Published:Updated:

``போலீஸாரின் லஞ்சத்தால் டிரைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்!" - வெடிக்கும் டிராவல்ஸ் அதிபர்

முக்கிய இடங்களில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்களுக்கு டீ, பிஸ்கட், சோறு என எல்லாமே அங்கிருக்கும் கடையில ஓசியில கிடைக்குது. சம்பளமும் கைநிறைய கொடுக்கறாங்க.

``போலீஸாரின் லஞ்சத்தால் டிரைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்!" - வெடிக்கும் டிராவல்ஸ் அதிபர்
``போலீஸாரின் லஞ்சத்தால் டிரைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்!" - வெடிக்கும் டிராவல்ஸ் அதிபர்

கார் டிரைவர் ஒருவரின் தற்கொலை போக்குவரத்துக் காவல் துறையினரின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்டுள்ளது. `எங்கே போனாலும் லஞ்சம்… என்னால வாழவே முடியல’ என அவர் கதறும் வீடியோவை மனசாட்சி உள்ள ஒவ்வொரு காவல் துறையினரும் பார்க்க வேண்டியது அவசியம்.

சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில், கார் டிரைவர் ராஜேஷ், லஞ்சம் வாங்கும் காவல் துறைக்கு எதிராக வெடித்திருந்தார். `காலியாக இருந்த ரோட்டில் காரை நிறுத்தி இருந்தேன். அந்த காரில் பெண் ஊழியர் ஒருவர் இருந்தார். இன்னோர் ஊழியருக்காகக் காத்திருந்தபோது காவலர் ஒருவர் அசிங்கமாகத் திட்டினார். பெண் கஷ்டமர் இருப்பதாக நான் சொல்லியும் அவர் கேட்காமல் தொடர்ந்து அசிங்கமாகத் திட்டினார். எங்கே போனாலும் போலீஸ்காரர்களால் தொல்லையாக இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு முன்பு திருவொற்றியூரில் காரை நிறுத்தியிருந்தபோது அபராதம் என்று சொல்லி 500 ரூபாய் கேட்டார்கள். அதற்கு பில் கேட்டதும் அசிங்கமாகத் திட்டுகிறார்கள். என் சாவுக்குச் சென்னை போலீஸ்தான் காரணம். என் மரணமே கடைசியாக இருக்கட்டும்.’ என அந்த டிரைவர் தனது மனக்குமுறல்களைக் கொட்டியிருந்தார். டிரைவர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விளக்கம்கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சென்னைக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருவதாகச் சொல்கிறார்கள்.

போக்குவரத்து காவல் துறையினர் எங்கே, எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் எனச் சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் ஒருவர் நம்மிடம் மனம்திறந்து பேசினார். ``20 வருஷமா டிராவல்ஸ் நடத்தி வருகிறோம். ஆன்லைன் டிக்கெட் வந்தபிறகு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்களை வழியில் ஏற்றிச் செல்வோம். வழியில் பேருந்தை நிறுத்தி புதிய பயணிகளுக்காகக் காத்திருக்க மாட்டோம். மதுரைக்குப் போகும் பயணிகளுக்காகக் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியே ஜவஹர்லால் நேரு ரோட்டில் ஐந்து நிமிஷம் நிறுத்துவோம். உடனே போக்குவரத்து ரோந்து வண்டி வந்துவிடும். அடுத்ததா, டூ வீலர்ல சில போக்குவரத்து காவலர்கள் வருவாங்க. அவங்க ஒவ்வொருவருக்கும் 50 ரூபாய் கொடுக்க வேண்டும். கொடுக்கலன்னா வண்டிய எடுக்கச் சொல்லி தொந்தரவு செய்வாங்க. 5  நிமிஷமா இருந்தாலும் 600 ரூபாய் கொடுத்தாத்தான் வண்டியை அங்கே நிறுத்த முடியும்.

