Published:Updated:

தூக்குப் பாலத்தின் அதிர்வு கண்காணிப்பு! - 85 நாள்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை

தூக்குப் பாலத்தின் அதிர்வு கண்காணிப்பு! -  85 நாள்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை
தூக்குப் பாலத்தின் அதிர்வு கண்காணிப்பு! - 85 நாள்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை

பாரம்பர்யம் மிக்க பாம்பன் தூக்குப் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, 85 நாள்களுக்குப் பின் ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. பாலத்தின் பராமரிப்புப் பணியை ரயில்வே நிர்வாகமே மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் 1914-ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது, பாம்பன் ரயில் பாலம். இந்த ரயில் பாலத்தின் இடையே கப்பல்கள் செல்ல ஏதுவாகத் திறந்து மூடும் வகையில் ஹெர்ஷர் தூக்குப்பாலம் உள்ளது. நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக இருந்துவந்த  பாம்பன் பாலம், 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கடுமையாகச் சேதமடைந்தது. சேதமடைந்த பாலம் விரைவாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. நூற்றாண்டு பெருமைகொண்ட இந்தப் பாலத்தின் மீது சில நேரங்களில் காற்றின் வேகத்தில் இழுத்துவரப்பட்ட கப்பல் மற்றும் படகுகள் மோதிய சம்பவங்களால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவந்துள்ளது. இதைத் தவிர, அச்சப்படும் நிலையில் இங்கு விபத்துகள் ஏதும் நடந்ததில்லை.

 அதிக உப்புக் காற்று வீசும் தன்மைகொண்ட கடலின்மீது அமைந்துள்ள பாம்பன் பாலத்தை  இயக்குவது மற்றும் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகமே நேரடியாகச் செய்துவந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் தூக்குப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பாலத்தின்மீது பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தகடுகள்  சேதமடைந்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், கப்பல் செல்ல தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. கப்பல் சென்ற பின் தூக்குப் பாலத்தை இயக்கியபோது இரு புறமும் ஒரு சேர இணையவில்லை. இதனால், பாலத்தில் ரயில் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், டிசம்பர் 4-ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தை ரத்துசெய்தனர். இதனால், ராமேஸ்வரத்த்துக்கு ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே பாலங்கள் பிரிவு பொறியாளர்கள் பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். பாலம் சீரமைக்கப்பட்ட பின், அதில் ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு மற்றும் தாங்கும் திறன்குறித்து பல்வேறு குழுக்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கை ரயில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து,  நேற்று நள்ளிரவு முதல் பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. இன்று அதிகாலை, வாரணாசியிலிருந்து வந்த மண்டுவாடி விரைவு ரயில், 85 நாள்களுக்குப் பின் பயணிகளுடன் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து கோவை, திருப்பதி, சேது, சென்னை ஆகிய விரைவு ரயில்கள் அடுத்தடுத்து ராமேஸ்வரத்துக்கு வந்தன. ராமேஸ்வரத்திலிருந்து இன்று காலை மதுரைக்கு பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. ரயில்கள் தூக்குப் பாலத்தைக்க் கடந்து செல்லும்போது ஏற்படும் அதிர்வை ரயில்வே பொறியியல் பணியாளர்கள் படகுகளில் இருந்தபடி கண்காணித்தனர். சுமார் 3 மாத காலமாக தடைபட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால், பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், புதிய பாலம் கட்டப்படும் வரை தற்போதைய பாம்பன் பாலத்தைப் பராமரிக்கும் பணியை ரயில்வே துறையினரே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.