Published:Updated:

ராக்கெட் லாஞ்சர், மெஷின் கன், ஹெலிகாப்டர் ரெஸ்க்யூ... கடலோர காவல் படைக்கு ராயல் சல்யூட்!

ராக்கெட் லாஞ்சர், மெஷின் கன், ஹெலிகாப்டர் ரெஸ்க்யூ... கடலோர காவல் படைக்கு ராயல் சல்யூட்!
ராக்கெட் லாஞ்சர், மெஷின் கன், ஹெலிகாப்டர் ரெஸ்க்யூ... கடலோர காவல் படைக்கு ராயல் சல்யூட்!

இந்தியா கடலோர காவல் படைக்கு (இண்டியன் கோஸ்ட் கார்ட்) இது 43-வது ஆண்டு. இதையொட்டி கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களையும் சென்னைத் துறைமுகத்தில், 'கடலில் ஒரு நாள்' என்கிற பெயரில் பொதுமக்களோடு கொண்டாடியது தேசிய கடலோரக் காவல்படை!

கடந்த 1977-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ம் தேதி இந்திய கடலோரக் காவல் படை ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை கடலோரக் காவல்படை தினமாகக் கொண்டாடி வருகின்றனர். 2019-ம் ஆண்டுக்கான கொண்டாட்டத்தின் முன்னோட்டமாகத்தான் 'கடலில் ஒரு நாள்' நிகழ்ச்சி! 

முன்னதாக கடந்த 17-ம் தேதியன்று, மாணவர்களுக்கான வினாடிவினா போட்டியையும் நடத்தியது கடலோரக் காவல்படை. இந்திய தேசத்தின் பாதுகாப்பு மற்றும் போர்க்கப்பல்களின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. வினாடி வினாவில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. கடலோர காவல்படையின் கிழக்குப் பகுதி ஐ.ஜி-யான எஸ் .பரமேஸ்வர் மற்றும் சென்னை கலாஷேத்ரா அமைப்பின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பரிசுக்கான புத்தகங்கள் சுட்டி விகடன் சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. கடலோர காவல் படைக்குச் சொந்தமான எட்டுக் கப்பல்களில், தினமும் பொதுமக்கள் ஏற்றப்பட்டு, நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதுகாப்பு மிகுந்த விஷயம் என்பதால், ஆதார் கார்டுடன் முன்கூட்டியே பதிவு செய்திருந்தவர்களைத்தான் கப்பலில் ஏற்றிச்சென்றனர். தேவையான பாதுகாப்பு சோதனைகளை முடித்தே அனைவரையும் கப்பலில் ஏற்றினர். கப்பலில் ஏறியதுமே, அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

காலை 9 மணி வாக்கில் சாரங், சமுத்ரா பகிரதர், சாகர், வரத், சௌரியா, ராஜ் தரங், சங்கவான் மற்றும் அனாக் என மொத்தம் எட்டுக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட, பார்வையாளர்களுக்கு உற்சாகம் பீறிட்டது. பெரும்பாலானோருக்கு அதுதான் முதல் கப்பல் பயணம் என்பதால், கூடுதல் குஷி. இயக்குநர் அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களையும்கூட குடும்பத்தோடு பார்க்க முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட நடுக்கடலில் நின்றது கப்பல். அது அனைவருக்குமே மகானுபவம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரையே தெரியவில்லை.

பொதுமக்களை இப்படி இந்திய கடலோர காவல் படை கப்பலில் அழைத்துச் செல்வதன் நோக்கம்... அதன் பணிகளைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். இந்திய கடலோரத்தின் பாதுகாப்பில், கடலோர காவல் படை வீரர்கள் எந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கிறார்கள், விழிப்பு உணர்வோடு பணியாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் மக்களுக்கு உணர்த்துவதற்காகவும்தான்.

கடலோரத்தைக் காவல் காப்பதோடு கடலில் வழிதவறியவர்களை மீட்பது, புயலில் சிக்கிய கப்பல்களை மீட்பது, ஆபத்து காலத்தில் உதவி செய்வது போன்ற முக்கியமான பணிகளையும் கடலோர காவல் படை ஏற்றுச் செய்துவருகிறது.

இதையெல்லாம் கடலுக்குள் அந்த வீரர்கள் நேரடியாக செய்து காண்பித்தபோது, எட்டுக் கப்பல்களில் இருந்த பொதுமக்கள் எழுப்பிய கரவொலி, 'இந்தியா... இந்தியா' என்றே ஒலிப்பது போலிருந்தது. 

ஆரம்பத்திலிருந்தே கப்பல்களைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தன கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள். அவை அவ்வப்போது கப்பல்களை நெருங்கி நெருங்கி வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தின. ஒரு கட்டத்தில் அனைத்துக் கப்பல்களும் அடுத்தடுத்து, பக்கம் பக்கமாக வந்து நின்றபோது, அத்தனைக் கப்பல்களில் இருந்தவர்களும் எழுப்பிய உற்சாகக் குரல், கடலைகளையும் மிஞ்சியது. அடுத்த அரை மணி நேரத்தில் பார்த்தால்... அத்தனைக் கப்பல்களுமே ஒரே நேர்கோட்டில் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து வந்தக் காட்சி... ஆகா, அற்புதம்தான்! 

கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பது எப்படி என்பதை நேரடியாக செய்து காண்பித்தபோது திக் திக் என்று இருந்தது. 'மினி மெஷின் கன்’ மற்றும் ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றையும் இயக்கிக் காட்டினார்கள். அவற்றிலிருந்து சீறிக்கிளம்பிய புல்லட்கள்... கடலுக்குள் பாய்ந்து தண்ணீரைக் கிழித்த காட்சி... அற்புதம். நிறைவாக, அணிவகுப்பு மரியாதையுடன் பயணத்தை முடித்தனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கப்பலாக மீண்டும் கரைக்குத் திரும்ப ஆரம்பித்தன. அந்த நேரம், அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தண்ணீரை அன்புடன் வழங்கி, உபசரித்தனர் கடலோர காவல் படை வீரர்கள்.

கப்பல் பயணத்தைவிட, அதில் ஏறியிருந்த மக்களை மிகுந்த அக்கறையோடு கவனித்த கடலோர காவல்படை வீரர்களின் அன்பு அளப்பரியது. கேப்டன், சீனியர் கமான்டன்ட், துணைநிலை காமன்டன்ட் மற்றும் காவல்படை வீரர்கள், கப்பலை இயக்கியவர்கள் என்று அனைவருமே அன்பு பொங்க அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக கேப்டன் மற்றும் கமான்டன்ட்கள் அனைவரும் பொதுமக்களைத் தேடித் தேடி வந்து உணவு கிடைத்ததா, தண்ணீர் கிடைத்ததா என்று உபசரித்ததோடு, ஒவ்வொருவருடைய பாதுகாப்பிலும் அதிக அக்கறை காட்டினர். அதேபோல கப்பல் இயக்கப்படுவது எப்படி, கப்பலிலேயே உணவு தயாரிப்பு எப்படி என்பது பற்றிய பலவிஷயங்களையும் பொதுமக்களிடம் ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

பயணத்தை முடித்துக் கொண்டு இறங்கிய பொதுமக்கள் ஒவ்வொருவரும் இந்திய கடலோர காவல் படைக்கு ராயல் சல்யூட் கொடுத்தபடியே விடைபெற்றனர்!