Published:Updated:

அவலாஞ்சிக்குப் பக்கத்தில் ஆஃப்ரோடு அட்டகாசம்!

 வில்லீஸ் ஜீப் & மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே
பிரீமியம் ஸ்டோரி
வில்லீஸ் ஜீப் & மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: வில்லீஸ் ஜீப் & மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே

அவலாஞ்சிக்குப் பக்கத்தில் ஆஃப்ரோடு அட்டகாசம்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: வில்லீஸ் ஜீப் & மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே

Published:Updated:
 வில்லீஸ் ஜீப் & மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே
பிரீமியம் ஸ்டோரி
வில்லீஸ் ஜீப் & மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே

‘‘நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். கிரேட் எஸ்கேப் பகுதி, மோ.வி–யில் இருந்து எஸ்கேப் ஆகிடுச்சா… என்னாச்சு சார்? நம்ம வில்லீஸ் இருக்கு! இந்த வருஷத்தின் முதல் கிரேட் எஸ்கேப் நம்மோடதா இருக்கட்டும்!’’ என்று இந்த மாதம் தொடங்கியதிலிருந்து மெயில் அனுப்பியபடி இருந்தார், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த CBZ கார்த்திக். ஈரோட்டின் முதல் ஹீரோ ஹோண்டா CBZ கஸ்டமர் என்பதால், அதையே இனிஷியல் ஆக்கிவிட்டாராம் CBZ கார்த்திக். அவ்வ்வ்!

‘‘ஏனுங்க… என்னைய விட்டுட்டுப் போயிடாதீங்க!’’ என்று தனது ஸ்கார்ப்பியோ கெட்–அவே பிக்அப்பில் ஒன்று சேர்ந்தார், கார்த்திக்கின் நண்பர் சுரேஷ்.

இருவரும் வெறித்தனமான ட்ராவல் பிரியர்கள்… அதுவும் காட்டுக்குள் அட்வென்ச்சர் போவதில் வெறியர்கள் என்பது அவர்களின் வாகனங்களைப் பார்த்தாலே தெரிந்தது. எப்படிப்பட்ட பாறைகளிலும் ஏறும் ஆஃப்ரோடு டயர்கள், 4வீல் டிரைவுக்கு எக்ஸ்ட்ரா கியர்பாக்ஸ் என்று வில்லீஸும்… இதைத் தாண்டி எக்ஸ்ட்ராவாக தண்ணீருக்குள் மூழ்கினாலும் புகுந்து வெளியே வரும் ஸ்நார்க்கிள் என்று கெட்–அவேவவும் வெறித்தனமாக இருந்தன. ‘‘மஞ்சூர்ல நம்ம வீடு இருக்குதுங்க… அங்க அவலாஞ்சிக்குள்ள செம ஆஃப்ரோடு பண்றோமுங்க… ஏனுங்க… ஓகேதானுங்க!’’ என்று சாஃப்ட்டாகப் பேசினாலும், பக்கா ஆஃப்ரோடு பார்ட்டிகளாக இருந்தார்கள் இருவரும். கோபிச்செட்டிப்பாளையம் டு மேட்டுப்பாளையம் வரைதான் சாஃப்ட்ரோடு… அதற்கப்புறம்தான் வில்லீஸுக்கும் கெட்–அவேவுக்கும் செம ஆஃப்ரோடு தீனி!

வழக்கம்போல் மேட்டுப்பாளையம் தாண்டி ஊட்டி பார்டருக்கு முன்பு உள்ள பார்டர் கடையில் புரோட்டாவும் நாட்டுக்கோழி கறி விருந்தும் செ`மத்தியான’ லஞ்ச்! மலையேறும்போது செமிக்க வேண்டும் என்பதற்காக, ஸ்வீட்/சால்ட் லெமன் சோடாவை உள்ளே தள்ளிவிட்டுக் கிளம்பினோம். வில்லீஸ் ஜீப்பில் உட்கார்ந்து மெக்கானிக்கல் ஸ்டீயரிங்கையும் ஹார்டான க்ளட்ச்சையும் மிதித்தால்…தானாகவே செமித்துவிடும்போல! ஆனால், மலையேற்றங்களில் இதுதான் வில்லீஸை கன்ட்ரோலாக ஓட்ட உதவுகிறது.

