கட்டுரைகள்
Published:Updated:

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - மலை… மழை… அருவி… ஓடை… 25 கிமீ ட்ரெக்கிங்குக்கு ரெடியா!

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை

சுற்றி மலைகள், அதிலிருந்து கசியும் சிறிய அருவிகள், அவை தொடும் பள்ளத்தாக்கு, அதை ஒட்டி ஓடும் சிறு நதி, அதைச் சுற்றிப் படர்ந்திருக்கும் பச்சைக் காடு என்று எதை ரசிப்பது என்றே தெரியவில்லை.

பார்ப்பதற்கு ஃபங்க்கி முடி, கன்னாபின்னா தாடி என்று ‘தூள்’ பட பசுபதி மாதிரி தோற்றத்தில் இருந்தாலும், நான் நிஜத்தில் ‘படிக்காதவன்’ தனுஷ் மாதிரி கொஞ்சம் ஆன்மிக அன்பனாக இருப்பதால், எங்களை… இல்லை, என்னை எல்லோருக்கும் பார்க்கப் பார்க்க மிகவும் பிடித்துவிடும். கேதார்நாத்துக்கும் அப்படித்தான் போல! இந்தச் சுட்டிப் பசங்களை மிகவும் பிடித்திருக்க வேண்டும். ‘தம்பிகளா... நிலச்சரிவுல சரிஞ்சிடாதீங்க… பூகம்பத்துல சிக்கிக்காதீங்க... வெள்ளத்தில் மாட்டிக்காதீங்க’ என்று எல்லோரும் பீதியைக் கிளப்பியதை எல்லாம் ஊதித் தள்ளி, ஒரு மாதிரியான சந்தோஷ மனநிலையிலேயே எங்களை வைத்திருந்தது கேதார்நாத். எங்களின் யாத்திரைக்கு எந்த பங்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் கேதார்நாத் சிவபெருமான்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - மலை… மழை… அருவி… ஓடை… 25 கிமீ ட்ரெக்கிங்குக்கு ரெடியா!

இப்போது நாங்கள் கேதார்நாத் மலையடிவாரத்தில் இருந்தோம்.ஒருவித பரவச நிலையை அடைந்து, நாங்கள் சிவாவை தரிசிக்க முறையாக நகர்ந்தோம் வரிசையில். காவல்துறைக்கும் எங்களைப் பிடித்திருக்க வேண்டும். ஒவ்வொருவராக சந்தோஷமாக நடக்க அனுமதித்தார்கள்.

அங்கிருந்து ‘தோ’ கிலோமீட்டர் நடந்து போனால் ஷேர் டாக்ஸி கிடைக்கும் என்றார்கள். அதில் ஏறி அடுத்த ஐந்து கிலோமீட்டர் போகலாம். ஆளுக்கு ஐம்பது ரூபாய் கட்டணம். அங்கு இறங்கியவுடன் அடுத்த 25 கிலோமீட்டர் நடராஜா சேவைதான். நமக்கு மலை ஏறுவதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அந்த வானத்தைப் பார்க்கும்போது பெரிது பெரிதாய் மேகக்கூட்டங்களும், அந்தச் சில்லென்ற காற்றும்தான் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை யோசிக்க வைத்தது. வேறொன்றுமில்லை பாஸ்... செல்போன், கேமரா என்று பல கேட்ஜெட் அயிட்டங்களைப் பாதுகாக்க வேணுமே! பரவாயில்லை, கிளம்பினோம்.

நாங்கள் ஏற ஆரம்பிக்கும்போதே, நிறைய குதிரைகளைப் பார்க்க முடிந்தது. இந்த மலைப்பாதை என்னுடைய கணிப்புப்படி 25 கி.மீ தூரத்துக்கும் மேலேகூட இருக்கலாம். இந்தத் தூரத்தை நடந்து கடக்க முடியாதவர்களுக்காக இந்த ஆப்ஷன். ஆம், குதிரைச் சவாரி!

