Published:Updated:

யானைகளின் அட்டகாசத்துக்கு நடுவே... தலமலையில் இரண்டு இரவுகள்!

தலமலை
பிரீமியம் ஸ்டோரி
தலமலை

வாசகர் பயணம்: தலமலை/டொயோட்டா இனோவா

யானைகளின் அட்டகாசத்துக்கு நடுவே... தலமலையில் இரண்டு இரவுகள்!

வாசகர் பயணம்: தலமலை/டொயோட்டா இனோவா

Published:Updated:
தலமலை
பிரீமியம் ஸ்டோரி
தலமலை

அது இ-பாஸ் நேரம். வீட்டில் அடைந்து கிடக்க முடியவில்லை. வீக் எண்ட்களில் எங்கள் கோவை நண்பர்கள், நீலகிரியில் விழிப்பதுதான் வழக்கம். ஆனால் இ-பாஸ் விஷயத்தில் பாஸ் ஆகவே முடியவில்லை. எட்டு பேர் கொண்ட குழுவோடு டிஸ்கஸ் செய்ததில் சத்தியமங்கலத்துக்கு இ-பாஸ் தேவையில்லை என்றறிந்தோம். சும்மா சத்தியமங்கலம் செக்போஸ்ட் போயிட்டு செல்ஃபி எடுத்துவிட்டு வருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. `வித்தியாசமா போகணும் மச்சி’ என்று எங்கள் எட்டு பேர் குழுவின் `தல’தான் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அது, தலமலை. இதற்கென வாட்ஸ்-அப் குரூப், கான்ஃபெரென்ஸ் கால்கள் என்று டூருக்கு முன்பே களை கட்டி விட்டது தலமலை ட்ரிப்.

யானைகளின் அட்டகாசத்துக்கு நடுவே... தலமலையில் இரண்டு இரவுகள்!

தலமலையை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், எங்கள் நண்பர்களில் ஒருவருக்கு ஏற்கெனவே தலமலை பரிச்சயம். `சிறுத்தை பார்த்தேன்; யானைங்ககிட்ட கேர்ஃபுல்லா இருக்கணும்; பெரிய சாம்பார் மான் இங்கதான் நிறைய இருக்கு’ என்று பில்ட்-அப் ஏற்றிக் கொண்டே இருந்தார். (யானை, சாம்பார் மான் படங்கள் அவர் உபயம்தான்) அவர் சொன்னது உண்மைதான். காரணம், சத்தியமங்கலம் தாண்டி திம்பம் திரும்பும் இடத்தில்தான் தலமலை இருக்கிறது. திம்பம் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே! சிறுத்தை என்றாலே திம்பம்தான் நினைவுக்கு வரும். `புலி, சிறுத்தைலாம் வாக்கிங் போற இடம் தலமலை. அங்கயா போறோம்’ என்று மனசு த்ரில்லிங்காக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யானைகளின் அட்டகாசத்துக்கு நடுவே... தலமலையில் இரண்டு இரவுகள்!

கோவைதான் எங்கள் சென்டர் பாயின்ட். காரணம், ஏழு பேரும் வெவ்வேறு திசை. கோவையில் 7 பேர் குழுவும் அசெம்பிள் ஆனோம். வழக்கம்போல் செல்ஃப் டிரைவ் இனோவா காரில் குறைவான லக்கேஜுடன் கிளம்பினோம். எட்டு நண்பர்கள் ஒரே காரில் இருந்தால், பயணம் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். இரண்டரை மணி நேரத்தில் தலைமலையை அடைந்து விட வேண்டும் என்பது எங்களுடைய திட்டம். கோவை முதல் பண்ணாரி வரை உள்ள சாலை கொஞ்சம் நெரிசலாகத்தான் இருந்தது. ஒரு ஸ்பின் பௌலரின் பந்து எப்படித் திரும்பும் என்று கணித்து ஓட்டுபவர் நல்ல பேட்ஸ்மேன். அதுபோல்தான் ரோட்டில் செல்லும் அங்கிள் மற்றும் ஆன்ட்டிகளின் க்ராஸிங்கைக் கணித்து கார் ஓட்டுபவர், ஒரு நல்ல டிரைவர். எங்கள் குழுவில் நல்ல டிரைவர் யாரென்று எங்களுக்குள் ஒரு வாக்குவாதம் இருந்து கொண்டே வந்தது.