பார்டர் கடையில் நாட்டுக்கோழி கன் சிக்கன்... பிரியாணி என செ'மத்தியான' லஞ்ச்...
பார்டர் கடையில் நாட்டுக்கோழி கன் சிக்கன்... பிரியாணி என செ'மத்தியான' லஞ்ச்...

மஹிந்திராவின் கெட்–அவே வேறு ரகம். ஹைவேஸிலும் பறக்கிறது; மலையேறும்போதும் தெறிக்கிறது. இதிலுள்ள 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சட் சட் என ஏறுகிறது. டர்போ லேக்கே பெரிதாகத் தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் என்பதால்… வேட்பாளர்களின் பணப்பட்டுவாடாவுக்குப் பயந்து வாகனச் சோதனைக் கெடுபிடி அதிகமாக இருந்தது. ஆனால், நமது ஓப்பன் டைப் வில்லீஸ் ஜீப்புக்கும், டிக்கியே இல்லாத மஹிந்திராவின் கெட்–அவே பிக்அப்பிலும் சோதனை போடும்போது, காவல்துறைக்கே சிரிப்பு வந்தது. ‘இது என்ன மாடல் ஜீப் சார்… இது என்ன தண்ணிக்குள்ள போறதுக்கா…? டயர் இவ்வளவு பெருசா இருக்கே.. மைலேஜ் அடிபடுமே’ என்று போலீஸ்காரர்கள் வாகன விரும்பிகளாக மாறியிருந்தனர்.

பொதுவாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி போவதற்கு குன்னூர், கோத்தகிரி என்று இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனைக்கட்டி.. அட்டப்பாடி என்று அசத்தல் ரூட்டுக்கெல்லாம் X போட்டோம். காரணம், நமது டார்கெட் அது இல்லை. ‘‘பரளிக்காடை அப்படியே டச் பண்ணிப்போட்டுப் போகலாம்ங்க!’’ என்று CBZ கார்த்திக் சொல்லியிருந்ததால்… வெள்ளியங்காடு வழியாக முள்ளி செக்போஸ்ட்டுக்குத் திரும்பின கெட்–அவே மற்றும் வில்லீஸின் ஸ்டீயரிங்குகள்.

ஒவ்வொரு செகிபோஸ்டும் முக்கியம்...
ஒவ்வொரு செகிபோஸ்டும் முக்கியம்...
சாம்பாஜ் டீக்கடையில் ஒரிஜினல் ப்ளாக் டீ...
சாம்பாஜ் டீக்கடையில் ஒரிஜினல் ப்ளாக் டீ...

இங்கே அனுமதி வாங்கிவிட்டுத்தான் போக வேண்டும். இங்கேயும் பணப்பட்டுவாடா செக்கிங் நடந்தது. இதை அத்திக்கடவு செக்போஸ்ட் என்றும் சொல்கிறார்கள். இது வாகன விரும்பிகளுக்குப் பிடித்தமான இடம் என்று சொல்லலாம். தமிழ்நாடு…அப்புறம் கேரளா… மறுபடியும் தமிழ்நாடு என்று காடு கண்ணாமூச்சி காட்டும்.

இடதுபக்கம் திரும்பி பில்லூர் டேமுக்கு ஒரு விசிட் அடிக்கலாம் என்று நினைத்தால்… அனுமதி கிடைக்கவில்லை. ‘‘வேணும்னா அகழினு கேரளா வழியா போற ஒரு செம ஆஃப்ரோடு ஏரியா இருக்கு… போறீங்களா’’ என்று நமது வாகனங்களைப் பார்த்து காவல்துறையினரே ரூட் ரெக்கமண்ட் செய்தார்கள். நேரப் பற்றாக்குறையால்… ‘அடுத்தவாட்டி அகழியை வெச்சுக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, அப்படியே பரளிக்காடு.

‘பரளிக்காடு’ காட்டுப்பாதை செம போதை ஏற்றியது. திடீரென்று ஒரு பாலம்.. பாலத்துக்குக் கீழே பெரிய கால்வாய்… அதைக் கால்வாய் என்றும் சொல்ல முடியாது; ஏரி என்றும் சொல்ல முடியாது; நதி என்றும் சொல்ல முடியாது. ஆனால், நீர்ச் சலசலப்பு ஏதோ ஒரு ஜென்நிலையைக் கொடுத்தது. லொக்கேஷன் பார்த்தவுடனே மனதை மயக்கியது. இங்கேதான் யானைகள் நீர் அருந்த வரும் என்றார்கள்.

பரளிக்காடு அரசாங்க காட்டேஜில் ஏற்கெனவே நமக்குத் தங்கிய அனுபவம் உண்டு. ‘‘லாக்டெளனுக்கு முன்னாடி வந்தோமுங்க… இப்போதானுங்க உங்க தயவுல வர்றோம்’’ என்றார்கள் சுரேஷும் கார்த்திக்கும். ஆள் அரவமே இல்லாமல்… பரளிக்காடு அமைதியால் மிரட்டியது. நீங்கள் அரசாங்க வலைதளத்தில் புக் செய்தால்… வனத்தை ஒட்டிய ஒரு மலைக்கிராமம் வழியாகத்தான் பரளிக்காடுக்குப் பஸ்ஸில் கூட்டி வருவார்கள்.

பரிசல் பயணம் போகும் ஆறு… இப்போது பரிதாபமாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு பரிசல் மட்டும் அத்தனை பெரிய ஆற்றில் சிங்கிளாக வந்து கொண்டிருந்தது. ‘‘பாட்டியை டிராப் பண்ண வந்தேன்’’ என்று, பரிசலை ஓரங்கட்டியபடி சொன்னாள் ஒரு 8 வயது சிங்கச் சிறுமி.

பில்லூர் அணை... இந்தத் தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.
பில்லூர் அணை... இந்தத் தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.
"பாட்டியை டிராப் பண்ண வந்தேன்!" - பரளிக்காடு ஏரியில் தன்னந்தனியாய் பரிசல் பயணம் செய்த சிறுமி...
"பாட்டியை டிராப் பண்ண வந்தேன்!" - பரளிக்காடு ஏரியில் தன்னந்தனியாய் பரிசல் பயணம் செய்த சிறுமி...
இரவு நேரத்தில் காட்டு மாடுகள் தரிசனம்
இரவு நேரத்தில் காட்டு மாடுகள் தரிசனம்

பரளிக்காட்டில் ஒரு போட்டோ ஷூட். மறுபடியும் வனத்தை ஒட்டி த்ரில்லிங் பயணம். மஞ்சூர் வழியே மிரட்டியது. இரவு நெருங்கியதில் த்ரில்லிங் இன்னும் அதிகமானது. யானைகளையோ சிறுத்தைகளையோ தேடிக் கொண்டே வந்தோம். கொஞ்சம் பேராசையாகத்தான் இருந்தது. ஆனால்.. அதிர்ஷ்டம் வேறு உருவில் வந்தது.

கெட்–அவேயில் எக்ஸ்ட்ரா ஆஃப்ரோடு ஹெட்லைட் பொருத்தியிருந்தார் சுரேஷ். வெளிச்சத்தில்… திடீரென படா படா உருவங்கள் மின்னின. பார்த்தால்… சாலையோரத்தில் காட்டெருமைகள்.. திமு திமுவென திமிலுடன் பார்ப்பதற்கே மிரட்சியாக இருந்தது. உருவத்துக்குச் சம்பந்தமில்லாமல், சாந்தமாக எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தன காட்டுமாடுகள். ‘பத்திரமாப் போங்க’ என்பது போல் இருந்தது காட்டுமாடுகளின் பாஷை. ‘‘வனவிலங்குகளைத் தொந்தரவு செய்றவங்களை எனக்குப் பிடிக்காது’’ என்றனர் சுரேஷும் CBZ கார்த்திக்கும்.

மீண்டும் செக்போஸ்ட். இப்போது கெத்தை வந்திருந்தது. மீண்டும் செக்கிங். இங்கே நன்கு டிரைவிங் தெரிந்தவர்கள்தான் காரோட்டுவது நல்லது. ‘‘தள்ளி நில்லுங்க.. அரைகுறைங்க வண்டி ஓட்டுவாங்க… சர்ருனு இறங்கிடுவாங்க!’’ என்று காவல்துறையினரே பயந்தனர்.

சில பல கிமீக்கள்… கிட்டத்தட்ட 37–க்கும் மேல் ஹேர்பின் பெண்டுகள் என்று மஞ்சூர் பாதை செமையாக இருந்தது. போகும் வழியில் மான்கள்… வரையாடுகள் இருட்டில் க்ராஸ் செய்தன. ஆனால், ‘நடிச்சா ஹீரோதான்’ என்பதுபோல்… நமது டார்கெட் சிறுத்தை அல்லது யானைதான். ப்ப்ச்ச்! சிக்கவில்லை.

மஞ்சூரில் சுரேஷின் கெஸ்ட்ஹவுஸில் தங்குவதே செம அனுபவமாக இருந்தது. கொஞ்சம் தள்ளி, 100 ஆண்டுகள் பழைமையான ஒரு வீட்டுக்குக் கூட்டிப் போனார் சுரேஷ். இது பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய வீடு என்று சில விஷயங்களைக் காட்டினார். நிஜம்தான் போல! மான் கொம்பு (மர வேலைப்பாடுதான் பாஸ்), ஹேண்டிக்ராஃப்ட்ஸ், உட்காரும் சோஃபா என்று பல இடங்களில் வெள்ளைக்கார வாசம் அடித்தது. வெளியே வந்து பால்கனியில் நின்று டார்ச் அடித்துப் பார்த்தால்… இருட்டில் பல மீட்டர் தூரத்தில் கீழே ஏதோ ஒரு வனவிலங்கு, காட்டில் வெஜ் மீல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அநேகமாக யானையாக இருக்கலாம். குளிரிலா… பயத்திலா தெரியவில்லை.. கை நடுங்கியது.

தூங்கி எழுந்ததும் நமது காட்டேஜ் பக்கமாக இரவு யானைக் கூட்டம் நின்ற இடத்தைக் காட்டினார், சுரேஷ். இரவு பயத்தில் பம்மிய மனதுக்கு, இப்போது ரம்மியமாக இருந்தது.

சுடச் சுட பிளாக் டீ அடித்துவிட்டு, அப்பர் பவானி என்றொரு செமையான ஆஃப்ரோடு பயணத்துக்குத் திட்டம் போட்டோம். அங்கேயும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், அவலாஞ்சிக்குக் கிளம்பினோம். மறுபடியும் செக்போஸ்ட். இங்கே வாகனத்துக்கும் நமக்கும் சேர்த்து சின்னதாகக் கட்டணம் வசூலித்தார்கள். அவலாஞ்சியில் உள்ள காட்டு கேன்ட்டீனில் சுமாரான காலை உணவு. செக்போஸ்ட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்துதான் போக வேண்டும்.

அவலாஞ்சி என்றால் பனிச்சரிவு என்று அர்த்தம். 1800–களில் இங்கே பனிச்சரிவு அதிகமாக இருந்ததால்… இந்த இடத்துக்கு அவலாஞ்சி என்று வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்தார்களாம். இங்குள்ள தோடா குடிசை செம போட்டோ ஷூட் ஸ்பாட்.

அவலாஞ்சி போகும் வழியில் தோடர்கள் குடிசை...
அவலாஞ்சி போகும் வழியில் தோடர்கள் குடிசை...
அவலாஞ்சி ட்ரைவ்
அவலாஞ்சி ட்ரைவ்

அவலாஞ்சி ஏரி அத்தனை அழகாக இருந்தது. இங்கேயும் சிறப்பு அனுமதி வாங்கித்தான் போக வேண்டும். ஒரு வழியாக அனுமதி வாங்கிவிட்டு, உள்ளே போனால்… சொர்க்கமே விரிந்ததுபோல் இருந்தது பாதை. ஆக்ஸிலரேட்டர் மிதிக்கவே மனமில்லை.

‘தெய்வத்திருமகள்’ பார்த்துவிட்டு ‘அவலாஞ்சி… சாக்லேட் ஃபேக்டரி’ என்று உளர ஆரம்பித்தால்… கம்பெனி பொறுப்பல்ல! அவலாஞ்சியில் தங்க நினைப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ்… ஊட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பெர்மிஷன் வாங்க வேண்டும். இங்கே உள்ள அரசாங்க டார்மெட்டரியில் 2,500 ரூபாய் முதல் கட்டணம். இங்கே தனியார் ரெஸார்ட்டுகளும் உண்டு. போனமுறை வந்திருந்தபோது டெஸ்ட்டினி என்கிற ரெஸார்ட்டில் தங்கியதாக ஞாபகம். இது கொஞ்சம் காஸ்ட்லி.

இங்கே சுற்றிப் பார்க்க அரசாங்க வேன்கள் உண்டு. இதற்குத் தனிக்கட்டணம். ஏரி… காட்டுக்குள் அனுமதியோடு சவாரி என்று கலக்கலாம். ஆனால், நாம் போனபோது தற்காலிகமாக எல்லாவற் றையும் நிறுத்தி வைத்திருந்தார்கள்.

முற்றிலும் ரிசர்வ்டு ஃபாரஸ்ட் என்பதால்… குறிப்பிட்ட எல்லை வரைதான் அனுமதி. கொஞ்சம் ரிசர்வ்டு ஆகவே.. அதாவது ரொம்பவும் அழகாகவே… அமைதியாகவே இருக்கிறது அவலாஞ்சிப் பகுதி. இங்குள்ள எமரால்டு ஏரிக்கு யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், தூரத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாம். அவலாஞ்சியில் உள்ள பவர் ஸ்டேஷனான குந்தா ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்டுக்கு தண்ணீர் சப்ளை செய்வதே இந்த எமரால்டு ஏரிதான்.

நாம் சிறப்பு அனுமதி வாங்கி ஒரு ஆஃப்ரோடுக்கு ஏற்பாடு செய்தோம். வில்லீஸுக்கும் கெட்–அவே ட்ரக்குக்கும் ஏற்றமாதிரியான பாதை அது. அதாவது பாதையே இல்லாத பாதை. ‘இதுல போனா டயர் மாட்டிக்கிடும்ங்க’ என்று லோக்கல்வாசி விக்னேஷ் சொல்லியும் கேட்கவில்லை CBZ கார்த்திக்கும் சுரேஷும். அந்தச் சரிவான… பள்ளமான பள்ளத்தாக்கில் கெட் அவேவும் வில்லீஸும் புகுந்து புறப்பட்டது ஆஃப்ரோடு அட்டகாசம்.

மறுபடியும் மஞ்சூர்ப் பயணம். மஞ்சூரில் இருந்து காட்டேரி டேம் வழியாக வில்லீஸும் கெட்–அவேவும் மலை இறங்கியபோது, ‘சாம்ராஜ்’ எனும் பெரிய டீ எஸ்டேட்டுக்குச் சொந்தமான கடையில், பிளாக் லெமன் டீ அடித்துக் கொண்டிருந்தபோது, மஹிந்திரா தார் ஜீப்பில் இருந்து இறங்கினார் ஒருவர். ‘‘சார்… இது என்னோட தார். இதுல நெக்ஸ்ட் கிரேட் எஸ்கேப் நம்மோடது.. ஓகேவா!’’ என்றார் அந்த தார் ஓனர். வில்லீஸும் கெட்–அவேவும் தாரைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது நமக்கு. அப்படியென்றால்… தாருக்கு ஒரு தாறுமாறான டிரைவ் காத்திருக்கு!

வில்லீஸ்... ஸ்கார்ப்பியோ கெட்-அவே
வில்லீஸ்... ஸ்கார்ப்பியோ கெட்-அவே

வில்லீஸ்… ஸ்கார்ப்பியோ கெட்–அவே எப்படி?

கார்த்திக் பயன்படுத்திய வில்லீஸ், 1970 மாடல் ஜீப். 2.5 லட்சத்துக்கு வாங்கி எக்ஸ்ட்ராவாக 1 லட்சத்துக்கு வேலை பார்த்ததாகச் சொன்னார் கார்த்திக். இதன் 2.5 லிட்டர் இன்ஜின் வெறித்தனமான பிக்–அப்பைக் கொண்டிருக்கிறது. 4 வீல் லோவை என்கேஜ்டு செய்தால் போதும்… எப்படிப்பட்ட பள்ளத்திலும் இருந்து துள்ளி எழுகிறது வில்லீஸ். இதன் கி.கிளியரன்ஸ் 210 மிமீ–க்கு மேல்தான் இருக்கும். இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அருமை. பல ஸ்பேர் பார்ட்ஸ், பொலேரோவின் பாகங்களே பொருந்துவதாகச் சொன்னார் கார்த்திக். Eat… Sleep… Jeep… Repeat என்று தனது ஜீப்பில் ஸ்டிக்கரிங் செய்திருப்பதே... அவரின் அட்வென்ச்சர் தாகத்தைச் சொல்கிறது.

ஸ்கார்ப்பியோ கெட்–அவே உரிமையாளர் சுரேஷ், ஒரு வாகனப் பிரியர்; அட்வென்ச்சர் வெறியர். காஸ்ட்லியான பிரேடோவும் வைத்திருக்கிறார்; மலிவான கெட்–அவேவும் வைத்திருக்கிறார். கெட்–அவேவின் ஆன்ரோடு விலை 12 லட்சம் என்றும்; 4 லட்சத்துக்கு எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் பொருத்தியதாகவும் சொன்னார். ஃபோர்ஸ் லைட் எனும் பவர்ஃபுல் ஹெட்லைட், தண்ணீருக்குள் போக உதவும் ஸ்நார்க்கிள், 4 வீல் கியர்பாக்ஸ், தடிமனான டயர்கள் என்று பக்காவாக தனது கெட்–அவேவை ஆஃப்ரோடுக்குத் தயார் செய்திருக்கிறார் சுரேஷ். ‘‘இந்த கெட்–அவே போகாத காடே இல்லை’’ என்கிறார் அவர். ஹைவேஸில் பறக்கவும் இதன் 120 bhp பவர் கொண்ட mHawk டீசல் இன்ஜின் செமையாக இருக்கும். 210 மிமீ கி.கிளியரன்ஸ் என்பதால்… ஆஃப்ரோடுக்கும் அருமையாக இருக்கும். இந்த இரண்டும் லிட்டருக்கு சுமார் 11 முதல் 12 கிமீ மைலேஜ் தருகின்றன.

அவலாஞ்சிக்குப் பக்கத்தில் ஆஃப்ரோடு அட்டகாசம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism