Published:Updated:

வேகம் ஓகே... அறிவிக்கப்பட்ட வசதிகள் இருக்கிறதா? - தேஜஸ் ரயில் பயண அனுபவம்

வேகம் ஓகே... அறிவிக்கப்பட்ட வசதிகள் இருக்கிறதா? - தேஜஸ் ரயில் பயண அனுபவம்
வேகம் ஓகே... அறிவிக்கப்பட்ட வசதிகள் இருக்கிறதா? - தேஜஸ் ரயில் பயண அனுபவம்

இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான தேஜஸ் வருகையை எதிர்பார்த்து திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண் 3-ல் காத்திருந்தேன். கடந்த மாதம் பிப்ரவரி இறுதியில் பிரதமர் மோடி கையால் பச்சைக்கொடி காட்டப்பட்ட ரயில் அல்லவா? சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் சொகுசு ரயில் முழுவதும் ஏஸி செய்யப்பட்டது. விமான பயணிகளுக்கான வசதிகளைப் போன்றே முதல்முறையாக ரயில் பயணிகளுக்கு இந்த ரயிலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சர்வதேச தரத்தில் 22 சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாம்.

சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணிநேரத்தில் சென்றடையும் வகையில் ரயில் ஸபீடாக செல்கிறது. ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய எல்.இ.டி. திரைகள், ஜி.பி.எஸ். வசதி. வைபை நெட்வொர்க்கில் தொடுதிரையில் பொழுதுபோக்கு சேனல்கள், பெட்டியின் உட்புறத்தில் கையை வைத்தால் கதவு திறந்து மூடும் வசதி, அட்டண்டர்களை அழைக்க தலைக்கு மேலே பஸ்ஸர் வசதி. சிசிடிவி. கண்காணிப்புக் கேமராக்கள். பயணிகளின் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள்...என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கேட்டரிங், எலெக்ட்ரிக்கல், டெக்னிக்கல் ஊழியர்கள், சூப்ரவைசர், மேனஜர் என்று சுமார் 50 பேர் பயணிகளுக்கு சர்வீஸ் செய்ய நியமித்திருந்திருக்கிறார்கள்.   

தேஜஸ்...குறித்த நேரத்துக்கு பிளாட்பாரத்துக்குள் நுழைந்தது. அருகில் இருந்த சக பயணி என்னிடம், `ரயில் கதவு திறந்தும், மின்னல்வேகத்தில் உள்ளே ஏறிவிடுங்கள். இல்லாவிட்டால், கதவுகள் தானாக பூட்டிக்கொள்ளும். உங்களால் அதன் பிறகு ஏறவே முடியாது'' என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அவரே தொடர்ந்தார்.. ``போனவாரம் இதே ரயிலில் திருச்சியில் தண்ணீர் பாட்டில் வாங்க ஒரு நபர் இறங்கினார். அவரது குடும்பம் உள்ளே அமர்ந்தது. திடீரென ரயிலில் கதவு சாத்திக்கொண்டது'' என்றார். அடுத்த சில நொடிகளில் ரயில் சீறிப்பாய்ந்து கிளம்பிவிட்டது. பின்னால் வந்த ரயிலில் ஏறி அவர் சென்னை போனார். இதேபோல், சென்னை எக்மோரிலும் ஒரு சம்பவம். ரயிலில் ஆபத்து காலத்தில் இழுக்க வைக்கப்படும் செயின் வசதி இந்த ரயிலில் இல்லை என்பதால்தான் இத்தனை களேபேரமும்' என்றார்.  

ரயிலில் பயணிக்கும்போது, வைஃபை கனெக்ஷன் இருக்கும். அதன் பாஸ்வேர்டை கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று பெரியவர் ஒருவர் அவரின் மகளிடம் அக்கறையுடன் சொல்லிக்கொண்டிருந்தார். ரயில் வந்தது. எனது கோச்சை தேடினேன். அவசரமாக உள்ளே ஏறி எனது இருக்கையில் அமர்ந்தேன். தூங்கலாம் என்று கண் அசந்தேன். தானியங்கி கதவு திறக்கும்போது, வெளியே பாதையில் கேட்டரிங் பணியாளர்கள் சத்தமான குரலில் சந்தைக்கடையைப்போல்  பேசிக்கொண்டிருந்தனர். கதவு திறக்கும்போதெல்லாம்..அவர்களின் பேச்சு சத்தம் உள்ளே கேட்டது. என் தூக்கத்தையும் அது தடுத்தது. மற்றபடி, கேட்டரிங் பணியாளர்கள் அனைவருமே சிரித்த முகத்துடன் பயணிகளின் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார்கள்.  

