Published:Updated:

காஞ்சிபுரத்திலிருந்து சென்ட்ரலுக்கு வட்ட ரயில் பாதை! பயன்பெறும் 3 மாவட்ட மக்கள்

காஞ்சிபுரத்திலிருந்து சென்ட்ரலுக்கு  வட்ட ரயில் பாதை! பயன்பெறும் 3 மாவட்ட மக்கள்
காஞ்சிபுரத்திலிருந்து சென்ட்ரலுக்கு வட்ட ரயில் பாதை! பயன்பெறும் 3 மாவட்ட மக்கள்

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒரே ரயிலில் செல்லும் வகையில் புதிதாக வட்ட ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடசென்னை செல்லும் காஞ்சிபுரம் பயணிகளின் அலைச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்பவர்கள் இந்த ரயிலின் மூலமாகச் சென்னை செல்வது வழக்கம். இந்த நிலையில் காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், சென்னை கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வட்ட ரயில்பாதை அமைக்கும் திட்டம் ஒன்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இந்தத் திட்டத்துக்காக தக்கோலத்திலிருந்து அரக்கோணம் வரை உள்ள ரயில்பாதையை மின் மயமாக்க முடிவு செய்திருந்தனர்.

தக்கோலம்- அரக்கோணம் ரயில் பாதை மின்மயமாக்கினால் ராஜாலி கடற்படை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும் என ராணுவ நிர்வாகம் தெரிவித்தது. மேலும், மாற்றுப் பாதையில் இயக்குவதற்கும் ஆலோசனை தெரிவித்து அதற்கான நிதியும் வழங்கியது ராணுவ நிர்வாகம். இதைத் தொடர்ந்து அரக்கோணத்திலிருந்து தக்கோலத்துக்கு 10 கி.மீ. தொலைவுக்குப் புதிதாக ரயில்பாதை அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் மார்ச் மாதத்திலிருந்து புதிய ரயில் பாதை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் பாதை மூலம் காஞ்சிபுரத்திலிருந்து வட சென்னைக்கும், சென்ட்ரலுக்கும் செல்ல முடியும். இந்தப் புதிய ரயில் திட்டம் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.