Published:Updated:

`10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் கமிஷன்?'- ஓலா, ஊபருக்கு மத்திய அரசு கடிவாளம்!

கால் டாக்ஸி நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுக்கு கட்டுபடியாகவில்லை என்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூறிவந்தனர்.

ஓலா, ஊபர் நிறுவனங்கள்
ஓலா, ஊபர் நிறுவனங்கள் ( vikatan )

ஓலா, ஊபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்கள், வாடகைக் கட்டணத்திலிருந்து வசூலிக்கும் கமிஷன் தொகையை 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. கால் டாக்சி தொழிலில் தற்போது, ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. முழுக்கமுழுக்க ஆன்லைன் மூலமாக வாடகைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதால், பேரம் பேசும் பிரச்னை இல்லை. மேலும், அதிக கார்களுடன் சேவை வழங்குவதால், இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் பெருகிவருகிறார்கள்.

ஓலா, ஊபர் நிறுவனங்கள்
ஓலா, ஊபர் நிறுவனங்கள்
vikatan

சொந்தமாக கார் வைத்துள்ள ஓட்டுநர்கள் பலரும் சுயமாக கால் டாக்சி தொழிலை நடத்த முடியாமல், வேறுவழியின்றி இவர்களின் நெட்வொர்க்கில் இணைந்துவிடுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் கட்டணத் தொகையிலிருந்து, 27 சதவிகிதம் வரை கமிஷனாக அந்த நிறுவனங்கள் வசூலித்துவந்தன. பின்னர் அந்த கமிஷன், 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, தற்போது 20 சதவிகிதமாக உள்ளது.

கால் டாக்ஸி நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுக்கு கட்டுபடியாகவில்லை என்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சுமத்திவந்தனர். அந்த கமிஷன் தொகையை குறைக்கக் கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர்.

ஓலா, ஊபர் நிறுவனங்கள்
ஓலா, ஊபர் நிறுவனங்கள்
vikatan

இந்த நிலையில், கால் டாக்ஸி நிறுவனங்களுக்கான கமிஷன் தொகைக்கு 10 சதவிகிதம் என வரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, அதன்மீது பொதுமக்களின் கருத்துக்கேட்ட பின்னர் நிறைவேற்றப்படும் என்று சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால் டாக்ஸி நிறுவனங்களின் அடிப்படைக் கட்டணத்துக்கும் வரம்பு நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவையனைத்தும் இறுதிசெய்யப்பட்டு, ஆண்டு இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.