Published:Updated:

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

சென்னை மெட்ரோ
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மெட்ரோ

மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்

Published:Updated:
சென்னை மெட்ரோ
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மெட்ரோ
பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

சென்னை மெட்ரோ ரயில், தனது சேவையை 2015-ம் ஆண்டு முதற்கொண்டே படிப்படியாக வழங்கி வருகிறது. திட்டத்தின் முதல்கட்டத்தின் கடைசிக் கண்ணி 2019 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதுதான் வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை - டி.எம்.எஸ் அலுவலகம் வரையிலான எட்டுச் சுரங்க நிலையங்கள். இத்துடன் முதல்கட்டம் நிறைவை எட்டுகிறது. சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்டத்தில், இரண்டு தடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முதல் தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக விமான நிலையத்தை அடைகிறது. இரண்டாவது தடம் சென்ட்ரலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, நூறடி சாலை வழியாகப் பரங்கிமலையை அடைகிறது. இரண்டு தடங்களுக்குமாக இப்போது சென்னை நகருக்குள் 45 கி.மீ நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், பல நகரங்களில் கட்டுமானத்தில் இருக்கிறது. இவற்றோடு ஒப்பிடுகையில், சென்னை மெட்ரோவுக்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது... சென்னை மெட்ரோவின் சரிபாதி சுரங்கப் பாதை. மொத்தமுள்ள 32 நிலையங்களில் 20 நிலையங்கள் சுரங்க நிலையங்கள். சுரங்க ரயில் அமைப்பதற்குக் கால தாமதமாகும்; மேம்பாலப் பாதையைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டுமானச் செலவும் அதிகம். மேலும், மேம்பால ரயிலைப்போல வெளிக்காற்றும், வெளிச்சமும் சுரங்க ரயில் நிலையங்களில் சாத்தியமில்லை. ஆகவேதான், இந்தியாவின் பல நகரங்களும், முழுவதுமாகவோ அல்லது அதிகபட்சமாகவோ மேம்பால ரயிலை நாடுகின்றன.

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹைதராபாத், கொச்சி, நொய்டா, குர்கான் முதலான நகரங்களின் மெட்ரோ முழுவதும் மேம்பாலப் பாதையாலானது. பெங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர் நகரங்களில் சுரங்க ரயில் உண்டு. ஆனால், அவற்றின் நீளம் மிகக் குறைவு. மும்பையின் ஏழு தடங்களில் ஒன்றே ஒன்றுதான் சுரங்க ரயில். டெல்லி, கொல்கத்தா மெட்ரோக்களில் கணிசமான சுரங்க ரயில் பாதை உண்டு. எனினும், சென்னை மெட்ரோவைப்போல் பாதிக்கும் அதிகமில்லை. இந்தியாவுக்கு வெளியே பார்த்தால், நிலைமை நேர்மாறானது. லண்டன், நியூயார்க், மாஸ்கோ, பாரிஸ், ஹாங்காங், சிங்கப்பூர், பெய்ஜிங், ஷாங்காய் என்று வளர்ந்த நகரங்கள் அனைத்தும் மெட்ரோ ரயிலைப் பூமிக்குக் கீழேதான் அமைத்திருக்கின்றன. காரணம், நீண்டகாலப் பயன்பாட்டைக் கணக்கிட்டால் சுரங்க ரயிலே சிறந்தது. ஆகவேதான், சென்னை மெட்ரோவும் சுரங்க ரயிலைக் கூடுதலாக நாடியிருக்கிறது.  மெட்ரோ ரயில் போன்ற உள்கட்டுமானப் பணிகள் நூற்றாண்டுக் காலமும் அதற்கு அதிகமாகவும் நீடித்திருக்கும். அதற்கேற்ற விதமாக அவை வடிவமைக்கப்படுகின்றன. தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறுகலான தெருக்களில், மேம்பால ரயிலைக் கட்டினால் வீதியின் பயன்பாடும் அகலமும் குறைந்துபோகும். அதாவது, நூற்றாண்டுக் காலத்துக்குக் குறைந்துபோகும். சாலையின் பழைய அகலத்தை, ஒருகாலத்திலும் மீட்டெடுக்க முடியாது என்று பொருள். அடுத்ததாக, சுரங்க ரயிலால் நெரிசலான சாலைகளில், சாலைக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகளின் கணிசமான பேரைப் பூமிக்குக்கீழ் கடத்திவிட்டு, அதன்மூலம் சாலையின் நெரிசலைக் குறைக்க முடிகிறது. அந்தப் பயணிகள் சாலையின்மேல் பிற வாகனங்களில் பயணித்திருந்தால், உண்டாகக்கூடிய சுற்றுச்சூழல் மாசுக்கு விடைகொடுக்க முடிகிறது.

