கட்டுரைகள்
Published:Updated:

குதிரை சர்வீஸ்… டோலி சர்வீஸ் மாதிரி கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்!

கேதார்நாத்
பிரீமியம் ஸ்டோரி
News
கேதார்நாத்

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 5

உயரமான மலைமீது கட்டப்பட்டிருக்கும் கோயில்களுக்கு என் அம்மா ஒரு காரணம் சொல்வார். ‘‘நீ மலை அடிவாரத்தில் நிற்கும்போது, உனக்குள் ஆயிரம் வேண்டுதல் இருக்கும். ஆனால் நீ ஆலயத்தை அடையும்போது மலை ஏறி வந்த களைப்பில் அனைத்து வேண்டுதல்களையும் மறந்திருப்பாய். உனக்கு இறைவனைப் பார்த்தால் போதும் என்பதுபோல் இருக்கும். அந்தக் களைப்பிலும், வேண்டுவதற்கு உனக்கு ஏதேனும் இருந்தால் அதுதான் உன் உண்மையான தேவையாக இருக்கும்’’ என்பார்.

அப்போது என் சிறு மூளைக்கு ஒன்று தோன்றும். ‘அப்படியென்றால், வேண்டுதலுக்காக மட்டும்தான் கடவுளா… கோயில்களா!’ ஆனால், எங்களின் இந்தப் பயணம் வேண்டுதல்களுக்கு இல்லை என்பது அந்தச் சிவபெருமானுக்கே தெரியும். நாங்கள் வேண்டும் நிலையிலும் இல்லை.

சுமார் முப்பது கிலோமீட்டர் ஏறி வந்த களைப்பில் கிடந்த எங்கள் முன் சிவபெருமானே காட்சி தந்தாலும், ‘‘ஐயா சாமி, எதுவா இருந்தாலும் காலைல வாங்க, பேசிப்போம்’’ என்று சொல்லி அனுப்பி வைக்கும் நிலையில்தான் இருந்தோம்.

நாங்கள் தங்கியிருந்த டென்ட் அப்படி ஒன்றும் வசதியானதாக இல்லை; கட்டில்கூடக் கிடையாது. தரையில் கனமான ஒரு தார்ப்பாய்; அதற்கு மேல் ஒரு போர்வை விரிக்கப்பட்டிருந்தது. எங்களுக்குப் போர்த்திக்கொள்ள கம்பளி கொடுத்தார்கள். இருந்தாலும், கம்பளிக்கெல்லாம் சவால் விட்டது குளிர்.

குதிரை சர்வீஸ்… டோலி சர்வீஸ் மாதிரி கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்!

காலை 4 மணி இருக்கும்; ரவி என்னை எழுப்பி டென்ட்டுக்கு வெளிய வருமாறு அழைத்தார். அதைச் சொல்லும்போது, அவர் முகம் பதற்றமாக இருந்தது. நானும் சுதாரித்துக்கொண்டு அவரோடு வெளியே சென்று அவரை விசாரித்தால், அவருக்கு மூச்சுத் திணறலோடு சற்று தலைச்சுற்றலும் இருந்தது. அவருக்கு ஏற்பட்டது ஆல்டிட்யூட் சிக்னெஸ் (Altitude Sickness).

சுமார் 8,000 அடிக்கு மேலே சிவபெருமானின் இருப்பிடத்தில் அல்லவா இருக்கிறோம்! நாங்கள் ஒன்றும் கடவுள் இல்லையே! ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் மற்றும் சில உடல் உபாதைகள்தான் ஆல்டிட்யூட் சிக்னெஸ். மெல்ல நம் உடல் அந்தச் சூழ்நிலைக்குப் பழகிவிட்டால் சரியாகிவிடும்; அதன் தீவிரத்தைப் பொறுத்து சில நேரம் உயிருக்கே ஆபத்தாகலாம் என்றும் சொன்னார்கள். ரவிக்கு அந்த அளவிற்கு மோசமாக இல்லை. டென்ட்டில் காற்றோட்டம் குறைவாக இருந்ததால், நாங்கள் வெளியே வந்தவுடன் அவர் எளிதாக சுவாசிக்க முடிந்தது. ஆனால் தலைச் சுற்றல் மட்டும் சரியாகவில்லை என்றார். ஆனால், அங்கிருந்த சன்னியாசிகளுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லாதது மாதிரி இருந்தது வியப்பாகவே இருந்தது.