V.செல்வன்
V.செல்வன்

பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எங்களது காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தலமலையில் தேவையான எந்தப் பொருட்களும் எளிதில் கிடைத்துவிடாது. எங்களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ்கள் மற்றும் உணவுப் பொருட்களை கோவையிலேயே முதல் நாள் இரவே பர்ச்சேஸ் செய்துகொண்டோம். ‘டமால் டுமீல் டமுக்கு டுபுக்கு’ என்று கூறிக்கொண்டே பண்ணாரி சோதனைச்சாவடி வந்து அடைந்தோம். இங்கு ஆன்மீக நண்பர்களின் வரவு அதிகமாக இருந்தது.

ரெஸார்ட் கிரவுண்டில் T10 இன்னிங்ஸ்...
ரெஸார்ட் கிரவுண்டில் T10 இன்னிங்ஸ்...

பவர் ப்ளே ஓவர்களில் கேதர் ஜாதவ்வை இறக்கிவிட்டால் மேட்ச் எப்படி ஸ்லோ ஆகுமோ, அது மாதிரிதான் எங்களது பயணத்தை ஸ்லோவாக மாற்றுவதற்கு 27 கொண்டை ஊசி வளைவுகள் காத்திருந்தன. இந்தச் சாலையில் அதிகப்படியான சரக்கு லாரிகள் வரும் என்பதால், நாம் நினைக்கும் வேகத்தில் இங்கு செல்ல முடியாது. கொண்டை ஊசி வளைவுகளில் மேலே செல்லச் செல்ல சத்தியமங்கலத்தின் தனி அழகு கண்களுக்குத் தெரிந்தது. சத்தியமங்கலத்தில் இனோவாவின் விண்டோக்களை இறக்கிவிட்டோம். கோவை வரை ‘கதவை மூடு; ஏசி வெளில போகுது’ என்ற நாங்கள், சத்தியமங்கலம் தாண்டியதும், ‘கதவைத் திற; காற்று வரட்டும்’ என்று நித்யானந்தா ரசிகர்கள் ஆகியிருந்தோம். விண்டோ சைடு இருப்பவர்கள், கண்களுக்கு ஏதாவது மிருகம் தென்பட்டு விடாதா என்று மிகவும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. காட்டுப் பன்றிகளும் மான்களும் மலபார் அணில்களும் கழுகுகளும் காட்டெருமையும் - எங்கள் பயணத்துக்கு ஒரு த்ரில்லிங் பிள்ளையார் சுழி போட்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திம்பம் வந்தோம். திம்பத்தில் இருந்து இடதுபுறம் திரும்பினால் தலமலை. இங்கிருந்து எங்கள் ரெஸார்ட்டுக்கு வெறும் 26 கிமீதான். ஆனால், ‘இது கொடூரமான காடு; அனுமதியில்லை’ என்று வனத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

காட்டெருமையும் மான்களும் மலபார் அணில்களும் - தலமலைக்கு த்ரில்லிங் பிள்ளையார் சுழி போட்டன.
காட்டெருமையும் மான்களும் மலபார் அணில்களும் - தலமலைக்கு த்ரில்லிங் பிள்ளையார் சுழி போட்டன.
யானைகளின் அட்டகாசத்துக்கு நடுவே... தலமலையில் இரண்டு இரவுகள்!
யானைகளின் அட்டகாசத்துக்கு நடுவே... தலமலையில் இரண்டு இரவுகள்!

கர்நாடக எல்லையைக் கடந்து, மீண்டும் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து, அப்படியே தாளவாடி தொட்டு, அங்கிருந்துதான் தலமலைக்குச் செல்ல முடியும் என்றார்கள். ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று கிளம்பினோம். நிஜம்தான்; செம த்ரில்லிங்காக இருந்தது அந்தப் பாதை. ஆஃப்ரோடு, சாஃப்ட்ரோடு என்று கலந்து கட்டி இருந்தது பயணம். ஒன்றரை மணி நேரத்தில் முடிய வேண்டிய பயணத்தை, நான்கரை மணி நேரமாக மாற்றியது இந்த வழித் தடமே! பின்பு தாளவாடி வந்தடைந்து, அங்கிருந்து தலமலை.

யானைகள் அட்டகாசத்தால் ரெஸார்ட்டில் இரவு முழுக்க பவர் கட்...
யானைகள் அட்டகாசத்தால் ரெஸார்ட்டில் இரவு முழுக்க பவர் கட்...

