Published:Updated:

மீண்டும் தொடங்கும் ரயில் சேவை... எந்தெந்த ரயில்கள் இயங்குகின்றன... டிக்கெட் புக் செய்வது எப்படி?!

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

தற்போது, கொரோனா பாதிப்பால் நாடு முழுக்க ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இதற்கு முன்பு மூன்று முறை ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறித்து உங்களுக்குத் தெரியுமா?

கொரோனா லாக்டெளனால், தற்போது நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் மூன்று முறை ஒட்டுமொத்தமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

‘ஓ! அப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா... எப்போதெல்லாம்?’ என நீங்கள் யோசித்தால், அதற்கான விடை தேட வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டும்.

ரயில் போக்குவரத்து
ரயில் போக்குவரத்து
1901-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி, விக்டோரியா மகாராணியின் இறுதிச்சடங்கின்போது ஒருமுறை. 1948-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி, மகாத்மா காந்தியின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது ஒருமுறை. 1974-ம் ஆண்டு மே மாதம், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சம் ரயில்வே ஊழியர்கள் மூன்று வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருமுறை நாடு முழுக்க ரயில் சேவை முடங்கியது.

இந்த மூன்று நிகழ்வுகளைத் தவிர, இயற்கைச் சீற்றங்களால் சில இடங்களில் மட்டும் ரயில் சேவை சில தினங்களுக்கு பாதிக்கப்பட்டதே தவிர, நாடு முழுக்க ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. காரணம்?

ரயில் நிலையம்
ரயில் நிலையம்
அறுவடை செய்த ராணுவம்.. கொண்டு சேர்த்த ரயில்வே.. கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்! #VikatanExclusive

இந்தியன் ரயில்வேதான், நாட்டிலேயே அதிக பயனாளர்களையும் ஊழியர்களையும் கொண்ட பொதுச் சேவை நிறுவனம். நாட்டில் மலிவான கட்டணத்தில் பயணிக்க உதவும் ஒரே போக்குவரத்து. வழக்கமான நாள்களில், தினமும் 14,000-க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன. இதன்மூலம் தினமும் பல கோடி மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்திவந்தனர். சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளுக்குச் செல்ல உதவும் உள்ளூர் ரயில்கள் (லோக்கல் ரயில்கள்) ஆகட்டும், பலநூறு கிலோ மீட்டர் கடந்து பிற மாநிலங்களுக்குச் செல்வதாகட்டும் ஏழை, நடுத்தர மக்களின் முதல் தேர்வு ரயில்தான். எனவே, தலைவர்கள் மரணம், கலவரம் உள்ளிட்ட பல இக்கட்டான சூழல்களில்கூட ரயில்சேவை நிறுத்தப்படவில்லை. அதன் பிறகு, தற்போது கொரோனா லாக்டெளனில்தான் மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் மாதக்கணக்கில்! இது, வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு.

ரயில்கள், கொரோனா பாதித்த மக்களைத் தனிமைப்படுத்த பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளும் நடந்து முடிந்துள்ளன. ஆனாலும் இதுவரை ரயில்களில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

நாடு முழுதும், அனைத்து ரயில்களும் உரிய ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறைந்த அளவிலான ரயில்கள், கொரோனாவால் பாதித்த மக்களைத் தனிமைப்படுத்த பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளும் நடந்து முடிந்துள்ளன. ஆனாலும் இதுவரை ரயில்களில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல ரயில் நிலையங்களுக்கும் மக்கள் படையெடுக்கின்றனர். அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருப்பதால், அந்த மக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர்.

ரயில்வே டேட்டா
ரயில்வே டேட்டா

இந்த நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம் எப்படி இயங்குகிறது? நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாட்டில் முதல்கட்ட ரயில் சேவை நாளை தொடங்கவுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்புக்கு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? ரயில் சேவையைப் படிப்படியாக அதிகப்படுத்துவது எப்போது? இதுகுறித்தெல்லாம் தெரிந்துகொள்ள, தென்னக ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசனிடம் பேசினோம்.

`சிறப்பு ரயில்; உற்சாகத்தில் 9,000 பேர்!’ -வெளிமாநில நெருக்கடியைச் சமாளிக்கும் வேலூர்

“லாக்டெளன் அறிவிக்கப்பட்ட உடனே, நாடு முழுக்க பயணிகளுக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதேசமயம், 30 சதவிகித அளவில் சரக்கு ரயில்களை மட்டும் இயக்கிவருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், முக்கியமான நகரங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுசெல்ல பார்சல் கார்கோ சரக்கு ரயில்களை இயக்குகிறோம். இவை, வழக்கமான சரக்கு ரயில்களைவிட விரைவாகச் சென்றுவிடும்.

குகநேசன்
குகநேசன்

தற்சமயம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல மட்டும் சிறப்பு ரயில்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த புதன்கிழமை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதற்கு காட்பாடியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பிறகு, ஒடிசா மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப, கடந்த சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆந்திரா, மணிப்பூர் மாநிலங்களுக்கு நேற்றிரவு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இது தவிர, தமிழ்நாட்டிலிருந்து வேறு சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

தென்னக ரயில்வே சார்பில் கேரளா மாநிலத்திலிருந்துதான் அதிக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு ரயில்வே துறை சார்பில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே கணக்கெடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் நிலையங்களுக்கு அழைத்து வருகின்றன. எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தாமாக ரயில் நிலையங்களுக்கு வருவதைத் தவிர்க்கவும்.

ரயில்வே டேட்டா
ரயில்வே டேட்டா
கொரோனா சிகிச்சைக்காக தென்னக ரயில்வேயின் சார்பில், ஒரு ரயிலுக்கு 24 பெட்டிகள் (coach) வீதம் 573 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 16 பேரை தனிமைப்படுத்தலாம். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தாலும், இதுவரை அதற்கான தேவை ஏற்படவில்லை.
குகநேசன், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி, தென்னக ரயில்வே

குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கொரோனா அறிகுறியுள்ள மக்களைத் தனிமைப்படுத்த ரயில்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்தது. அதன்படி, தென்னக ரயில்வேயின் சார்பில், ஒரு ரயிலுக்கு 24 பெட்டிகள் (coach) வீதம் 573 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 16 பேரை தனிமைப்படுத்தலாம். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தாலும், இதுவரை அதற்கான தேவை ஏற்படவில்லை. எனவேதான், இதுவரை ரயில்களில் மக்கள் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை” என்றார்.

`தனிமைப்படுத்தும் அறைகளாகும் ரயில் பெட்டிகள்!’- கொரோனாவை எதிர்கொள்ள தயாராகும் ரயில்வே

பெரும்பாலான ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்டர்கள் உட்பட பல இடங்களில் சமூக இடைவெளிக்கான வட்டங்கள் சில வாரங்களுக்கு முன்பு வரையப்பட்டன. அதனால், ரயில் சேவை தொடங்கப்போகிறது எனப் பலரும் எதிர்பார்த்தனர். மே மூன்றாம் வாரத்தில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சுகள் உலாவிய நிலையில், நாளை முதல் ரயில் சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு நேற்றிரவு அறிவித்தது.

முதல் கட்ட ரயில் சேவை விவரங்கள்
முதல் கட்ட ரயில் சேவை விவரங்கள்

இது குறித்துப் பேசிய குகநேசன், “நாட்டில் இன்னும் ஊரடங்கு நிலை தொடர்கிறது. மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றால்தான், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கே செல்ல முடிகிறது. இந்த நிலையில், ரயில்வே பல மாநில மக்களையும் இணைக்கிறது. அதனால் எங்கள் சேவையில் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

நாளை முதல் பயணிகள் சேவை!
டெல்லியிலிருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இடையே மட்டும் நாளை முதல் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

எனவே, ரயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து எந்த உத்தரவும் அறிவிப்பும் எங்களுக்கு வராத நிலையில், நேற்று இரவு புது அறிவிப்பு கிடைத்தது. அதன்படி தலைநகர் டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நாட்டிலுள்ள முக்கியமான 15 நகரங்களுக்கு இடையே மட்டும் நாளை முதல் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

ரயில்வே டேட்டா
ரயில்வே டேட்டா
ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படாது. ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிமுதல் தொடங்குகிறது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் மக்கள் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படாது. ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதில், வழக்கமான நடைமுறைதான். இதற்கான முன்பதிவு, இன்று மாலை 4 மணிமுதல் தொடங்குகிறது. முன்பதிவு செய்த பயணிகளைத் தவிர வேறு யாரும் ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பயணிகள், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். உரிய மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே பயணிகள் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர, கூடுதலான அறிவிப்புகள் எங்களுக்கு இனிமேல்தான் கிடைக்கும். அதேசமயம், பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க எங்கள் தரப்பில் தயார் நிலையில் இருக்கிறோம்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

வழக்கமாக, அன்றாடம் நாடு முழுக்க பல கோடி மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்திவந்தனர். முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் வருங்காலங்களில் ரயில் சேவையை அதிகப்படுத்தினால், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசும், ரயில்வே துறையும் எங்களுக்கு வழிகாட்டும். அதன்படி நடப்போம்” என்கிறார்.

78,000
தென்னக ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை
ரயில்வே டேட்டா
ரயில்வே டேட்டா

“பயணிகள் சேவை நடைபெறாததால், அனைத்துப் பயணிகள் ரயில்களும் உரிய இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நீண்ட காலத்துக்கு ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதால், தொழில்நுட்ப ரீதியாக எந்த சிக்கலும் ஏற்படாது. ரயில் சேவை தொடங்கவிருக்கும் இரு தினங்களுக்கு முன்புதான் ரயிலின் இயக்க நிலைகளைச் சரிபார்ப்போம். தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதேனும் இருப்பின், அப்போது சரிசெய்யப்படும்.

ஏறக்குறைய 15 லட்சம் ஊழியர்களைக் கொண்ட ரயில்வேயில், கொரோனா லாக்டெளனால் மிகக் குறைவான பணியாளர்களே வேலை செய்துவந்தனர். அரசுப் பணிகளில் 33 சதவிகிதப் பணியாளர்களைக்கொண்டு அத்தியாவசிய வேலைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, தற்போது 33 சதவிகித ஊழியர்கள் மட்டும் பணிக்கு வருகிறார்கள். இனி, படிப்படியாய் அதிக ஊழியர்கள் பணிக்கு வருவார்கள்.

‘தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்
ரயில் போக்குவரத்து
ரயில் போக்குவரத்து

பெரம்பூர், திருச்சியில் தென்னக ரயில்வே-க்கு சொந்தமான தொழிற்கூடங்களில் ரயில்வே ஊழியர்களுக்கான மாஸ்க், ஹேண்ட் சானிடைஸர் தயாரிக்கிறோம். இதற்காக, ஏராளமான ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார் குகநேசன்.

மறக்க முடியாத உங்கள் ரயில் பயண அனுபவங்கள் குறித்து கமென்ட்டில் பதிவு செய்யலாம்.
அடுத்த கட்டுரைக்கு