Published:Updated:

`6 நாடுகள்; ரூ.2.66 லட்சம் வாடகை; நீராவி இன்ஜின்!'- 20 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்திய மலை ரயில்

6 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ரூ.2.66 லட்சத்துக்கு தனியாக நீராவி மலை ரயிலைப் பதிவு செய்து குன்னூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர்.

Nilgiri mountain train
Nilgiri mountain train

நீலகிரி மலையில் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது மலை ரயில். யுனெஸ்கோ பாரம்பர்ய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணித்து மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் வனங்களையும் கண்டுரசிப்பது அலாதியானது. ஆசியாவிலேயே பல்சக்கர தண்டவாளத்தில் இயக்கப்படும் இந்த மலை ரயிலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

Nilgiri mountain train
Nilgiri mountain train

பாலங்கள், சுரங்கங்கள், வளைவுகளைக் கடந்து வனத்தின் ஊடாக பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணிக்கவே பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஏராளம். குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிக்கும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு 46 கி.மீ தூரத்துக்கு நீராவி மூலம் இயங்கும் ரயிலை 2.66 லட்ச ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளனர் வெளிநாட்டுப் பயணிகள். ஆனால், மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மலை ரயிலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் குன்னூரிலிருந்து ஊட்டி வரை 19 கி.மீ தூரம் நீராவி மூலம் இயங்கும் பாரம்பர்ய பழைமையான இன்ஜின் இயக்கப்பட்டது.

Nilgiri mountain train
Nilgiri mountain train

20 ஆண்டுகளுக்குப்பின் ஊட்டிக்கு நீராவி மூலம் இயக்கப்பட்ட ரயிலில் இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 71 சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

பயணம் குறித்துப் பேசிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ``இந்தியாவின் பாரம்பர்யம் மற்றும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட்டு வந்தோம். தற்போது குன்னூரில் பழைமை வாய்ந்த பாரம்பர்ய மலை ரயிலில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது" என்றனர்.

Nilgiri mountain train& tourists
Nilgiri mountain train& tourists

20 ஆண்டுக்குப்பின் ஊட்டிக்கு நீராவி மூலம் மலை ரயில் இயக்கப்பட்டது குறித்து மலை ரத அறக்கட்டளையைச் சேர்ந்த நடராஜ் கூறுகையில்,

``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டி குன்னூர் இடையே டீசல் இன்ஜின் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நீராவி மூலம் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இனிவரும் காலங்களிலும் நீராவி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை பயணிக்கவே இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் குழுவினர் கட்டணம் செலுத்தியுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஊட்டி குன்னூர் இடையே மட்டும் இயக்கப்பட்டது. எனவே, கட்டணத் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்து அவர்களே முடிவு செய்வார்கள்" என்றார்.