அதுமட்டுமல்ல, ஒரு சின்னக் கூடையைச் சுமந்து செல்லும் டோலி ஆட்களையும் பார்க்க முடிந்தது. இவை இரண்டுக்கும் 2,500 ரூபாய் கட்டணம் என்றார்கள். இதையெல்லாம் நாங்க கவனிச்சோமோ இல்லையோ… மூணு ஜீவன்கள் நன்றாகவே நோட் செய்திருந்தார்கள். அது வேற யாரும் இல்லை; நம்ம மருது, மீனு அக்கா, அப்புறம் நம்ம குட்டிப் பிரசன்னா. மீனு அக்காவுக்கு நன்றாகவே இந்தி தெரியும். இந்தக் குதிரை, டோலி விவரத்தைக்கூட அவர்தான் விசாரித்துச் சொன்னார். இவர்கள் மூன்று பேருமே ஆரம்பத்தில் இருந்தே புலிக்குட்டி பிரதர்ஸ் போல் ஒன்றாகவே திரிந்தார்கள். அதன் காரணத்தைப் பின்னாடி நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - மலை… மழை… அருவி… ஓடை… 25 கிமீ ட்ரெக்கிங்குக்கு ரெடியா!

நாங்கள் நடக்க ஆரம்பித்த கொஞ்ச தூரத்திலேயே ஒரு சின்ன அருவி, நடைபாதையில் விழுந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஓர் உற்சாகம். ‘ஆஹா… இப்படியே பாதை இருந்தா அலுப்பே தெரியாதே’ என்று நினைத்துக் கொண்டோம். இது நல்ல வரவேற்பாகவே எங்களுக்குப் பட்டது.

சுற்றி மலைகள், அதிலிருந்து கசியும் சிறிய அருவிகள், அவை தொடும் பள்ளத்தாக்கு, அதை ஒட்டி ஓடும் சிறு நதி, அதைச் சுற்றிப் படர்ந்திருக்கும் பச்சைக் காடு என்று எதை ரசிப்பது என்றே தெரியவில்லை. 2 கி.மீ நடந்தபிறகு, மெல்ல மெல்லப் பாதை செங்குத்தாகப் போக… இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்பதுபோல்… ஒவ்வொருவராகக் களைப்படைய ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். நினைத்தபடியே மீனு அக்காவும் மருது ப்ரோவும்தான் முதல் விக்டிம்கள். என் போன்ற மீதமுள்ளவர்களுக்கு உற்சாகப்படுத்துதல்தான் வேலை. ‘வானம் கீழே, பூமி மேலே; எழுந்து நட தோழா’ என்று ஹைக்கூ கவிதை மாதிரி ஏதாவது சொல்லி அவர்களை மோட்டிவேட் செய்துகொண்டே வந்தோம்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - மலை… மழை… அருவி… ஓடை… 25 கிமீ ட்ரெக்கிங்குக்கு ரெடியா!

மதியம் 12 மணிக்கு நாங்கள் கடந்த தூரம் வெறும் 5 கி.மீ. மழை நன்றாகத் தூற ஆரம்பிக்க, கடைகளில் ஒதுங்கியது வசதியாகப் போய்விட்டது. மழை மண் வாசனையோடு, இன்னொரு வாசனையும் நாசியைத் துளைத்தது. அன்னப்பறவை மாதிரி சாம்பார் வாசனையைத் தனியாக முகர்ந்து கண்டறிந்து சொன்னவன் ரவி. பின்னால் வருபவர்களுக்கு சிக்னல் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்துவிட்டோம். ஆனால், குட்டிப் பிரசன்னாவை மட்டும் காணோம்.

தம்பி மலை ஏறும் ஆர்வத்தில் நாங்கள் கடைக்குள் போவதைப் பார்க்காமலேயே நேர்கொண்ட பார்வையோடு கடந்து போய் விட்டிருந்தான். நாங்களும் சாம்பார் வாசனையில் அதைக் கவனிக்கவில்லை. ‘ச்சே… அவன் இல்லாமல் சாப்பிடுவதா’ என்று எங்களுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி.

‘‘வாத்தியாரே, நாம ஏன் சாப்புட்டுட்டு பொறுமையா தேடக்கூடாது’’ என்று ‘கலகலப்பு’ டீம் மாதிரி ஒருவன் கேட்டான். கேட்டவன் பெரிய பிரசன்னாதான். ‘ம்ம்...’ என்று கோரஸாக சந்தானம் போல் தலையாட்டிவிட்டு, சாப்பாட்டில் கை வைத்து விட்டோம். சட்டுபுட்டென்று சாப்பிட்டுவிட்டு ரவி பொறுப்பாக பிரசன்னாவைத் தேடப் போய்விட்டிருந்தார்.