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

சென்னை போன்ற நெடிய வரலாறு உள்ள நகரங்களில் பாரம்பர்யக் கட்டடங்கள் மிகுந்துள்ளன. அவற்றைப் பாதுகாப்பதும் அவற்றின் தோற்றப் பொலிவுக்குக் குந்தகம் நேராமல் போற்றுவதும் அவசியம். பாரிமுனையில் அமைந்திருக்கும் உயர் நீதிமன்றம் 125 ஆண்டுக்காலப் பழைமைமிக்க பாரம்பர்யச் சிறப்புமிக்கக் கட்டடம். அங்கே சுரங்க ரயில் நிலையம்தான் கட்டப்பட்டிருக்கிறது. மாறாக, நீதிமன்றக் கட்டடத்துக்கு முன்னால் மேம்பால ரயில் கட்டப்பட்டிருந்தால், அது நீதிமன்றக் கட்டடத்தின் பொலிவான தோற்றத்தை மறைத்திருக்கும். அதுபோலவே கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, எழும்பூர் ரயில் நிலையம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி முதலான இடங்களிலும் சுரங்க நிலையங்களே கட்டப் பட்டிருக்கின்றன. நிலையத்துக்குச் செல்லும் வாயில்களும், அவற்றின் தூண்களும் சுவர்களும் கலசங்களும் வளைவுகளும், அருகாமையில் உள்ள பராம்பர்யக் கட்டடங்களுக்கு இசைவான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சுற்றி அணிவகுத்திருக்கும் பராம்பர்யக் கட்டடங்களின் பட்டியல் பெரிது. ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராமசாமி முதலியார் சத்திரம், சித்திக் சிராய் ஆகிய பாரம்பர்யக் கட்டடங்களின் தோற்றத்தை மேலும் அணி செய்யும் விதமாகவே சுரங்க ரயில் நிலையமும் அதன் வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

சென்னை மெட்ரோ முதல்கட்டத்திலேயே நகரின் முக்கியமான பயண முனையங்களை ஒன்றிணைக்கிறது. சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. இவையன்றி வண்ணாரப்பேட்டை, பிராட்வே, சைதாப்பேட்டை, பரங்கிமலை முதலிய பேருந்து நிலையங்களிருந்தும் அருகாமையில் உள்ள மெட்ரோ நிலையங்களுக்குச் செல்ல முடியும். இதைப் போலவே வண்ணாரப்பேட்டை, கோட்டை, மூர் மார்க்கெட், பூங்கா, கிண்டி, பரங்கிமலை ஆகிய புறநகர் ரயில் நிலையங்களுக்கு அருகேதான் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு போக்குவரத்துச் சேவையிலிருந்து பிறிதொரு போக்குவரத்துச் சேவைக்கு மாறுவதற்கு ஏற்ற விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பது சென்னை மெட்ரோவின் சிறப்பு.

வருங்காலங்களில் எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டியும் பேருந்து நிறுத்தங்களும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகைக் கார் நிறுத்தங்களும் அமைக்கப்பட வேண்டும். பிற பொதுப் போக்குவரத்துச் சேவைகளோடு இணைக்கப்படும்போது, மெட்ரோ ரயிலின் பயன்பாடு மிகும்.

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித்தடங்கள் இருக்கும்; மாதவரம் - சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கோயம்பேடு - கலங்கரை விளக்கம் ஆகியவை முறையே தடம்-3, தடம்-4, தடம்-5 என்று அழைக்கப்படும். மூன்று தடங்களுமாகச் சேர்த்து 104 கி.மீ நீளமும் 108 நிலையங்களும் கொண்டதாக இருக்கும். இரண்டாம்கட்டப் பணிகள் இவ்வாண்டு தொடங்கி 2024-ல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இரண்டாம் கட்டத்திலும் கணிசமான பகுதி சுரங்க ரயிலாகவே இருக்கும்.

வளர்ந்த நாடுகள் பலவும் பொதுப் போக்குவரத்தின் பிரதான கண்ணியாக மெட்ரோவையே நம்பியிருக்கின்றன. இதற்குக் காரணம் இருக்கிறது. சாலைப் போக்குவரத்தை ஒப்பிடுகிறபோது பயண நேரம் பாதிக்கும் குறைவு. தாமதங்கள் இராது. நான் ஹாங்காங் போன புதிதில் ஒரு நண்பர், “உங்களைக் காஸ்வேபே மெட்ரோ ரயில் நிலையத்தில் 23 நிமிடங்களில் சந்திக்கிறேன்” என்று சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது. 25 நிமிடம் என்றோ 30 நிமிடம் என்றோ சொல்லவில்லை. 23 நிமிடம் என்று சொன்னார். துல்லியமான நிமிடங்களில் சொன்னபடியே வந்தார். மெட்ரோதான் காரணம். பிற்பாடு, நகரத்தில் பலரும் அப்படித்தான் சொல்வார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஹாங்காங்கில் நேரம் பொன் போன்றது. அதற்கு மெட்ரோ உதவுகிறது. குறிப்பிட்ட காலத்தில் வரும். துரிதமாகச் செல்லும்.

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், மெட்ரோ ரயிலுக்கு ஐந்தில் ஒரு பங்கு எரிபொருளும் மின்சக்தியும் போதுமானவை என்கின்றன ஆய்வுகள். மேலும், மெட்ரோவால் காற்றில் உண்டாகும் மாசு குறைவு. ஒலியால் உண்டாகும் மாசும் குறைவு. அதனால், மெட்ரோ ரயில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுகிறது. மெட்ரோ ரயில் தூய்மையானது, பாதுகாப்பானது. மெட்ரோ ரயிலால்  சாலையில் வாகன நெரிசல் குறையும். சென்னை மெட்ரோவின் இரண்டாம்கட்டம் நிறைவேற்றப்படுகிறபோது நகரின் பல பகுதிகளில் மெட்ரோ ரயிலின் தடங்கள் பதிக்கப்பட்டுவிடும். அந்த நிலையங்கள் பிற போக்குவரத்துச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுவிடும். அப்போதும் சென்னை மெட்ரோவின் பயணம் முடிந்துவிடாது. அது, மூன்றாம்கட்டத்துக்குத் தாவியிருக்கும்.

படங்கள்: வே.நரேஷ்குமார், தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism