Published:Updated:

``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி
``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி

``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி

தாமஸ் ஆல்வா எடிசன்போல, பாகிஸ்தானில் ஒருவர் இருக்கிறார். இவரை யாரும் மதித்ததில்லை; எந்த ஊக்கமும் கொடுத்ததில்லை. மனிதர், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். தன் கண்டுபிடிப்புகளை, தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருப்பார். 2012-ம் ஆண்டு நீரில் ஓடும் கார் ஒன்றைக் கண்டுபிடித்தார். `இது கதைக்கு ஆகாது!' என்று விஞ்ஞானிகள், இவரின் கண்டுபிடிப்பை குப்பையில் போட்டனர்.  மனம் தளரவில்லை. `அடுத்து என்ன தயாரிக்கலாம்?' என யோசித்தார். தன் வீட்டிலேயே குட்டி விமானம் ஒன்றையும் சத்தமில்லாமல் உருவாக்கினார்.

``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி

பஞ்சாப் மாகாணம் தபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகமது ஃபயாஸ்தான் அந்த சூப்பர் விஞ்ஞானி. விமானத்தை வீட்டில் உருவாக்கியதோடு, அதைப் பறக்கவைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.  அதற்காகப் பாகிஸ்தான் தினமான மார்ச் 23-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தார். நண்பர்கள் உதவியுடன் ஊரில் உள்ள சாலை, ரன்வே ஆக்கப்பட்டது. விமானத்தில், பைலட் இருக்கையில் முகமது ஃபயாஸ் அமர்ந்தார். விமானம் பறக்கப்போவதைப் பார்க்க 500-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உற்சாகமாகக் கூடி இருந்தனர். மக்களின் கைகளில் பாகிஸ்தான் தேசியக்கொடிகள் தென்பட்டன. `ஐந்து நிமிடத்தில் விமானம் பறக்கும்' என்று, முகமது ஃபயாஸின் நண்பர்கள் மக்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். விமானம் பறக்கும் சத்தம் கேட்கவில்லை... மாறாக, சைரன் சத்தம் கேட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முகமது ஃபயாஸைக் கொத்திக்கொண்டுப்போனார்கள். காரணம், விமானம்  தயாரிக்க  முகமது ஃபயாஸ் எந்த அனுமதியும் வாங்கவில்லை. 

எந்த நாட்டிலுமே அனுமதி இல்லாமல் விமானம் தயாரிப்பது என்பது, சட்டத்தை மீறிய செயல். `நான் அனுமதி கேட்டேன். அதிகாரிகள் தர மறுத்துட்டாங்க' என்று ஃபயாஸ் அப்பாவியாகக்  கத்திக் கதறியும் ஒன்றும் நடக்கவில்லை. கொண்டுபோய் சிறையில் அடைத்தனர். நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. தொடர் தோல்விகள், ஒருநாள் வெற்றியைத் தரும் என்பதுபோல... இப்போது பாகிஸ்தான் நாட்டு ஹீரோ ஆகியிருக்கிறார் ஃபயாஸ். அவரின் பேஷன், அவரை உலக ஊடகங்களிடம் கொண்டுசேர்த்துள்ளது. `எப்படி விமானம் தயாரித்தீர்கள்?' என்று அவரிடத்தில் கார்டியன் முதல் நியூயார்க் டைம்ஸ் வரை பேட்டி கேட்கிறது. 

ஃபயாஸ் கண்டுபிடித்த விமானத்தின் இன்ஜின், ரோட் கட்டர் மெஷினிலிருந்து கழற்றப்பட்டது. றெக்கைகள், மரப்பலகைகளில் இருந்தும்... டயர்கள், சைக்கிள் ரிக்‌ஷாவில் இருந்தும் எடுக்கப்பட்டன. இப்படியாக ஒன்றரை வருடம் உழைத்து விமானத்தை உருவாக்கினார். காலையில் பாப்கார்ன் வியாபாரம், இரவில் வாட்ச்மேன் வேலைபார்த்துச் சேமித்தார். கொஞ்சம் லோனும் வாங்கினார். கிடைக்கும் நேரமெல்லாம் தன் போயிங் விமானத்தை எப்படி சிறப்பாக வடிவமைப்பது என்பதைப் பற்றியே சிந்தனை. `அடேய்... அதைக் கட்டி இழுதுக்கிட்டு இருக்காதே... ஒழுங்கா போய் உருப்படுற வேலையைப் பாரு' என்று ஃபயாஸின் தாயார் சத்தம்போட்டும் பயனில்லை. இத்தனைக்கும் ஃபயாஸுக்கு, தந்தை இல்லை. இவருடைய உழைப்பில்தான் தாயார் சகோதர, சகோதரிகள் அனைவருமே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி

 ஃபயாஸின் மனதில், செய்யும் காரியத்தின் மீது அளவற்ற ஈடுபாடும் உறுதியும் இருந்தன. அவைதான் அவரை ஜெயிக்கவைத்தன.  விமானம் தயாரித்தது குறித்து ஃபயாஸ் கூறுகையில், ``நான் சிறிய வயதில் இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். அப்போது 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நன்றாகப் படித்து பாகிஸ்தான் ஏர்ஃபோர்ஸில் சேர வேண்டும் என்பதுதான் என் ஆசை. தந்தை இறந்ததால், மேற்கொண்டு படிக்க முடியவில்லை. குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இரவு பகலாக உழைத்து அந்த விமானத்தை உருவாக்கினேன். என் உழைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் என்னிடமிருந்து விமானத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். யூடியூபில் விமானம் தயாரிப்பது குறித்துப் பார்த்துப் பார்த்து விமானம் தயாரிக்கும் அறிவை வளர்த்துக்கொண்டேன். 18 மாதங்களாக உழைத்து இந்த விமானத்தைத் தயாரித்தேன். என்னைக் கைதுசெய்து, மோசமான குற்றவாளிகளுடன் அடைத்துவைத்திருந்தனர். நான் தயாரித்த விமானத்தை, என்னிடம் திரும்பத் தர வேண்டும்'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்.

ஒரு முறை டிரையலின்போது, முகமது ஃபயாஸ் தயாரித்த விமானம் 

``என் விமானத்தைத் திரும்பத் தரச் சொல்லுங்க!'' - அப்பாவியாகக் கேட்கும் பாப்கார்ன் வியாபாரி

தரையிலிருந்து இரண்டரை அடி உயரத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக அவரின் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், கைது நடவடிக்கையால் ஃபயாஸுக்கு நன்மையும் விளைந்துள்ளது. முகமது ஃபயாஸிடத்திலேயே விமானத்தை ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. பைலட்டுக்கான லைசென்ஸ் அவருக்கு வழங்கப்பட்ட பிறகு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவரை ஊக்கப்படுத்தும்விதமாக விமானத்தை அவரிடம் வழங்க உள்ளனர். எல்லாவற்றுக்கும்மேலாக பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் முகமது ஃபயாஸ் தயாரித்த விமானத்தைப் பார்வையிட்டு வியப்பு தெரிவித்துள்ளனர். விமானத்தில் சில மாற்றங்கள் செய்தால், இதுவும் சிறந்த தயாரிப்புதான் என  அதிகாரிகள் முகமது ஃபாயஸுக்கு சர்ட்டிஃபிகேட் அளித்துள்ளனர். தற்போது, 32 வயதான முகமது ஃபயாஸுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது. 

வெற்றி பெற தேவையான ஆர்வமும் முனைப்பும் முகமது ஃபயாஸிடம் கொட்டிக்கிடக்கின்றன. விளைவு... வெற்றியை நோக்கிப் பறக்கத் தொடங்கியுள்ளார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு