பதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். 1914-ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நடந்து வரும் இந்தப் பாலத்தின் வழியாகக் கப்பல்கள் செல்லும் வகையில் ஹெர்ஷர் தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் இந்தப் பாலத்தின் பெருமைக்குரிய அம்சமாக இதுவரை ரயில் விபத்துகள் நிகழாமல் இருப்பதே ஆகும்.

அதிக அரிமானத் தன்மை கொண்ட பாம்பன் கடல் பகுதியில் கம்பீரமாக காட்சியளித்து வரும் இந்தப் பாலத்தில் இடையே அமைந்துள்ள  ஹெர்ஷர் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி திடீர் விரிசல் ஏற்பட்டது. தூக்கு பாலத்தின் இரும்பு சட்டங்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் சேதமடைந்த நிலையில், பாலத்தில் உள்ள தண்டவாளங்கள் இணையும் பகுதியில் இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அதைச் சரி செய்யும் பணிகள் நடந்தன. ஆனால், பழுது நீக்கிய பின்னரும் ரயில் போக்குவரத்தின்போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திற்கான ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ராமேஸ்வரம் வரும் பயணிகள் மண்டபம் ரயில் நிலையம் வரையே வர முடிந்தது. மண்டபம் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களையும் நிறுத்துவதற்கு போதுமான இட வசதிகள் இல்லை. மேலும், மண்டபம் வந்து செல்லும் ரயில்களைச் சுத்தம் செய்ய, தண்ணீர் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடியாத நிலை உள்ளது. 
இந்த நிலையில், பாம்பன் பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹெர்ஷர் பாலத்தின் மேல் பகுதியில் சுமார் 6.5 டன் எடை கொண்ட இரும்புச் சட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பாம்பன் பாலத்தில் 21 பெட்டிகள் கொண்ட பயணிகள் இல்லா ரயில் 10 கி.மீ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அறிவியல்  மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வு அமைப்பின் பிரிவான கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான பேராசிரியர் சந்தோஷ் கபூரியா, ``தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வை நடத்த குறைந்தபட்சம் 30 நாள்கள் தேவையுள்ளது. இதன்படி தூக்குப் பாலத்தின் ஒரு பகுதியில் அதிர்வுகளைக் கண்காணிக்கும் சென்சார் கருவிகள் பொறுத்தும் பணி முடிந்துள்ளது. மற்றொரு பகுதியிலும் இந்தக் கருவியைப் பொறுத்த உள்ளோம். இந்தக் கருவிகளைக் கொண்டு பாலத்தில் ரயில்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் குறித்து ஆய்வுசெய்து அது குறித்த அறிக்கை தென்னக ரயில்வே துறையிடம் அளிக்கப்படும். இன்று 21 பெட்டிகள் கொண்ட பயணிகள் இல்லா ரயிலைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து முழு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில் ரயில்களை எப்போது இயக்குவது என்பது குறித்து தென்னக ரயில்வே துறையினர் முடிவு செய்வார்கள்'' என்றார்.