Published:Updated:

மோசமான நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரை சாலை -பொதுப்பணித்துறையின் அலட்சியம் என குற்றச்சாட்டு

சாலை பொதுப்பணித்துறையினரால் சரிவர பராமரிக்கப்படாததால் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்துள்ளது. தற்பொழுது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையின் இருபுறமும் கருவே மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது.

மோசமான நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரை சாலை -பொதுப்பணித்துறையின் அலட்சியம் என குற்றச்சாட்டு
மோசமான நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரை சாலை -பொதுப்பணித்துறையின் அலட்சியம் என குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றின் கரை சாலை பொதுப்பணித்துறையினரால் சரிவரப் பராமரிக்கப்படாததால் சாலைப் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்துள்ளது. தற்பொழுது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. 

இந்தச் சாலையில் ஜெயகொண்டப்பட்டினம், பெராம்பட்டு, சின்னகாரமேலு, தீர்த்துக்குடி, கருப்பூர், முள்ளங்குடி, வெள்ளூர்,  கீழப்பருத்திக்குடி, கருப்பேரி, முட்டம், எய்யலூர் உட்படக் 50 கிராமங்கள் அமைந்துள்ளது. கடந்த 2010 -11 -ம் ஆண்டில் வெள்ள மேலாண்மை திட்டத்தில் சிதம்பரம் பொதுப்பணித்துறை சார்பில் கீழ்அணையில் இருந்து சின்னகாரமேடு வரை உள்ள 60 கிமீ கொள்ளிடக்கரை சாலை மத்திய மற்றும் மாநில அரசு நிதியில் ரூ 108 கோடியில் சீரமைக்கப்பட்டது. ஆற்றில் பல இடங்களில் வெள்ள தடுப்பான்கள் கட்டப்பட்டது. பல இடங்களில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. சாலை நன்கு அகலப்படுத்தப்பட்டு தார் சாலையாகப் போடப்பட்டது. இதன் மூலம் கொள்ளிடக்கரை சாலை பலப்படுத்தப்பட்டது.

இதனால் இக்கரையோரம் உள்ள ஜெயங்கொண்டப்பட்டினம், பெராம்பட்டு, சின்னகாரமேடு, கருப்பூர், முள்ளங்குடி, வெள்ளூர், கீழப்பருத்திக்குடி, கருப்பேரி, முட்டம், எய்யலூர் உட்படக் 50 கிராம மக்களின் பொருளாதாரம் உயர வழி வகுத்தது. மேற்கண்ட கிராம மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள். இவர்கள் தங்கள் வயலில் விளைந்த விளை பொருட்களை எளிதில் சிதம்பரம், மற்றும் நாகை மாவட்டம் சீர்காழி போன்ற பெரிய நகரங்களுக்கு எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிந்தது. மேலும் தனியார் மினி பேருந்துகள் சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டபட்டினத்திற்கும், சிதம்பரத்தில் இருந்து வெள்ளூர் கிராமத்திற்கும், மேலப்பருத்திக்குடி கிராமத்திற்கும் இயங்கப்பட்டது. ஒரு அரசு பேருந்தும் இயக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு எளிதில் சென்று வந்தனர். இதனால் கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயர்ந்தது. இந்த சாலை பல்வேறு முக்கிய கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இருந்து வந்தது.

இந்தச் சாலையை பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் சரிவரப் பராமரிக்காததால் போக்குவரத்திற்குப் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. இதனால் மேற்கண்ட 50 கிராம மக்களிளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் சரியாக பேருந்துகள் செல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து நளன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்,  ``சுமார் 50 கிராம மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலை சீர் அமைக்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் சரிவர பராமரிக்காததால் சாலை குண்டும், குழியுமாகப் போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது. அப்படிச் சென்றாலும் செல்லும் வாகனங்கள் பழுது ஏற்பட்டுப் பாதிக்கப்படுகிறது. சாலைச் சீர் கேட்டால் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் வயலில் விளையும் விளை பொருட்களை கூட நகர்ப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாத அவல நிலை உள்ளது.

சாலைச் சரியில்லாததால் தனியார், அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிள், வயதானவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் நிலை பாதிப்பு, பிரசவம் போன்ற அவசரக் காலங்களில் கூட ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட வர முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கிச் செய்து சாலையை மீண்டும் சீரமைத்து தங்கு தடையின்றி போக்குவரத்து நடைபெறும் சாலையாக மாற்ற வேண்டும் என்பதே 50 கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. என்றார்.