Election bannerElection banner
Published:Updated:

FASTag பயன்பாட்டில் குளறுபடி; கொதிக்கும் வாகன ஓட்டிகள்... பிரச்னை என்ன?

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி

‘‘ஃபாஸ்டேகில் உள்ள குளறுபடி, கோளாறுகளை முதலில் சரிசெய்யுங்கள். அதுவரை, இருமடங்குக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துங்கள்’’ என்று கொதிக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

சுங்கச்சாவடிகளில், சாதாரண வாகன ஓட்டிகளும் வி.ஐ.பி-களைப் போல் பறந்துசெல்ல, ‘ஃபாஸ்டேக்’ நடைமுறை 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்மூலம், எந்தவொரு சுங்கக் கட்டணமும் பணப் பரிவர்த்தனையாக ஏற்கப்படாது. டிஜிட்டல் நடைமுறை கையாளப்படுவதால், நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வருடம் ஜனவரி தொடக்கத்தில், நாடு முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்
ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்

இந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், இந்த மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அதிரடி காட்டியிருக்கிறது. அதன்படி, ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை விதிகள் 2008-ன் படி இருமடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி டேகுகள் எனச் சொல்லக்கூடிய வில்லை அல்லது ஸ்டிக்கரைப் பெற்று வாகனத்தின் முன்பு ஒட்டிக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது, மின்னணுக் கருவி மூலம் தானியங்கி முறையில் வாகனத்துக்குரிய கட்டணம் கழித்துக்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதிலும், பின்பற்றுவதிலும் கோளாறுகளும் குளறுபடிகளும் அதிகம் இருக்கின்றன. ஃபாஸ்டேக் பெறாத வாகன ஓட்டிகள் இருமடங்குக் கட்டணம் செலுத்த மறுத்தால், காவல்துறையினர் மூலம் அதட்டுகிறார்கள் சுங்கச்சாவடிப் பணியாளர்கள். இதற்காக அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஃபாஸ்டேக் செயல்பாடுகளைக் கண்டறிய வேலூரை அடுத்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ‘விகடன்’ நிருபர் குழு முகாமிட்டது.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி
ரொக்கமாகப் பணம் செலுத்தி கடந்துசெல்ல எவ்வளவு நேரம் ஆனதோ... ஃபாஸ்டேக் பயன்பாட்டுக்குப் பின்னரும் அதே நேரம்தான் ஆகிறது. வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை மின்னணுக் கருவி ஸ்கேன் செய்து கட்டணத்தைக் கழித்துக்கொள்வதில் நேரம் எடுத்துக்கொள்கிறது. ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் விற்பனையிலும் முறைகேடு காணப்படுகிறது. சுங்கச்சாவடிக்கு முன்னும் பின்னும் ஏஜன்டுகள் டென்ட் அமைத்து அமர்ந்திருக்கிறார்கள்.

வங்கிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் பயன்பாட்டாளராக மாற வேண்டுமெனில், தொடக்கக் கட்டணமாக 100 ரூபாய் பணமாகக் கொடுக்க வேண்டும். பேடிஎம் என்றால் 150 ரூபாய் செலுத்தித் தொடங்கிக்கொள்ளலாம். அதேபோல், NHAI, IHMCL என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கிற ஃபாஸ்டேக் பெற வேண்டுமெனில் 300 ரூபாய் கட்டணமாகப் பெறப்படுகிறது. ஃபாஸ்டேக் பயன்பாட்டாளர்களாக மாறிய பின்னரும் பணப் பரிவர்த்தனையில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.

ஃபாஸ்டேக் ஏஜன்சி - வேலூர்
ஃபாஸ்டேக் ஏஜன்சி - வேலூர்

நம்மிடம் பேசிய வாகன ஓட்டிகள் சிலர், ‘‘மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை நேரடியாக வழங்குவதை விடுத்து சப் ஏஜன்சி மூலம் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதால் தொடக்கக் கட்டணத்தை ஏஜன்டுகள் அதிகமாக வசூலிக்கிறார்கள். வாகன ஓட்டிகளுக்குத்தான் இது நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எல்லோரும் பிரீமியம் லக்ஸரி காரைப் பயன்படுத்துவதில்லை. தினக்கூலிக்கு சரக்கு வாகனங்களையும், வாடகைக் கார்களையும் இயக்கும் சாதாரண வாகன ஓட்டிகளுக்கு ஃபாஸ்டேக் பற்றி இன்னும் தெளிவாக விளக்க வேண்டும்.

அதற்குள்ளாக, இருமடங்குக் கட்டணத்தை அடாவடியாக வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. அனைத்து வாகன ஓட்டிகளும் ஃபாஸ்டேக் பயன்பாட்டாளர்களாக மாற கூடுதல் அவகாசம் ஒதுக்குவதில் தவறில்லை. இப்படிக் கண்டிப்புடன் நடந்துகொண்டால்தான் ஃபாஸ்டேகுக்கு மாறுவார்கள் என்று நினைப்பதுதான் தவறு. ஃபாஸ்டேக் பயன்படுத்தினாலும், நம்மிடமிருந்து கழிக்கப்படும் கட்டணத் தொகை செல்போன் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக வருவதில்லை. அடுத்தடுத்துள்ள சுங்கச்சாவடிகளைக் கடக்கிறோம் என்றால் எவ்வளவு தொகை எடுக்கப்படுகிறது என்பதே தெரிவதில்லை.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி

ஃபாஸ்டேக் பயன்பாட்டாளராக இருந்து ஏதோவொரு அவசர கதியில் சேமிப்புக் கணக்கில் அதற்குரிய தொகையை இருப்பு வைக்காமல் சுங்கச்சாவடிகளைக் கடந்தாலும் இருமடங்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஃபாஸ்டேகில் உள்ள குளறுபடி, கோளாறுகளை முதலில் சரிசெய்யுங்கள். அதுவரை, இருமடங்குக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துங்கள்’’ என்று கொதிக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

ஃபாஸ்டேக் எங்கு கிடைக்கும்?

அனைத்துச் சுங்கச் சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஃபாஸ்டேக்குகளைப் பெறலாம். அதுதவிர, ஆர்.டி.ஓ அலுவலகங்கள், போக்குவரத்து மையங்கள், தேசிய நெடுஞ்சாலை அலுவலகங்கள், பொதுச்சேவை மையங்களில் உரிய தொகை செலுத்தி ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை வாங்கிக்கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மூலமாகவும் ஃபாஸ்டேக் பயன்பாட்டாளராக மாறலாம். அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிகளின் மொபைல் செயலிகளின் மூலமாகவும் பெற முடியும். my fastag app, sukhad yatra app மற்றும் NHAI / NPCI / IHMCL ஆகிய வெப்சைட்டுகளிலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அருகில் உள்ள ஃபாஸ்டேக் மையம் பற்றி அறிய www.nhai.gov.in அல்லது www.ihmcl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு