Published:Updated:

திற்பரப்பு போனா, குற்றியாறு இரட்டை அருவிக்குப் போகாம வந்துராதிங்க..!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திற்பரப்பு அருவி போன்று மனதை மயக்கும் குற்றியாறு இரட்டை அருவியும் அமைந்துள்ளது. வனத்திற்குள் அமைந்துள்ளதால் அதிகமான மக்கள் கூட்டம் இல்லாமல் அமைதியான சூழலில் ஆர்ப்பரித்து குளியல் போடலாம்.

திற்பரப்பு போனா, குற்றியாறு இரட்டை அருவிக்குப் போகாம வந்துராதிங்க..!
திற்பரப்பு போனா, குற்றியாறு இரட்டை அருவிக்குப் போகாம வந்துராதிங்க..!

ன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில், கோடையில் அருவிகளில் குதூகலத்துடன் குளியல் போடவும், போட்டிங் செல்வதற்கும் ஏற்ற ஏராளமான இடங்கள் உள்ளன. `குமரியின் குற்றாலம்’ என அழைக்கப்படும் திற்பரப்பு அருவி சற்று பிரபலமானது. இங்கு ஆண்டின் அனைத்து நாள்களிலும் தண்ணீர் விழும் விதமாக, அருவிக்கு மேல் பக்கத்தில் தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையில் மாலை நேரத்தில் படகு சவாரி செய்யலாம்.  

திற்பரப்பு அருவி போலவே நம் மனதை மயக்கும் அருவி ஒன்று குமரி மாவட்டத்தின் மலை கிராமத்தில் உள்ளது. வனத்துக்குள் மலை கிராமத்தில் அமைந்துள்ள குற்றியாறு இரட்டை அருவிதான் அது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடும் இயற்கை அருவி குற்றியாறு. மலை ஆற்றில் பாய்ந்துவரும் வெள்ளம் இரண்டாகப் பிரிந்து இரண்டு அருவிகளாகக் கொட்டுகிறது. மழைக்காலங்களில் இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். ஆனால், கோடைக் காலத்தில் குளிர்ந்த நீர் நம் உடலையும், மனதையும் லேசாக்கும்.

நாகர்கோவிலிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது குற்றியாறு. இது மலைவாழ் மக்கள் வசிக்கும் சிறிய வனக் கிராமம். பேச்சிப்பாறை அணையின் ஜீரோ பாயின்ட் பகுதியிலிருந்து 15 கிலோ மீட்டர் வனத்துக்குள் பயணிக்க வேண்டும். காட்டுக்குள் செல்லும்போது ரப்பர் மரங்களும், அன்னாசிப் பழத் தோட்டங்களும் கண்களுக்கு விருந்தளிக்கும். பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், அணைக்குத் தண்ணீர் செல்லும் சிறு கால்வாய்களும் வழிநெடுகத் தென்படும். குற்றியாறு அருவி பாயும் ஆற்றின் கரை வரைதான் வாகனங்கள் செல்லும். அதன்பிறகு சுமார் 100 மீட்டர் தூரம் ஆற்றின் கரையில் நடந்து சென்றால் அருவியைச் சென்றடையலாம்.

ஆர்ப்பரித்துப் பாயும் அருவியைக் கண்டதும் மனதுக்குள் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். பாறைகளுக்கிடையில் குளம் போன்று தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் குளிக்கலாம். வனத்திலிருந்து வரும் தண்ணீர் உச்சி வெயில் நேரத்திலும் அவ்வளவு குளிராக இருக்கும். இரண்டு அருவிகளிலும் மாறி மாறிக் குளித்தால் நேரம் போவதே தெரியாது. ஆண்கள் மட்டும் என்றால் ஒருவர், இருவர் எனச் செல்லலாம். பெண்கள் என்றால் பாதுகாப்பு கருதி குழுவாகச் செல்வது நல்லது. குற்றியாறு மலை கிராம மக்கள் அருவிக்குச் செல்ல உதவிசெய்கிறார்கள். அவர்களுடன் பயணிக்கும்போதும் மலை கிராம மக்களின் வாழ்க்கை முறையை நாம் அறிந்துகொள்ள முடியும். 

குற்றியாறு செல்ல நாகர்கோவில், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது. பெரும்பாலும், பகல் நேரங்களில்தான் பேருந்து வசதி இருக்கும். வனப்பகுதி என்பதால் காலையில் சென்று மாலைக்குள் திரும்பிவிடுவது நல்லது. குற்றியாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவிக்கும் செல்லலாம். மேலும், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் குமரி மாவட்டத்தின் விவசாயத் தேவைக்கெனக் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணையைக் கண்டு ரசிக்கலாம். அத்துடன், காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலே உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். குற்றியாறு இரட்டை அருவி, திற்பரப்பு அருவி, பேச்சிப்பறை அணை, மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகிய இடங்கள் அருகருகே அமைந்திருப்பது ப்ளஸ் பாயின்ட். 

நாகர்கோவிலிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது திற்பரப்பு அருவி. திற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம். இதுபோக ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் சமணர்கள் வாழ்ந்த சிதறால் மலைக் கோயிலுக்கும் சென்றுவரலாம். இங்கு 24 தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் பாறையில் புடைப்பு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாகத் தக்கலை அருகே அமைந்துள்ள பத்மநாபபுரம் சென்று திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையைப் பார்வையிடலாம்.

மன்னர் காலத்தில் மரங்களால் அமைக்கப்பட்டு ஓடு வேய்ந்த அரண்மனை. இங்கு மூலிகைச் சாறுகள் கொண்டு வண்ணமயமாகப் பளிங்குபோன்று வழவழப்பான தரைகள், எந்தப் பகுதியில் திருப்பினாலும் அந்தத் திசையை நோக்கி எரியும் தொங்கும் விளக்கு, மன்னர்களின் கட்டில், தனி அறை, உடைவாள், மன்னர்கால ஆயுதங்கள் என ஒரு நாள் முழுவதும் சுற்றிப்பார்க்கும் அளவுக்குப் பல விஷயங்கள் உள்ளன. பத்மநாபபுரம் அரண்மனைக்குத் திங்கள்கிழமை விடுமுறை என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

கோடைக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் இயற்கையுடன் பயணம் செய்வது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.