இதன் பிறகு எங்கேயும் நிற்கக் கூடாது; இன்னும் 15 கி.மீ நடக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் போகிறோமோ… அவ்வளவு நல்லது. இதைக் காரணமாக வைத்தே சிறிது தூரம் நடந்ததும் மீனு அக்காவும் மருது ப்ரோவும் குதிரையேறிவிட்டிருந்தார்கள். மருது ப்ரோ குதிரையில் ஏறி உட்கார்ந்ததும், ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என்று பாட்டுப் பாடி, தன்னை வந்தியத்தேவனாக நினைத்திருக்க வேண்டும். ஆனால், நடந்தது வேறு; குதிரை மிரண்டுபோய்த் தெறித்து ஓட, ஒரு வழியாகக் குதிரைக்காரர் அதைப் பிடித்து நிறுத்தி ஆசுவாசப்படுத்தினார். ‘இனிமேல் பாடக்கூடாது’ என்று மருதுவிடம் சத்தியம் வாங்கிவிட்டு வழியனுப்பினோம். இந்தக் களேபரத்தில் மீனு அக்காவும் கொஞ்சம் பயந்திருந்தார்.

சிறு தொலைவில் சின்ன பிரசன்னா கண்ணில் பட்டுவிட்டான். அதன்பிறகு எல்லாம் ஒன்றாகச்சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம். போகப் போக கேதார்நாத் பனி மலை, கண்ணக்குத் தெரிய ஆரம்பித்தது. எப்போதெல்லாம் சோர்வடைகிறோமோ, அப்போதெல்லாம் தூரத்தில் தெரியும் பனிமலையைப் பார்த்துத்தான் எனர்ஜி ஏற்றிக் கொள்வோம்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - மலை… மழை… அருவி… ஓடை… 25 கிமீ ட்ரெக்கிங்குக்கு ரெடியா!

மாலை 4 மணி இருக்கும். வினோன் அண்ணன் மொபைல் போனில் டவர் கிடைத்த கேப்பில் மீனு அக்கா தகவல் சொன்னார். பேஸ் கேம்ப்பில் ஒரு டென்ட் வாடகைக்கு எடுத்துவிட்டதாகவும், அங்கு டவர் கிடைப்பதாகவும், அங்கு வந்ததும் போன் பண்ணுமாறும் கூறி முடிக்க, ‘அக்கா, மிஷன் பாஸ்; உங்களுக்கு ஒரு சல்யூட்’ என்று சொல்லி முடிப்பதற்குள் டவர் கட் ஆனது.

இதனைக் கேட்ட உற்சாகத்தில் விறுவிறுவென ஏற நினைத்தாலும், பாடி ஒத்துழைக்கவில்லை. மழை தூறிக்கொண்டே இருந்ததால் குதிரைச் சாணம் வழியெங்கும் கரைந்தோடிக்கொண்டே இருந்தது. தம் கட்டி நடந்தால் எதிரே குதிரை வரும்; நிற்க வேண்டி இருக்கும். சரி, கொஞ்சம் நிற்கலாம் என்றால் பின்னாடி குதிரை வரும்; விலகி ஓட வேண்டியிருக்கும். அதுவும் கடைசி ஐந்து கிலோமீட்டர் ரண கொடூரம்தான். இதையெல்லாம் சமாளித்துப் போய்ச் சேர இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

எங்களை டென்ட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார் மருது. அங்கே எங்களுக்காக மேகி நூடுல்ஸ் வாங்கி வைத்திருந்தனர். எங்களிடம் இருந்த கடைசிச் சொட்டு எனர்ஜியைப் பயன்படுத்திச் சாப்பிட்டுவிட்டு, ‘அக்கடா’ என்று படுத்தவர்கள்தான். எழுந்திருக்கவே இல்லை. எழுந்திரிக்கவும் முடியாது. சும்மாவா பின்னே 25 கி.மீ மலையேற்றமாச்சே! எதுவாக இருந்தாலும் காலையில் பார்ப்போம்!

(பயணம் தொடரும்)