அதுபோல பெருங்களத்தூரில் நின்று டிக்கெட் ஏற்றினால் ஒவ்வொரு வண்டியும் 600 ரூபாய் கொடுக்க வேண்டும். 1,000 ரூபாய் மாமூல் கொடுக்கும் பேருந்துகளை மட்டும் அங்கேயே நின்று டிக்கெட் ஏற்றிக்கொள்ள அனுமதிப்பார்கள். பெருங்களத்தூர் பகுதியில் டிராஃபிக் பெட்ரோல் வாகனம் எப்போதும் பேருந்து நிறுத்தத்திலேயே நின்றுகொண்டிருக்கும். அந்த வாகனம் தினமும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிவர வேண்டும். எப்போதாவது பிரச்னை ஏற்படும்போதுதான் அந்த வண்டி வேறு பகுதிக்குச் செல்லும். இதனால் அந்த வண்டிக்கு டீசல் செலவு இல்லை. 50 லிட்டர் டீசல் செலவு சுமார் 3,000 ரூபாய் தனியாக வருமானம் கிடைக்கும். டிராஃபிக் பெட்ரோல் வாகன டிரைவர் மட்டுமே மாதத்துக்கு 1 லட்சம் வரை சம்பாதிப்பார். அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்துகளில் மதுரைக்கு 575 ரூபாய் டிக்கெட். ஆனால் அந்தப் பேருந்தில் ஏறாதவாறு 300, 400 என டிக்கெட்டைக் குறைத்து டிராவல்ஸ் வண்டிகாரங்க ஏற்றிச் செல்வாங்க. அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டிய இடத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள்தான் நிற்கும். இதனால் போக்குவரத்துத் துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதையெல்லாம் யார்தான் ஒழுங்குபடுத்துவது? அதுபோல தாம்பரம் - முடிச்சூர் சிக்னலில் இரவு நேரங்களில் பேருந்துகளை நிறுத்துவாங்க. ஒருநாள் இரவு நிறுத்திவைக்க 800 ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். ஒருநாளைக்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரை அங்கே கூட்டாக வசூல் செய்து பிரிச்சு எடுத்துக்குவாங்க. அவங்களோட வேலை செய்யும் ஆயுதப்படை காவலர்களையும் போக்குவரத்து காவலர்கள் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

தற்கொலை செய்துகொண்ட அந்த டிரைவர் வீடியோவைப் பார்த்ததும் மனசே ஒடிஞ்சுபோச்சு. நல்லா வாழ வேண்டிய வயசுல போலீஸ்காரங்க அந்தத் தம்பியை விபரீத முடிவு எடுக்க வச்சுட்டாங்க. ஒரு டிரைவர் எந்த இடத்துல வண்டிய நிறுத்தினாலும் 50 ரூபாயில இருந்து 500 ரூபாய் வரைக்கும் லஞ்சமா கொடுக்கணும். பணம் கொடுத்தாத்தான் விடுவோம்னு சொல்லி கட்டாயமா வசூல் செய்யறாங்க. பணத்தை வாங்குறவரைக்கும் அந்த டிரைவரை நச்சரித்து எடுப்பாங்க. முக்கிய இடங்களில் வேலை செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு டீ, பிஸ்கட், சோறு என எல்லாமே அங்கிருக்கும் கடையில ஓசியில கிடைக்குது. சம்பளமும் கைநிறைய கொடுக்கறாங்க. குடும்பப் பொழப்புக்காக உயிரைப் பணையம் வச்சு வண்டி ஓட்டும் டிரைவர்களும் மனுஷங்கதானே. லஞ்சப் பணத்துல நீங்க எவ்வளவு சொகுசாக வேண்டுமானாலும் வாழலாம். ஆனா நிம்மதி இருக்காது” என்றார் ஆதங்கத்தோடு.

சென்னைப் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் அருண் இது பற்றிப் பேசுகையில், ``விதிகளை மீறிச் சாலைகளில் நிறுத்தும் சிலர்தான் காவலர்களுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் செய்கிறார்கள். பார்க்கிங் இல்லாத இடத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என விதிகள் இருந்தும் அவற்றை மதிப்பதில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதற்காக இவர்கள், ஒருசிலருக்குப் பணம் கொடுக்கிறார்கள். காசு வாங்குவதும் குற்றம்; காசு கொடுப்பதும் குற்றம். பணம் வாங்குவது யார் என முறையாகப் புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.