Published:Updated:

`பேட்டரி தீப்பிடிக்கும், கொண்டுபோகாதீங்க!' - இந்திய விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்புக்குத் தடை

ரஞ்சித் ரூஸோ

`விமானங்களில், ஆப்பிள் நிறுவனத்தின் 15 இன்ச் மேக்புக் புரொ மாடல் லேப்டாப்களைக் கொண்டுசெல்ல வேண்டாம்’ என, இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

விமானம்
விமானம்

ஆப்பிள் நிறுவனம், செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரை விற்பனை செய்த, சில 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப் மாடல்களின் பேட்டரிகள், அதிகமாக வெப்பமடைந்து தீப்பற்ற வாய்ப்புள்ளது எனவும், இதனால் லேப்டாப்பை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுவந்து பேட்டரியை டெஸ்ட் செய்துகொள்ளுங்கள் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பை அடிப்படையாக வைத்து விமான போக்குவரத்து இயக்குநரகம், ' பேட்டரி சூடாகி ஆபத்தை விளைவிக்கும் எனும் காரணத்தால் சில 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட லேப்டாப்களை பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தும் வரை பயணிகள் யாரும் அதை விமானத்தில் கொண்டுசெல்ல வேண்டாம்' என்று ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் மேக்புக்
ஆப்பிள் மேக்புக்

ஜூன் 20-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 தேதிக்குள் தயாரிக்கப்பட்ட ஒரு சில 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப்களில் பேட்டரி அதிக வெப்பம் அடைந்து ஆபத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளோம். லேப்டாப்பின் சீரியல் நம்பரை வைத்துப் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். குறிப்பிட்ட தேதிக்குள் உருவாக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட மாடலைத் தவிர மற்ற லேப்டாப்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வாடிக்கையாளர்கள் இந்தப் பாதிக்கப்பட்ட லேப்டாப்பை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு https://support.apple.com/15-inch-macbook-pro-battery-recall என்ற இணையதள முகவரியில் உங்கள் சீரியல் எண்ணை செக் செய்து, பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் பேட்டரியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ
ஆப்பிள் மேக்புக் ப்ரோ
theverge.in

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான இயக்குநரகங்கள் பாதிக்கப்பட்ட ஆப்பிள் லேப்டாப்களை விமானங்களில் கொண்டுசெல்ல தடைவிதித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் பேட்டரியை மாற்றும்வரை யாரும் பாதிக்கப்பட்ட லேப்டாப்களை விமானத்தில் கொண்டுவர வேண்டாம் என அறிவித்துள்ளது.

இந்தியாவுக்குள் வரும் தாய் மற்றும் கேத்தே பசிஃபிக் விமானங்களும் 15 இன்ச் ஆப்பிள் மேக்புக் புரொ லேப்டாப் எடுத்துவர தடை விதித்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இரண்டிலும் குறிப்பிட்ட தேதியில் உருவாக்கப்பட்ட 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப்கள் மட்டுமே கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால், உங்களுடைய லேப்டாப் பாதிக்கப்படாததாக இருந்தால், நீங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழல் இருந்தால், அருகில் இருக்கும் ஆப்பிள் சர்வீஸ் சென்டருக்குச் சென்று டயக்னாஸ்டிக் ரிப்போர்ட் வாங்கிவிடுங்கள். நீங்கள் லேப்டாப் கொண்டுசெல்வதை யாராலும் தடுக்க முடியாது.