Published:Updated:

``கைகள் இருந்திருந்தால் பைலட் ஆகியிருப்பது சந்தேகமே!'' - கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்

``கைகள் இருந்திருந்தால் பைலட் ஆகியிருப்பது சந்தேகமே!'' - கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்
``கைகள் இருந்திருந்தால் பைலட் ஆகியிருப்பது சந்தேகமே!'' - கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்

``கைகள் இருந்திருந்தால் பைலட் ஆகியிருப்பது சந்தேகமே!'' - கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்

கைகள் இல்லாதவர்கள் கால்களால் தேர்வு எழுதுவது, கார் ஓட்டுவது, முகத்தை ஷேவ் செய்துகொள்வது பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். சற்று வித்தியாசமாக, கால்களால் விமானம் ஓட்டுவதைப் பற்றிக் கேட்டிருக்கிறோமா அல்லது பார்த்திருக்கிறோமா? இத்தகைய அபார சாதனையைச் செய்துகாட்டியவர்தான் ஜெசிகா காக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கு, இரு கைகளும் கிடையாது.

``நான் பிரசவித்த பிறகு, டாக்டர் என்னை அம்மாவிடம் தூக்கிக்கொண்டு சென்றார். என் அம்மாவிடத்தில் டாக்டர், `உங்கள் குழந்தைக்கு இரு கைகளுமே இல்லை...' என்று சற்று  தயங்கியவாறே சொல்லிருக்கிறார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்ல முடியாத வருத்தம். அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழிந்துள்ளது. இத்தனைக்கும் சுகப்பிரசவத்தில்தான் நான் பிறந்தேன். `எந்தப் பிரச்னையும் இல்லை என்றுதானே சொன்னார்கள்' என்று அம்மா அழ, தந்தை அவரைத் தேற்றியிருக்கிறார். ஆனால், என் பெற்றோர் என்னை வளர்த்த விதம்தான், இன்று பைலட் என்ற கௌரவத்துடன் உங்கள் முன் நிற்க பேருதவியாக இருந்தது'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ஜெசிகாவுக்கு இப்போது வயது 34.

``கைகள் இருந்திருந்தால் பைலட் ஆகியிருப்பது சந்தேகமே!'' - கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பிறந்த ஜெசிகா கோக்ஸை, உடலில் குறையுடைய ஒரு பெண்ணாகவே அவரின் பெற்றோர் பார்க்கவில்லை. பள்ளியில் நடன வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். சிறுவயது ஜெசிகா, டேக்வாண்டோ படித்தாள். நீச்சல்குளத்தில் கால்களால் நீந்தினாள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தாள். தனக்கு கைகள் இல்லை என்ற குறையே ஜெசிகாவிடம் தெரிந்ததில்லை.

சிறுவயதில் ஒருமுறை விமான கண்காட்சியைப் பார்க்கச் சென்ற இடத்தில் அவற்றின் மீது காதல்கொண்டாள். தொடர்ந்து, விதவிதமான விமான கண்காட்சிகளுக்குச் சென்று பார்ப்பதும், அவற்றின் அழகில் லயிப்பதும் ஜெசிகாவின் வழக்கமாயிற்று. ஒருமுறை விமான கண்காட்சிக்குச் சென்றபோது, பைலட் ஒருவர் விமானத்தின் இருக்கையில் ஜெசிகாவை அமரவைத்து, விமானம் ஓட்டுவது எப்படி என்பது குறித்து விளக்கினார். முதன்முறையாக விமான காக்பிட்டில் அமர்ந்த ஜெசிகாவுக்கு, `நம்மால் இதை ஓட்ட முடியும்!' என்ற நம்பிக்கை விதை அப்போதே மனதுக்குள் விழுந்துள்ளது. 

2005-ம் ஆண்டு அரிசோனா பல்கலையில் பட்டம் பெற்ற பிறகு, பைலட் ஆகும் தன் லட்சியத்தில் இறங்கினார். கைகள் இல்லாத அவர், தனக்கு எந்த ரக விமானம் ஓட்டுவதற்குத் தோதாக இருக்கும் எனத் தேடி அலைந்தார். ஸ்போர்ட் ரக விமானமான Ercoupe, ஜெசிகாவுக்கு பொருத்தமானதாகப்பட்டது. அதுபோல், விமானம் ஓட்டக் கற்றுக்கொடுக்க நல்ல பயிற்சியாளர்கள் தேவை. ஜெசிகா போன்றோருக்கு பயிற்சி அளிப்பவர்கள் இன்னும் டெடிகேட்டடாக இருக்க வேண்டும். ஜெசிகாவின் ஆர்வத்தைக் கண்டு அவருக்குப் பல பைலட்கள் முழுமனதுடன் பயிற்சி அளித்தனர். 

``கைகள் இருந்திருந்தால் பைலட் ஆகியிருப்பது சந்தேகமே!'' - கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்

தொடர்ந்து மூன்று ஆண்டுகள், விமானம் ஓட்ட பயிற்சி பெற்றார். 2008-ம் ஆண்டு அவருக்கு பைலட் லைசென்ஸ் வழங்கப்பட்டது. இன்று உலகில் கைகள் இல்லாமல் விமானத்தை இயக்கும் ஒரே பெண் ஜெசிகாதான். அவர் `நீ ஒரு மாற்றுத்திறனாளி!' என்ற கருணையை மட்டுமே வெறுத்தார். எந்த ஓர் இடத்திலும் மாற்றுத்திறனாளி என்ற அட்வான்டேஜை எடுத்துக்கொண்டதில்லை. அதனால்தான் டேக்வாண்டோவில் பிளாக் பெல்ட், மிகச்சிறந்த  ஸ்குபா டைவர், அருமையான பேச்சாளர் என, திறமைகள் ஜெசிகாவிடம் கொட்டிக்கிடக்கின்றன. ஜெசிகா ஒரு டிராவல் லவ்வரும்கூட. உலகின் 20 நாடுகளில் ஜெசிக்காவின் காலடித் தடம் பதிந்துள்ளது. 

விமான பைலட் ஆகியுள்ள ஜெசிகா, ``என் பெற்றோர்தான் என்னுடைய வெற்றிக்குக் காரணம். அவர்கள் மட்டும் என்னைத் தைரியமான பெண்ணாக வளர்க்கவில்லையென்றால், நான் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போயிருப்பேன். இன்றைக்கு விமான பைலட் உலகமே என்னை திரும்பிப் பார்க்கிறது. விமானம் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், முதலில் என்னை வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். ஆலோசனை கேட்கிறார்கள். இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளேன். கைகள் இல்லை, கால்கள் இல்லை என்று முடங்கிவிடக் கூடாது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். அதைச் சரியான வழியில் பயன்படுத்தினால் வெற்றிதான். எனக்கு இரு கைகள் இருந்திருந்தால் என் வாழ்க்கை மாறிப்போயிருக்கும். நான் பைலட் ஆகியிருப்பேனா என்பதும் சந்தேகமே'' என்கிறார்.

நம்பிக்கையும் திறமையும் இருந்தால் வானமே வசப்படும் என்பதற்கு, ஜெசிகா ஓர் உதாரணம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு