Published:Updated:

ஒரு கேரவன்... பல பயணங்கள்... புகைப்படங்கள் கிடையாது!

விமலைச் சந்திக்கும் யாரும், ‘கேரவன் எதற்கு’ என்று கேட்கத் தவறுவதில்லை. நானும் கேட்டேன்.

பிரீமியம் ஸ்டோரி
‘சார்லி’ துல்கர் சல்மான், ‘மாறா’ மாதவன், ‘96’ விஜய் சேதுபதியின் கலவையாக இருக்கிறார் விமல் கீதாநந்தன். பயணக் காதலர். நம்மிடம் பேசியபோது விமலின் இருப்பிடம் குண்டூர். பேட்டி வெளியாகும்போது இந்தியாவின் எந்த மூலையிலும் அவர் இருக்கக்கூடும்.

பயணத்துக்கென்றே வடிவமைத்த பிரத்யேக கேரவனில் இந்தியாவைச் சுற்றிக்கொண்டிருக்கும் 26 வயது இளைஞர். மினி ஃப்ரிட்ஜ், ஸ்டவ், சிங்க்குடன் குட்டி கிச்சன், படுக்கை, பீன் பேக் என அவரின் கேரவன் ஒரு மாய உலகம். அதனால்தானோ என்னவோ தன் வாகனத்துக்கும் ‘மாயா’ என்று பெயர் வைத்திருக்கிறார் விமல்.

ஒரு கேரவன்... பல பயணங்கள்... புகைப்படங்கள் கிடையாது!

‘‘நான், அம்மா, தங்கச்சின்னு வீட்ல மூணு பேர். விமல்தான் என் பெயர். அம்மா பெயர் கீதா. ‘நந்தன்’னா மகன்னு அர்த்தம். அப்பா பெயரைத்தான் இனிஷியலா போட்டுக்கணுமா என்ன... நான் என் அம்மா பெயரைச் சேர்த்துக்கிட்டேன்...’’ விமல் பேச ஆரம்பிக்கிறார்.

‘‘ஆந்திராவில் மெக்கானிகல் இன்ஜினீயரிங் படிச்சிட்டிருந்தேன். சூப்பரா படிக்கிறவன்தான். ஆனாலும் மூணாவது வருஷத்துல அது எனக்கான படிப்பில்லைன்னு தோணவே, நிறுத்திட்டேன். இன்ஜினீயரிங்கைத்தான் விட்டேனே தவிர, அந்த நாலு வருஷமும் காலேஜ்லயேதான் வாழ்ந்திருக்கேன். அந்தச் சூழலும் மக்களும் அவ்வளவு பிடிச்சது...’’ என்பவருக்கு அதைவிட அதிகமாகப் பிடித்திருக்கிறது பயணம்.

விமல் கீதாநந்தன்
விமல் கீதாநந்தன்

‘‘எந்த நிமிஷத்துல பயணம் பிடிக்க ஆரம்பிச்சதுன்னு சொல்லத் தெரியலை. நிறைய புத்தகங்கள் படிப்பேன். அப்படிப் படிச்ச பல புத்தகங்களிலும் சுயசரிதைகளிலும் பயணம் இருந்திருக்கு. வெற்றியாளர்கள், புரட்சியாளர்கள்னு எல்லோர் வாழ்க்கையிலும் பயணம் பெரிய பங்கை வகிச்சிருக்கு. பயணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வம் வந்தது, முதல்முதலா போன பெங்களூரு டிரிப், இனிமே என்னால ஓரிடத்துல ரொம்ப காலம் இருக்க முடியாதுன்னு உணர்த்தியது’’ - நாடோடி அவதாரம் எடுத்த நான்கு வருடங்களில் கன்னியாகுமரி முதல் நாகாலாந்துவரை பயணம் செய்து முடித்திருக்கிறார்.

ஒரு கேரவன்... பல பயணங்கள்... புகைப்படங்கள் கிடையாது!

விமலைச் சந்திக்கும் யாரும், ‘கேரவன் எதற்கு’ என்று கேட்கத் தவறுவதில்லை. நானும் கேட்டேன்.

‘‘ஆரம்பத்துல கையில ஒத்தை ரூபாகூட இல்லாமதான் டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். லிஃப்ட் கேட்டே பயணம் பண்ணின நாள்களும் உண்டு. சில வருஷங்களுக்கு முன்னாடி இந்த வேனை வாங்க நினைச்சேன். பயணங்கள்ல நான் சந்திச்ச மனிதர்கள் நிறைய பேர் நிறைய கொடுத்தாங்க. அதையெல்லாம் எப்படித் திருப்பிக் கொடுக்கிறதுன்னு யோசிச்சேன். பல வருஷங்களா ரோடுதான் என் வீடா இருந்திட்டிருக்கு. பயணங்களில் நான் சந்திக்கிற மக்கள் என்கூட உட்கார்ந்து பேசவும், என்னைப் பற்றி எந்த முன்முடிவும் இல்லாம அரட்டையடிக்கவும் இந்த வேன் வசதியா இருக்கும்னு தோணுச்சு. தவிர, நான் போற இடத்துக்கு டிராவல் பண்றவங்க சிலரும் என்கூட வரலாம். ஆசை இருந்ததே தவிர, வேன் வாங்க கையில காசில்லை. அதனால டிராவல் பண்ணும்போது, என் கஸின் நடத்தின ஃபுட் டிரக்ல செஃப் வேலை, பொம்மைகள் விற்கறதுன்னு சின்னச்சின்னதா சில வேலைகள் செய்து காசு சேர்த்தேன். அதையும் மீறிப் பணம் தேவைப்படவே, கிரவுட் ஃபண்டிங்ல உதவி கேட்டேன். அதைவெச்சு இந்த வேனை வாங்கி, லாக்டௌன்ல டிராவல் பண்ணாம இருந்த நாள்கள்ல மாயாவை பக்காவா ரெடி பண்ணினேன்...’’ - மேக்கிங் ஆஃப் மாயா கதை பகிரும் விமலுக்கு இன்றுவரை நிரந்தர வருமானமென்று எதுவும் கிடையாது. ஆனாலும் இவருக்கு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடனேயே விடிகிறது.

ஒரு கேரவன்... பல பயணங்கள்... புகைப்படங்கள் கிடையாது!

“விடிஞ்சா என்ன பண்ணப் போறேன்னு தெரியாம, ஜீரோ பேலன்ஸோட கழிஞ்ச இரவுகள் ஏராளம். ஆனா எப்படியோ, யார் மூலமோ அடுத்த நாள் எனக்கு உதவி தேடி வரும். நான் யார், எங்கேருந்து வர்றேன்னே தெரியாம இன்றுவரைக்கும் அன்பும் உதவிகளும் தேடி வந்திட்டிருக்கு. என் போன் வேலை செய்யலைன்னு தெரிஞ்சு ஒரு ஃபாரினர் எனக்கு மொபைல் கிஃப்ட் பண்ணினாரு. கேரவன் வாங்கறதுக்கு முன்னாடி, ஒரு பயணத்துல எனக்கு தங்க இடம் கொடுத்தது மட்டுமல்லாம, என்னைக் கட்டில், மெத்தையில படுக்கச் சொல்லிட்டு, மத்த எல்லாரும் தரையில படுத்துத் தூங்கினாங்க. எத்தனை மனிதர்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்.... இந்த மேஜிக்கெல்லாம் எப்படி நடக்குதுங்கிறது இன்னிவரைக்கும் எனக்குப் பெரிய ஆச்சர்யம்தான்...’’ - நம்மையும் ஆச்சர்யப்படுத்துபவர், பயணங்களுக்கிடையில் கன்டென்ட் ரைட்டராக வேலை பார்த்துக் கொஞ்சம் சம்பாதிக்கிறார்.

ஒரு கேரவன்... பல பயணங்கள்... புகைப்படங்கள் கிடையாது!

‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு மட்டும் விமலிடம் எப்போதும் பதில் இருக்காது.

ஒரு கேரவன்... பல பயணங்கள்... புகைப்படங்கள் கிடையாது!

‘‘இப்போ குண்டூர்ல இருக்கேன். இங்கிருந்து எங்கே போவேன், எப்போ போவேன்னு கேட்டீங்கன்னா என்கிட்ட பதில் இருக்காது. தோணும்வரை இருப்பேன். மனசு கிளம்பச் சொன்னா, சொல்ற இடத்துக்குக் கிளம்பிடுவேன் ஊரின் அழகையோ, வசதிகளையோ வெச்சு என் பயணங்களைத் தீர்மானிக்கிறதில்லை. அங்கே வசிக்கிற மனுஷங்கதான் அதைத் தீர்மானிக்கிறாங்க.

போட்டோஸ், வீடியோஸ் எடுக்கிறது, சோஷியல் மீடியாவில் இன்ஃப்ளூயென்ஸரா இருக்கிறதெல்லாம் எனக்கு சரிவராத விஷயங்கள். கேமராவில் பார்க்கிறதைவிடவும் என் கண்களால காட்சிகளைப் பார்க்கிறதும், மனிதர்களைப் பேசவிட்டு அவங்க கதைகளைக் கேட்கறதும்தான் எனக்கு சந்தோஷம்...’’ பரவசப்படுகிற தேசாந்திரியின் கடந்த காலம், நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பயணங்களே ஆக்கிரமித்திருக்கின்றன.

‘‘டிராவல்னா ஓரிடத்துலேருந்து இன்னோர் இடத்துக்குப் போறது மட்டுமல்ல... என்னைப் பொறுத்தவரை பயணம் என்பது ஒரு சுதந்திரம். எதை வேணா செய்ய முடிகிற சுதந்திரம். சின்ன வயசுலேருந்து ‘இப்படித்தான் பேசணும், இவங்ககூடதான் பேசணும்’னு நிறைய கற்பிதங்களோடு வளர்ந்திருப்போம். பயணம் செய்யறபோது அந்தக் கற்பிதங்கள்ல ‘எது சரி, எது தப்பு’ங்கிற தெளிவு கிடைக்குது. சந்திக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விஷயத்தைக் கத்துக்கொடுத்துட்டுக் கடந்து போறாங்க... அந்தப் பாடங்கள் என்னிக்குமே அலுக்கிறதில்லை...’’ மாணவராகச் சொல்பவருக்கு, மாயாவுடன் உலகம் சுற்றி வருவது ஒன்றே இலக்கு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு