Published:Updated:

தென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு!

ரஜினி பிரதாப் சிங் - படங்கள்: ராகுல்தாஸ்

பிரீமியம் ஸ்டோரி

வாசகர் பயண அனுபவம்: வயநாடு

ன் ஊர் கோவை என்பதால், நான் அடிக்கடி என் காரை பார்க் செய்யும் இடம் கேரளாவாகத்தான் இருக்கும். இங்கே நான் சொல்ல இருப்பது எனது ஃபிகோவில், நான் வயநாடு போய் வந்த அனுபவத்தை.

கோவையில் இருந்து பாலக்காடு–தாமரசேரி… ஊட்டி– கூடலூர் என இரண்டு ரூட்களில் வயநாடு செல்லலாம். ஈரம் படர்ந்த சாலையை மெதுவாக விழுங்கிக் கொண்டு, எங்களது ஃபிகோ, ரம்மியமான சூழலில் வயநாடு மலைகளின் கொண்டை ஊசிப் பாதைகள் துவங்கும் அடிவாரம் என்ற இடத்தை 5 மணி நேரத்தில் அடைந்தது. கோழிக்கோட்டை மைசூருடன் இணைக்கும் அழகு நிரம்பிய இந்த மலைச்சாலைகளில் டிரைவர்கள் மிகவும் அலெர்ட்டாக இருக்க வேண்டும். காரணம், அழகு மற்றும் சீறிச் செல்லும் வாகனங்கள். பொதுவாகவே, கேரளாவில் யாரும் ஹார்ன் பயன்படுத்துவதில்லை. கொண்டை ஊசி வளைவுகளிலும்தான்.

தென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு!

வைத்திரிவியூ பாயின்ட்தான் இந்த ரூட்டின் முதல் அட்ராக்ஷன். டாப் வியூவில் பார்த்தால், பச்சைத் தரையில் கறும்பாம்பு ஒன்று நெளிந்து வளைந்து படுத்திருப்பதுபோல் வியூ இருந்தது. குட்டிக் குட்டி அருவிகளும், நமக்குக் கீழே மிதக்கும் மேகக்கூட்டங்களும், மூடுபனியும்… வாவ்! எத்தனை அவசரமாக இருந்தாலும் செல்ஃபி எடுக்காமல் போக விடாது இந்தப் பாதை.

வழியில் சங்கிலி மரம் என்று ஒரு மரம் காட்டினார்கள். லோக்கல்வாசிகள் சிலர் இதை வழிபட்டும் செல்கிறார்கள். மரம் வளர வளர சங்கிலியும் சேர்ந்து வளரும் என்று இம்மரத்துக்கு ஏகப்பட்ட அமானுஷ்ய வரலாறு சொன்னார்கள்.

போதையேற்றும் பாதையில் அலுப்பே இல்லாமல் பயணித்தோம். கொஞ்ச நேரத்தில் வயநாடு ஆர்ச் வந்தது. வயநாடு வருபவர்கள் முதலில் பார்க்க வேண்டிய இடம் பூக்கோட் ஏரி. மலைகளுக்கு இடையில் அமைந்த சிறு நகரமான வைத்திரியில் இருந்து 1.5 கி.மீ–ல் இருக்கிறது பூக்கோட் ஏரி. இங்குதான் கபினி ஆற்றில் கலக்கும் பனமரம் என்ற ஆறு உருவாகிறது. மேப்பில் பார்த்தால், பறவை ஒன்று ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் இருக்கிறது. இளவெயிலும் சாரலுமாக ஒரு ரொமான்ட்டிக் சூழலில், பூக்கோட் ஏரியில் படகுச்சவாரி போவது அற்புதமான அனுபவம். சுற்றியுள்ள புல்வெளிப் பாதையில் வாக்கிங்கும் போகலாம். ஃபிஷ் ஸ்பா இருந்தது. கட்டணம் 50 ரூபாய்தான். பாதங்களைக் குறுகுறுவெனக் கொத்தி கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன சிறு மீன்கள். தேன்– மூலிகை–கைவினைப் பொருட்கள் விற்கும் அங்காடி இருந்தது. பூக்கோட் ஏரியில் பார்க்கிங்குக்குத்தான் அல்லாடி விட்டோம்.

தென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு!

இங்கே ஹோம் ஸ்டேக்கள், காட்டேஜ்கள்தான் ஸ்பெஷல். 1,000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. செக்–அவுட் இங்கே நண்பகல் 12 மணி வரைதான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அங்கிருந்து கிளம்பி, பாணாசுர அணை வழியாக ஒரு டிராவல். அடுத்த ஸ்பாட் – மீன்முட்டி அருவி. பார்க்கிங்கில் இருந்து அருவியை அடைவதே ஒரு மினி ட்ரெக்கிங் செல்வதுபோல் இருந்தது. அழகும் ஆபத்தும் நிறைந்த பாதை இது. கடைசி 500 மீட்டரை கயிற்றைப் பிடித்தபடி, வழுக்கும் பாறைகளுக்கு நடுவே பெரிய அட்வென்ச்சரெல்லாம் செய்தோம். மிகப் பெரும் பாறைகளுக்கு இடையில் கொட்டிக் கொண்டிருந்தது மீன் முட்டி அருவி. மீன்கள் முட்டி முட்டி விழுவதால், இதற்கு மீன்முட்டி அருவி என்று பெயராம். இங்கே குளிக்க முடியாது. வெறும் விஷுவல் மட்டும்தான்.