தலமலையில் இப்படி ஒரு இயற்கை அழகா என்று வியந்தபடி வந்தோம். கண்களை மூடவே இல்லை. அடர்ந்த காடுகள் மற்றும் மூங்கில் மரங்கள், குளங்கள் மற்றும் கரும்புத் தோட்டங்கள் என்று பச்சைப் பசேலென இச்சை ஏற்றியது வழித்தடம். மதியம் ஒரு மணிக்குத்தான் எங்கள் ரெஸார்ட்டை வந்தடைந்தோம். ரெஸார்ட்டில் மதிய உணவு முடித்துவிட்டு, ரெஸார்ட் கிரவுண்டிலேயே நல்ல பிட்சாகத் தேர்ந்தெடுத்து T10 இன்னிங்ஸ் போட்டோம். நட்ட நடுக் காட்டுக்குள், விலங்குகள் உலவும் ஏரியாவில் எட்டு பேரும் பவுண்டரி அடித்து விளையாண்டதெல்லாம் யாருக்கும் கிடைக்காத வரம். (One Pitch Catch உண்டு பாஸ்!)

தலமலை செக்போஸ்ட்டுக்குள் முறையான அனுமதி வேண்டும்.
தலமலை செக்போஸ்ட்டுக்குள் முறையான அனுமதி வேண்டும்.

காலை, விலங்குகள் உலவும் காட்டுக்குள் ட்ரெக்கிங் கூட்டிப் போனார் ரெஸார்ட் ஊழியர் சிவா. ‘இது லீகல் ட்ரெக்கிங்தானே’ என்று விசாரித்தோம். ‘‘எங்க மாமா அங்கதான் இருக்காரு. சட்டத்துக்குப் புறம்பா நாங்க காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போகமாட்டோம்’’ என்றார் சிவா. அமைதியாகச் சத்தம் போட்ட காட்டுக்குள், செமத்தியான ட்ரெக்கிங். அந்தப் புத்தம் புதுக் காலையில் மழை வேறு இன்னும் வெறியேற்றி விட்டது. எங்கள் மொபைலின் டெம்பரேச்சர் 14 டிகிரி என்றது. ‘‘ஊட்டி தோத்துடும் போல’’ என்று நினைத்துக் கொண்டோம். தலமலையின் அழகு கொள்ளை கொண்டது. ‘பேராண்மை’ படத்தில் ஜெயம் ரவி, பொண்ணுங்களைக் கூட்டிப் போவாரே... அதுபோல் இருந்தது சிச்சுவேஷன். இங்கே, ரவிக்குப் பதில் சிவா, பெண்களுக்குப் பதில் 7 அழகிய ஆண்கள். (நம்புங்க, நாங்கதான்!) அகழிகள், சிற்றோடைகள், புல்வெளிகள், மூங்கில் மரங்கள் என்று செம த்ரில்லிங்காக இருந்தது பயணம். ஒரு கல் குவாரியில் உள்ள குளத்தைக் காண்பித்து, ‘‘குளிக்கிறீங்களா’’ என்றார் சிவா. என் போன்ற நீச்சல் வெறியர்கள், தண்ணீரைப் பார்த்தால் தாவி விடுவோம். ஆனால் இந்த 14 டிகிரி குளிரில் எங்குட்டு குளிக்க? ‘என் ராசாவின் மனசிலே’ மீனா மாதிரி செல்லமாக கால் மட்டும் நனைத்துக் கொண்டோம்.

இத்தனை அடர்ந்த காட்டுக்குள் ஒரு விலங்குகூட பார்க்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், பவர் கட் ஆன இரவு நேரத்தில் ஏதேதோ விலங்குகள் உறுமும் சத்தம் கேட்டது. ஏதோ நடமாடும் சத்தமும் பீதியைக் கிளப்பின. நிச்சயம் யானையோ, காட்டெருமையாவோ இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். வனவிலங்குகள் பார்த்தால், எங்கள் ரெஸார்ட்டில் உள்ள நாட்டு நாய்கள் குறைக்குமாம். நாய்கள் குறைக்கும் வேறு சத்தம் இன்னும் பீதி ஏற்றியது. அது சாதா நாய்கள் இல்லை; வேட்டை நாய்கள் என்று பிறகுதான் தெரிந்தது. தலமலைக் காட்டின் எந்த மூலையில் இருந்து சிவா ஒரு விசில் அடித்தால் போதும்... நான்கு நாய்களும் நான்கு கால் பாய்ச்சலில் வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாள், சிவா சொன்னார். ‘‘யானைதான் போயிருக்கு’’ என்று கால்தடம் காண்பித்தார். வேட்டை நாய்களும் அதைக் கட்டியம் கூறின. மின்சாரம் இன்னும் வரவில்லை. அதே பீதியோடு லெமன் கிராஸ் டீ அடித்துவிட்டு, மறுபடியும் ஒரு மேட்ச். அப்போதுதான் தெரிந்தது – முந்தின நாள் இரவு பவர் கட்டுக்குக் காரணம் – யானைகளின் அட்டகாசம் என்றார்கள். டிரான்ஸ்ஃபார்மர் சிதிலமடைந்திருந்தது. அதாவது, ஒட்டுமொத்தத் தலமலையும் இரண்டு நாள் இருட்டில் இருந்தது.

சாம்பார் மான்கள், தலமலையின் ஸ்பெஷல்...
சாம்பார் மான்கள், தலமலையின் ஸ்பெஷல்...

சார்ஜ் ஏற்ற முடியவில்லை; 15 டிகிரி குளிரில் பச்சைத் தண்ணீர்க் குளியல்; இரவு கும்மிருட்டு; டார்ச் அடிக்கக்கூட மொபைலில் சார்ஜ் இல்லாதது; சட்னி அரைக்க மின்சாரம் இல்லாமல் வெறும் பச்சைப் புளி ரசத்தைத் தொட்டு இட்லி சாப்பிட்டது – என்று எதற்குமே எங்களுக்குக் கோபமே வரவில்லை. யானைகள், எங்களைப் பொருத்தவரை குழந்தைகள்போல்தான். நாங்கள் பயந்தது ஒரே ஒரு விஷயம்தான் – மிருகங்கள் வராமல் இருப்பதற்காக எங்கள் ரெஸார்ட்டைச் சுற்றி மின்சார வேலி போட்டிருந்தார்கள். இப்போது அது வேலை செய்யாது. அதனால், இரவு பீதியிலேயே கழிந்தது.

மலைச்சாலையில், தேர்ந்த டிரைவர்கள் காரை ஓட்டுவது நல்லது.
மலைச்சாலையில், தேர்ந்த டிரைவர்கள் காரை ஓட்டுவது நல்லது.

மறுநாள் திரும்ப கோவைக்கு ரிட்டர்ன். இந்த முறை தலமலைக் காடு வழியே அனுமதி கிடைத்தது. ‘காரை விட்டு இறங்கக் கூடாது; செல்ஃபி எடுக்கக் கூடாது; 40 நிமிஷத்துக்குள்ள அந்த செக்போஸ்ட் போயிடணும்’ என்று ஏகப்பட்ட கண்டிஷன்களோடு அனுமதி கொடுத்தார்கள். ஒற்றையடிப் பாதைப் பயணம் செம இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது. ‘புலி, சிறுத்தை, யானைகள் அடர்ந்த காடு’ என்றார்கள். நாங்கள் போர்டு மட்டுமே பார்த்தோம். ஒருவேளை – புலி எங்களைப் பார்த்திருக்கலாம். ‘இந்த இடத்துலதான் போன வாட்டி வந்தப்போ சிறுத்தை பார்த்தேன்’ என்று ஓர் இடத்தைக் காட்டினார், தலமலை டூர் ப்ளான் போட்ட எங்கள் தல! ‘வட போச்சே’ வடிவேலு நிலைமையில்தான் எங்கள் முகரைகள் இருந்தன. கடைசி வரை சிறுத்தை பார்க்காதது வருத்தம்தான்.

வீட்டுக்குப் போன நான்காவது நாள், அந்த வாட்ஸ்–அப் குரூப்பில், ரெஸார்ட் மேனேஜர் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். நாங்கள் தங்கியிருந்த ரெஸார்ட்டுக்கு அருகில் ஒரு புலி ஒன்று ஜாலியாக வாக்கிங் போய்க் கொண்டிருந்தது. அடடா, மறுபடியும் ‘வட போச்சே!’

தலமலைக்குச் செல்பவர்கள் கவனத்துக்கு...

த்தியமங்கலம் தாண்டி, திம்பம் செக்போஸ்ட்டுக்கு இடதுபுறம் திரும்பினால் 26 கிமீ–ல் தலமலை. இது ரிஸர்வ்டு ஃபாரஸ்ட் என்பதால், எல்லோருக்கும் அனுமதி கிடைக்காது. பைக்குகள் சுத்தமாக அனுமதி இல்லை. ஒருவேளை அந்த ரெஸார்ட்டில் இருந்து முறைப்படி அனுமதி வாங்கியிருந்தால், செக்போஸ்ட்டைத் திறந்து விடுவார்கள். இல்லையென்றால், கர்நாடக எல்லையைக் கடந்து, மீண்டும் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து, அப்படியே தாளவாடி தொட்டு, அங்கிருந்துதான் தலமலைக்குச் செல்ல முடியும். இதற்கு 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா ஆகும். சுகம் ரெஸார்ட் இங்கே தங்குவதற்கு நல்ல ஆப்ஷன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism