கொரோனா கால சலுகையாக விடுமுறை பயணச் சலுகைத் திட்டம் (LTC cash voucher scheme) ஒன்றை சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். பயணம் மேற்கொள்ளாமலே வரிச் சலுகை பெற முடியும் என்பது இதன் சிறப்பு. ஆரம்பத்தில், இது மத்திய அரசு ஊழியர்களுக்கான வரிச் சலுகையாக அறிவிக்கப்பட்டது. இப்போது இது தனியார் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எல்.டி.சி சலுகை என்பது நான்கு ஆண்டுகளைக் காலவரம்பாகக் கொண்டது. நான்கு ஆண்டுக் காலகட்டத்துக்குள் இருமுறை குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று, அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலமாக, அந்தத் தொகைக்கான வருமான வரிச்சலுகையைப் பெற முடியும். கடந்த 2018 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான நான்கு ஆண்டுகளில் 2020 & 2021-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்.டி.சி வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருக்கும் ஊழியர்கள், இந்தச் சலுகையைப் பெற முடியும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
தற்போது, கொரோனா பாதிப்பால் சுற்றுலா செல்ல இயலாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பயணம் மேற்கொள்ளாமல் அதற்குப் பதில் குறிப்பிட்ட தொகைக்குப் பொருள்களை வாங்கினால், சேவையைப் பயன்படுத்தினால் நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.
வாங்கும் பொருள்களுக்கு, சேவைகளுக்கான ஜி.எஸ்.டி 12% மற்றும் அதற்குமேல் இருக்க வேண்டும். டிஜிட்டல் முறையில்தான் பணப் பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை நாம் நிறைவேற்றினால்தான் நமக்கு இந்த வரிச் சலுகை கிடைக்கும்!