Published:Updated:

சிட்டி பஸ்ல பயணம் செய்ய மனஉறுதியும் சகிப்புத்தன்மையும் வேணும் பாஸ்! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நல்ல ரொமான்ஸ் பாட்டா போட்டாங்கன்னா அது நாம எல்லாரும் கேட்கணுன்றதுக்காக போட்டிருக்காங்கன்னு நெனச்சா அதுதான் இல்ல பாஸ்.

சென்னையைத் தாண்டி மற்ற நகரங்களில் இருக்கும் சிட்டி பஸ் அனுபவங்கள் ரொம்ப அதிகம். சிட்டி பஸ்ல போகும்போது, சில பேரை பார்த்தா ஏன் இப்படி இருக்கறாங்கன்னு யோசிக்கத் தோணும். அப்படி பஸ்ல நடக்குற சம்பவங்களைக் கொஞ்சம் பார்க்கலாம் வாங்க.

Representational Image
Representational Image

பொதுவா பிரைவேட் பஸ்ல வெரைட்டியான பாட்டுங்க பாடிகிட்டு இருக்கும். நல்ல ரொமான்ஸ் பாட்டா போட்டாங்கன்னா அது நாம எல்லாரும் கேட்கணுங்கறதுக்காக போட்டிருக்காங்கன்னு நெனச்சா அதுதான் இல்ல. அது அந்த பஸ் கண்டக்டரோ டிரைவரோ பிளான் பண்ணி போட்டதா இருக்கும். சோகப்பாட்டு ஓடுச்சுன்னா அதுக்கும் தனி காரணம் இருக்கும். இப்போதெல்லாம் பென்-டிரைவ் இருக்குறதால கவர்மென்ட் பஸ்லயும் விதவிதமா பாட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க.

பஸ்ல ஏறும்போது சீட்ல யாராவது உட்கார்ந்து எதுனா சாப்டுட்டு இருந்தாங்கன்னா, அவங்க பக்கத்துல உட்காராதீங்க. ஏன்னா அவங்க சாப்பிட்டு முடிச்சதும் உடனே தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. அது பரவால்லங்க. ஆனா என்னதான் நாம நெளிஞ்சாலும் நம்ம தோள் மேலதான் தூங்குவாங்க. அப்புறம் அவங்களையும் சேர்த்து நாம சுமக்க வேண்டியதுதான்.

சிட்டி பஸ்ல பீக் ஹவர்ஸ்ல ஏறப்போனா ஸ்கூல், காலேஜ் பசங்க படியில தொங்கிகிட்டு நிப்பாங்க. பஸ்ல ரொம்ப கூட்டமா இருக்குன்னு யாராவது நெனச்சா அவங்க ஊருக்கு புதுசுன்னு அர்த்தம். ஏன்னா பஸ்சுக்குள்ள எவ்ளோ இடம் இருந்தாலும் பசங்க படில தொங்கிட்டுதான் வருவாங்க. நாம அவங்கள கொஞ்சம் விலகச்சொல்லி பஸ்சுக்குள்ள போனா உட்காரவே சீட் காலியா இருக்கும்.

Representational Image
Representational Image

பிரைவேட் பஸ்ல எப்பவுமே கல்யாண வீட்டு ஸ்பீக்கர்ல வர்ற சத்தத்தவிட ஹை-டெசிபல்லதான் பாட்டு பாடும். அந்த பஸ்ஸுக்குள்ள இருந்தவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க? கொஞ்சம் நெனச்சுப்பாருங்க.

நாம 10 ரூபா நோட்டைக் கொடுத்து 4 ரூபா டிக்கெட் ஒண்ணு கேட்டா, கண்டக்டர் நம்மள எதோ பக்கத்து நாட்டுல இருந்து வந்த அகதியப் பார்க்குற மாதிரி பார்த்துட்டு `சில்லறை கொடு'ன்னு கேட்பார்.

சில பேரு இருக்காங்க. இவங்க பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்து நிக்கிறதுக்கு முன்னாடியே ஓடிப்போயி நாலு பேர கீழ தள்ளி விட்டுட்டு, அடிச்சு புடிச்சு ஏறி சீட் பிடிப்பாங்க. சரி ரொம்ப தூரம் போறவர் போலன்னு பார்த்தா அடுத்த பஸ் ஸ்டாப்ல இறங்கிடுவாங்க.

Representational Image
Representational Image

பிரைவேட் பஸ்ஸுங்க சில ஸ்டாப்ல பஸ்ஸ நிறுத்தி, வீட்ல இருந்து ஆளுங்க கிளம்பி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி, அப்புறம் மெதுவா, சாவகாசமா பஸ்ஸ எடுப்பாங்க. ஆனா நாம இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துச்சுன்னா, பஸ்ஸ நிறுத்தாம ஸ்லோ பண்ணி `வேகமா எறங்கு' ன்னு சொல்லுவாங்க. ஆளுங்க ஏறி டிக்கெட் வாங்கியாச்சுல்ல, இனி அவங்க எறங்குனா என்ன, கீழே விழுந்தா நமக்கென்ன' ன்ற நெனப்புதான் அவங்களுக்கு..

சில பஸ்ல 2 சைடும் டிவி-ய வச்சிருப்பாங்க. அதை மெய் மறந்து நம்மாளுங்க ரசிச்சு பார்த்துகிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி பஸ்ல நாம கூட்டத்துல மாட்டிக்கிட்டு எல்லாப்பக்கமும் இருந்து வர்ற இடியைத் தாங்க முடியாம நின்னுகிட்டு வரும்போது, ``யோவ் தலையை எடுய்யா!" ``கையை எடுய்யா" ``டிவி-ய மறைக்காதய்யா!" அப்படின்னு பின்னாடி இருந்து சத்தம் வரும். ஹும். என்னமோ வாழ்க்கைல முதல் தடவையா டிவி பார்க்குற மாதிரி கத்துவாங்க.

Representational Image
Representational Image

பிரைவேட் பஸ்ல போணோம்னா, நாம எறங்க வேண்டிய ஸ்டாப்ல வண்டி நிக்காம போகும். நாம கண்டக்டர்கிட்ட என்னதான் கத்திச் சொன்னாலும் அடுத்த ஸ்டாப்ல தான் நிறுத்துவாங்க. காசு கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சுன்னா கண்டக்டர்ஸ், நம்மளை வேற நாட்டு அகதிங்க மாதிரிதான் நடத்துவாங்க.

பஸ்ல குடும்பமா ஏறுனா பரவால்ல. சில சமயம் கல்யாணம், காதுகுத்து விழாவுக்குப் போறவங்க எல்லாரும் பஸ்ல 40, 50 பேர்னு கூட்டமா ஏறி எல்லா சீட்டையும் புடிச்சு வச்சிக்குவாங்க. சீட் போட பை, துண்டுனு எதாவது ஒரு பொருளை உபயோகப்படுத்துவாங்க. எதுவும் கிடைக்கலைன்னா குழந்தையை அப்படியே ஜன்னல் வழியா உள்ள விட்டு சீட் போடுவாங்க. அந்த குரூப்ப தவிர மத்த எல்லாரும் நின்னுட்டே வரவேண்டியதுதான்.

இன்னும் சிலர் இருக்காங்க. பஸ்ல நாம பேப்பர், புக் எதாவது படிச்சிட்டு இருந்தா, பக்கத்துல உட்கார்ந்துகிட்டு நமக்கு எதுவும் தெரியாத அளவுக்கு தலையை நீட்டி எட்டிப் பார்ப்பாங்க.

Representational Image
Representational Image

மொத்தத்துல சிட்டி பஸ்ல பயணம் செய்ய ரொம்ப மனஉறுதியும் சகிப்புத்தன்மையும் வேணும் பாஸ்.

-ருத்ரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு