சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வைத்துச் செல்கின்றனர். கோடை சீசனில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகிய துறைகளின் மூலம் கோடை விழா நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகக் கோடை விழா நடத்தப்படவில்லை. 2 ஆண்டுகளில் பலமுறை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்பட்டது. மே மாதத்தில்தான் கோடை விழா தொடங்கும் என்றாலும், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே பயணிகள் கூட்டம் அலை மோதியதால் முன்கூட்டியே கோடை சீசன் களைகட்டத் தொடங்கியது. மே மாதம் 7-ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது நீலகிரி கோடை விழா. அடுத்தடுத்து பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றன. கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 124 வது ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவுடன் கோடை விழா இனிதே நிறைவுப் பெற்றது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 7 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுற்றுலா பயணிகளின் வருகை குறித்து நம்மிடம் பேசிய பூங்கா நிர்வாகத்தினர், " ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவிகிதத்தினர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்துச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, கோடை சீசனில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டைப் பொறுத்தவரை, ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 643 சுற்றுலா பயணிகள், மே மாதத்தில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 325 சுற்றுலா பயணிகள் என கடந்த 2 மாதத்தில் மட்டும் மொத்தம் 7 லட்சத்து 32 ஆயிரத்து 465 சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவைக் கண்டு ரசித்துச் சென்றுள்ளனர்.

நீலகிரிக்கு சுமார் 10 லட்சம் பயணிகள் வந்து சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 3 லட்சம் பயணிகள் குறைவு என்றாலும், கொரோனா அச்சம், மழை போன்றவை இருந்தும் இந்த அளவிற்கு பயணிகள் வருகைத் தந்திருப்பது பெரிய விஷயம். ஜூன் மாதம் இரண்டாவது வாரம் வரை பயணிகள் கூட்டம் இருக்கும் என எதிர் பார்க்கிறோம்" என்றனர்.