Published:Updated:

`நீங்கள் எதுவும் செய்யமாட்டீங்க!'- களத்தில் இறங்கிய போலீஸை தடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்

`நீங்கள் எதுவும் செய்யமாட்டீங்க!'- களத்தில் இறங்கிய போலீஸை தடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்
`நீங்கள் எதுவும் செய்யமாட்டீங்க!'- களத்தில் இறங்கிய போலீஸை தடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்

தொடர்ச்சியாக உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணையை சரி செய்ய முற்பட்ட காவல்துறையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது அணைப்பிள்ளையார் கோயில். அதன் அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் நீர் அருவி போல கொட்டுவதால், அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று குளித்துவிட்டு வருவது வழக்கம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழைபெய்தால், கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் ஏற்படும். அப்போது போடி காவல்துறை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு, அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணையில் குளிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்நிலையில், அடிக்கடி ஏற்படும் காட்டாற்று வெள்ளம் காரணமாக தடுப்பணை அருகே பெரிய பள்ளங்கள் உருவாகி அதில் சகதி நிரம்பி உள்ளது. இதை அறியாத பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கிப் பலியாவது தொடர்ந்துவந்தது. கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 6 பேர் பள்ளத்தில் சிக்கிப் பலியாகியுள்ளனர். தடுப்பணை அருகே உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என போடி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், போடி நகர காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி மூலமாக தடுப்பணை பள்ளங்களில் கற்களை போட்டு சீர் செய்யத் திட்டமிட்டார். இந்தப் பணியில், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் இணைந்தனர்.

நேற்று அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணைக்குச் சென்ற அனைவரும், ஜே.சி.பி உதவியுடன், தடுப்பணைப் பகுதிகளை சீர் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறையின், எஸ்.டி.ஓ கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், ``எங்களிடம் அனுமதி பெறாமல் பணிகளைச் செய்கிறீர்கள். உடனே அனைத்தையும் நிறுத்துங்கள்” என்றார். அதைக் கேட்ட பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ``நீங்கள்தான் எதுவும் செய்யமாட்டேன் என்கிறீர்கள். காவல்துறை முன்வந்து தடுப்பணையை சீர் செய்தால் அது குற்றமா” எனக் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம், எஸ்.பி பாஸ்கரனுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர், காவல்துறை தரப்பில் இருந்து என்.ஓ.சி வாங்க மனு அளிக்கப்பட்டது. பின்னர் பணிகள் நடந்தன. பொதுநலத்தோடு முன் வந்து அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணையை சீர் செய்த காவல்துறையின் இச்செயலை போடி மக்கள் பாராட்டிவருகிறார்கள்.