ரஜினி பிரதாப்சிங், கோவை.
ரஜினி பிரதாப்சிங், கோவை.

அடுத்து ரெஸார்ட். தமிழகத்தின் நீலகிரி மாவட்ட எல்லையில் இருந்த ரெஸார்ட்டுக்கு எங்கள் ஃபிகோ பறந்தது. கோழிக்கோடு – ஊட்டி நெடுஞ்சாலையில் வலப்புறம் செல்லும் அடர்ந்த வனப்பாதையில் 2 கிமீ தூரத்தில் அமர்ந்திருக்கிறது இந்த ரெஸார்ட். மேலே மலை, கீழே அருவி, நடுவே காடு… ரெஸார்ட்டுக்குப் போவதே செம த்ரில்லிங்காக இருந்தது. பாதையெங்கும் ஒடிந்திருந்த மூங்கில்களும், சாணங்களும் இது யானைகள் ஏரியா எனச் சொல்லின. ரூம் புக் செய்யும்போதே இரவு 7 மணிக்கு முன்பே வந்துவிடச் சொல்கிறார்கள். விடியும் வரை வெளியே வர ‘தடா’ போட்டிருந்தார்கள். ‘இவ்வளவு தூரம்லாம் யானைங்க ஏறி வராது’ என்று எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொண்டோம். ‘‘ஆனால், புலிங்க வரும் சார்’’ என்று கிலியூட்டினார்கள் ஊழியர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு!

மறுநாள் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட ஸ்பாட்கள் சொன்னார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இடக்கல் குகைதான் எங்கள் திட்டம். நீண்ட தூரம் ட்ரெக்கிங் போக வேண்டும் என்றார்கள். இடக்கல் குகை வித்தியாசமான அனுபவம். 4,000 அடி உயரத்தில் அமைந்த சுவர்களில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் வரைந்து வைத்திருக்கும் எழுத்துகளும் ஓவியங்களும்தான் இங்கே ஸ்பெஷல். கைடு ஒருவர், எல்லாவற்றுக்கும் விளக்கம் சொன்னார். தமிழ் பிராமி எழுத்துகளில் செதுக்கப்பட்டிருந்தவற்றை அவர் வாசித்துக் காட்டியபோது, தமிழின் தொன்மை புரிந்தது.

தென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு!

அடுத்து காந்தன்பாறா, சூச்சிப்பாறா போன்ற அருவிகள்தான் அடுத்த திட்டம். 10 கிமீ தொலைவுதான். பேரியற்கைச் சூழலுக்கு நடுவே அமர்ந்திருக்கும் இரண்டு அருவிகளும் வேற லெவல். அருவியில் நனைந்த பிறகு கர்நாடகா, தமிழ்நாடு பார்டரில் இருக்கும் முத்தங்கா, தோல்பெட்டி எனும் இரண்டு வனவிலங்குச் சரணாலயங்களுக்கு நேரம் இருந்தால் விசிட் அடிக்கலாம். முத்தங்காவில் ஜீப் சவாரி செம அனுபவமாக இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால், காட்டுக்குள் விலங்குகளைப் பார்க்கலாம். காலை, அல்லது மாலை நேர கடைசி சவாரிதான் சரியான ஆப்ஷன். காட்டில் இறங்கி செல்ஃபி எடுப்பதற்குத் தடை போட்டிருந்தார்கள்.

தென் இந்தியாவின் அழகு நாடு... வயநாடு!

அடுத்து, செம்பாறா சிகரம். மெயின் ரோட்டில் இருந்து விலகி, கிளைச்சாலையில் பயணித்து, டிக்கெட் கவுன்டரில் ஃபிகோவை நிறுத்தி, 20 நிமிடம் வனத்துறையின் ஜீப்பில் சென்று, ஒன்றரை மணி நேர ட்ரெக்கிங். ‘தங்க மீன்கள்’ படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலில் வரும் இதய வடிவிலான ஏரியில் ஒரு செல்ஃபி. செம்பாறா பீக்குக்குச் செல்பவர்கள், ஸ்நாக்ஸ்களை பார்சல் வாங்க மறக்காதீர்கள்.

இன்னும் குருவத் தீவுகள், பழசிராஜா அரண்மனை, நீலிமலா வியூ பாயின்ட், கர்லாட் ஏரி என இன்னும் எக்கச்சக்க இடங்கள் பாக்கி இருந்தன. நாட்கணக்கில் ஆனாலும், எங்களுக்கு வயநாட்டை விட்டு வர மனமே இல்லை. கடவுளின் தேசம் என்று சும்மாவா சொன்னார்கள்.

வயநாட்டில் பார்க்க வேண்டியவை:

 • பாணாசுரா அணை

 • குருவத் தீவுகள்

 • மீன்முட்டி அருவி

 • பழசிராஜா அரண்மனை

 • நீலிமலா வியூபாயின்ட்

 • கர்லாட் ஏரி

 • பூக்கோட் ஏரி

 • செம்பாறா சிகரம்

 • முத்தங்கா வனவிலங்குச் சரணாலயம்

 • இடக்கல் குகைகள்

 • வைத்திரி வியூபாயின்ட்

 • சூச்சிப்பாறா அருவி

 • காந்தன்பாறா அருவி

 • ஆராளம் வனவிலங்குச் சரணாலயம்

 • தோல்பெட்டி சரணாலயம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு