Published:Updated:

`ஹம்பியின் வரலாற்றுத்தொன்மை தெரியாது!' - கைதான வட இந்திய இளைஞர்களால் போலீஸ் அதிர்ச்சி

`ஹம்பியின் வரலாற்றுத் தொன்மை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று விசாரணையில் வட இந்திய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

`ஹம்பியின் வரலாற்றுத்தொன்மை  தெரியாது!' - கைதான வட இந்திய இளைஞர்களால் போலீஸ் அதிர்ச்சி
`ஹம்பியின் வரலாற்றுத்தொன்மை தெரியாது!' - கைதான வட இந்திய இளைஞர்களால் போலீஸ் அதிர்ச்சி

விஜயநகரப் பேரரசு காலத்தில் தலைநகரமாக அழகிய ஹம்பி விளங்கியது. சுமார் 41.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்த நகரம், `துங்கபத்திரை' ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளும் காண்போரைப் பிரமிக்கவைப்பவை.

கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது இந்த நகரம் உள்ளது. புகழ்பெற்ற விருபாக்ஷா கோயில், இந்த நகரத்தின் முக்கிய அடையாளம். பழங்காலக் கட்டடக் கலைக்கு இந்த நகரம் புகழ்பெற்றது. யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும்  ஹம்பி அறிவிக்கப்பட்டுள்ளது. `நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, உலகில் காணவேண்டிய இடங்களில் இரண்டாவதாக இந்த இடத்தைப் பட்டியலிட்டிருந்தது. துங்கபத்திரை நதிக்கரையில் சிதைந்துபோய் கிடக்கும் இந்த நகரத்தைக் காணும்போது, விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்த நகரம் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எழாமல்போகாது. மாமன்னர் கிருஷ்ணதேவராயரின் நினைவும் நமக்குள் நிச்சயம் எழும். 

கடந்த வாரம், இணையத்தில் ஒரு வீடியோ பரவியது. அதில், ஹம்பியில் சிதிலமடைந்து கிடக்கும் தூண்களை இளைஞர்கள் கீழே தள்ளி உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாரம்பர்யமிக்க பழம்பெருமைவாய்ந்த இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹம்பி நகரத்தை கர்நாடக மக்கள் பொக்கிஷமாகக் கருதுவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், இத்தகைய பாதகச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்யவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டது. ஹம்பியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

போலீஸார் கடந்த ஒரு வார காலமாக குற்றவாளிகளைத் தேடி வந்தனர். கோயில் தூண்களைத் தள்ளிவிட்டு இடித்த 4 பேர், நேற்று கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ராஜ்பாபு என்பவர், இன்ஜினீயரிங் படித்தவர். பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தினசரி சம்பளத்தில் பணிபுரிபவர். இன்னொருவரான ஆ.ஏ.பாபு, இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கும் மாணவர். மேலும் ஆயுஷ் சாகு, ராஜா ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பீகார் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் தங்கி வேலை செய்துவந்தனர். பெல்லாரியில் நடந்த ரயில்வே போர்டு தேர்வு எழுதச் சென்றபோது, ஹம்பிக்கும்  விசிட் அடித்துள்ளனர். அப்போதுதான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். `இன்ஜினீயரிங் படித்த இவர்கள் விசாரணையில், `ஹம்பியின் வரலாற்றுத்தொன்மை குறித்து தங்களுக்குத் தெரியாது' என்று கூறியிருக்கின்றனர். போலீஸார் இதைக் கேட்டுத் தலையில் அடித்துக்கொண்டனர். 

விஜயநகர சமரக சம்ஸ்கிரிதி சம்ரக்ஷனா சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் மாலகி ``நமது புராதனச் சின்னங்களைக் காக்க வேண்டும் என்ற அக்கறை, இந்தியத் தொல்லியல் துறைக்குத் துளியும் கிடையாது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் பாதுகாப்புக்குக் குறைவான போலீஸ்தான் நிறுத்தப்படுகின்றனர். வருடம்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகிறார்கள். சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன், அச்சுதராய் பஜார் பகுதியில் உள்ள தூண்களை சேதப்படுத்திச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொல்லியல் துறை போலீஸில் புகார்கூடக் கொடுக்கவில்லை'' என்று குற்றம்சாட்டியுள்ளார். 

பெல்லாரி எஸ்.பி அருண் ரங்கராஜன் கூறுகையில், ``ரயில்வே தேர்வு எழுதிய பிறகு ஹம்பிக்கு ஐந்து பேர் சென்றுள்ளனர். மூன்று பேர் தூண்களை இடிக்க, ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இன்னோர் இளைஞருக்கு இவர்கள் செய்த செயல்குறித்து தெரியவில்லை. அந்த இளைஞர் வேறு இடத்தில் இருந்துள்ளார். அதனால் அவரைக் கைதுசெய்யவில்லை. விளையாட்டுத்தனமாக இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்''  எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெருமைமிகு அடையாளங்களின் முக்கியத்துவங்களையும் இளைஞர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்!