சுருக்குப் பை போன்ற ஒரு ஜருகைப் பையில் வாடி வதங்கிய நிலையில் சமோசா வந்தது. அதைப் பிரித்துப்பார்க்கவே, பரிதாபகரமாக இருந்தது. சவுத் இண்டியன் வெஜ் அயிட்டங்கள் ஆர்டர் பண்ணியிருந்த பயணிகளுக்கு ஒரு தயிர் டப்பாவும், ஊறுகாய் பாக்கெட்டையும் சேர்த்தே தந்தார்கள், பெரும்பாலான பயணிகள் இவை இரண்டையும் குப்பைக்கு அனுப்பினர். இவை இரண்டும் மெனு அயிட்ட காம்பினேஷனில் ஒத்துவரவில்லை என்றனர். எனது இருக்கைக்கு எதிரே இருந்த எல்.இ.டி. தொடு திரையை தட்டினேன். அது வேலை செய்யவேயில்லை. அருகில் வந்த ரயில்வே பணியாளரிடம் கேட்டேன்.. சில கோச்சுகளைத் தவிர பெரும்பாலான கோச்சுகளில் தொடுதிரை வேலை செய்வதில்லை. வேண்டுமானால் எஸ்.எம்.எஸ்ஸில் புகார் அனுப்புங்களேன் என்றனர். அங்கே வந்த டி.டி.ஆரிடம் சுட்டிக்காட்டினேன். டெக்னிக்கல் பணியாளரை அனுப்பிவைப்பதாக சொல்லிவிட்டுப்போனவர்... வரவேயில்லை. வைஃபை கனெக்ஷன் பாஸ்வேர்டு கேட்டேன்.  யார் சொன்னது? அதெல்லாம் இல்லையே? என்றனர்.

டிபன், மாலை உணவு சாப்பிட்டு முடித்த பயணிகள் வரிசையாக வாஷ்பேஷன் இருக்கும் என்கிற பழைய நினைப்பில் இருக்கையை விட்டு எழுந்து நடந்தனர். வெளியே, வாஷ்பேஷன் வசதி இல்லை.  டாய்லெட்டில்தான் கை கழுவவேண்டுமாம். கோச்சில் மொத்தம் 78 இருக்கைகள். ஒரே நேரத்தில் பலரும் கை கழுவ வந்துவிட்டனர்.  கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள், வயதானவர்கள் கை, முகம் கழுவ... என்று நீண்ட நேர வரிசையில் காத்திருந்தனர். ``ஏன்யா... கோச்சுக்கு ஒரு வாஷ் பேஷன் அமைக்கக்கூடாதா?'' என்று பலரும் குரல் கொடுத்தனர். அதற்கு ரயில்வே ஊழியர்,  அதான்.. ஸ்பூன், டிஸ்யூ பேப்பர் தர்றோம்ல என்றார். அவரிடம் பயணி ஒருவர், ``ஏம்பா.. ஒரேயோரு பிட் பேப்பர் மாதிரி டிஷ்யூ பேப்பரை தர்றீங்க. அதுலேயாவது இரண்டை சேர்த்து தரக்கூடதா? எனறார். பதில் இல்லை!  

சி. 5 கோச்சின் டாய்லெட்டில் அடைப்பு. தண்ணீர் போகவில்லை. கழிவுகள் தேங்கி நின்றன. அதனால், துர்வாடை. பயணிகள் பலரும் இதை அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம் சுட்டிக்காட்டியும் சரிசெய்யப்படவில்லை. இதை கவனித்துவிடடு, என் செல்போனில் டாய்லெட்டை போட்டோ எடுத்தேன். அருகிலேயே, கும்பலாக நின்றிருந்த ஊழியர்கள் ஒடிவந்தனர்.  ஏதோ சுவிட்சை திருகினார்கள். அடுத்த நொடியே... டாய்லெட் சுத்தமானது. இதை நீங்களாகவே செய்யக்கூடாதா? என்று கேட்டேன். பதில் இல்லை.  ரயில் எழும்பூருக்கு வந்துசேர்ந்துவிட்டதாக திரையில் தகவல் காட்டியது. பயணிகள் லக்கேஜை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். ஆனால், அப்போதுதான், ரயில் கோடம்பாக்கத்தை தாண்டிக்கொண்டிருந்தது. அட, எல்.இ.டி. தொடுதிரை கூட தவறான தகவலைத் தருகிறதே? என்று பயணிகள் முணுமுணுத்தனர். 

இப்படி பல கேள்விகளுக்கு பதில்தான் இல்லை!. ரயிலில் இருந்தபடியே, ரயில்வே உயர் அதிகாரி பிரியம்வதா விஸ்வநாதனுக்கு வாட்ஸ்அப்பில் புகார் அனுப்பினேன். மறுநாள் காலை பதில் அனுப்பினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறேன் என்று. ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் வைஃபை கனெக்ஷன் பயணிகளுக்கு இருக்கிறதா... இல்லையா என்று கேட்டேன். விசாரித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு என்னைத் தொடர்புகொண்டார்.  பயணிகளுக்கு வைஃபை கனெக்ஷன் கிடையாது. எல்.இ.டி. திரையில் பொழுதுபோக்கு சேனல்களைப் பார்க்க மட்டுமே வைஃபை பயன்பாட்டில் உள்ளது என்றார். 
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவருவதற்காக, பிரதமர் கையால் தமிழகத்தில் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவசர அவசரமாக தேஜஸ் ரயிலை ஒடவைத்துவிட்டார்கள் போலிருக்கிறது!. அது எதிர்மறையான விளைவைத்தான் வாக்காளர்கள் மத்தியில் உண்டாக்கிவருகிறது. ஒரே ஒரு ப்ளஸ் பாயிண்ட்... குறித்த நேரத்துக்கு முன்னதாகவே, தேஜஸ் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததுதான்! 

அடுத்த கட்டுரைக்கு