நாங்கள் சோர்வாக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, எங்களை நோக்கி ஒரு சன்னியாசி வந்தார். அவர் பின்னால் ஒரு நாயும் வந்தது. எனக்கு ‘அன்பே சிவம்’ கமலும், அந்த நாயும் நினைவுக்கு வந்தார்கள். என்னே பொருத்தமான மொமென்ட். படத்திலும் சிவம்; இங்கேயும் சிவன்!

ரவியை உற்றுப் பார்த்துவிட்டு, தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். ரவியும் அதில் அரை பாட்டிலைக் காலி செய்தார். மிச்சத்தை நான் காலி செய்துவிட்டு, பாட்டிலை அவரிடமே கொடுத்துவிட்டேன்.

குதிரை சர்வீஸ்… டோலி சர்வீஸ் மாதிரி கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்!

அதனை வாங்கிக்கொண்ட அவர், அருகில் இருந்த பொதுக் குழாயில் தண்ணீர் நிரப்பிக்கொண்டதோடு, எங்களுடன் அமர்ந்து கொண்டார். அவரோடு வந்த நாயும் எங்களோடு அமர்ந்துகொண்டது. மேலும் ரவி அந்தக் குழாய் நீரை அருந்தியபிறகு, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். உடனே, ‘அந்தக் குழாய் நீர் – புனித நீர்; சிவபெருமானே குடித்துவிட்டு வைத்த நீரோ’ என்று பரவசநிலைக்குப் போய்விடாதீர்கள்! இது மந்திரமோ மாயமோ இல்லை, பொதுவாக இந்த மாதிரி உயரமான இடங்களுக்கு வரும்போது ஏற்படும் லோ பிரஷரைத் தவிர்க்க, அடிக்கடி நீர் அருந்துவது நல்லதாம். அதைத்தான் செய்யச் சொன்னார் அந்த சன்னியாசி. நல்ல டிப்ஸாக இருந்தது. இது தெரியாமல், ஒரு தடவை இமயமலைப் பயணத்தில் நான் தவித்தது நினைவுக்கு வந்தது. தேங்க்ஸ் டு ‘அன்பே சிவம்’ சன்னியாசி!

காலை 5 மணி இருக்கும். பெரிய பிரசன்னாவும் சின்னப் பிரசன்னாவும் எங்களைத் தேடி வந்துவிட்டார்கள். அவர்களிடம் நடந்ததை விளக்கி முடிக்க, அந்தச் சன்னியாசி எங்களிடம், “கோயிலுக்குத்தானே போறீங்க, வாங்க’’ என்று கையசைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார். நாங்களும் அவர்கூட வந்த நாயும் அவரைப் பின்தொடர்ந்தோம். அவர் எங்களிடம் வாய் திறந்து பேசவில்லை; எல்லாம் செய்கைதான்; அதுவும் கட்டளையிடும் தொனியில்தான் இருந்தது. சின்னப் பிரசன்னா வேகமாக நடக்க முடியவில்லை என்றான். ரவியையும் பிரசன்னாவையும் முன்னே நடக்கச் சொல்லிவிட்டு நானும் சின்னப் பிரசன்னாவும் மெதுவாகச் சென்றோம்.

நாங்கள் நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில், சூரிய வெளிச்சம் வர ஆரம்பித்தது. எங்கள் எதிரே மெல்ல ஓர் அழகிய பனிமலை. ஆஹா… நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த வால்பேப்பரை ஒரிஜினலாகப் பார்த்தால் எப்படி இருக்கும்! வேறுவிதமான ரசனை நிலை அது! இரு பக்கமும் பச்சை மலைகள் நடுவில் ஜொலித்துக்கொண்டிருந்தது. அதன் அடிவாரத்தில் கேதார்நாத் கோவில். ஓர் ஓவியமாய் நெஞ்சில் பதிந்த தருணம் அது.

அதனை ரசித்துக்கொண்டிருக்கும்போதே, என் பரட்டைத் தலை காற்றில் பறந்தது. சின்னப் பிரசன்னாவே பறந்திருப்பான் அந்தக் காற்று வீச்சில். அத்தனை காற்று வீசியது. ‘டபுடபுடபு’ என சத்தம். திரும்பிப் பார்த்தால், ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து இறங்கியது. ‘யாரோ வி.ஐ.பி-தான் வர்றாங்க போல' என்று அருகில் சென்று பார்த்தால்… ஒரே கூட்டம்!

குதிரை சர்வீஸ்… டோலி சர்வீஸ் மாதிரி கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்!

அருகில் போய் விசாரித்தபோதுதான் தெரிந்தது. அதுவும் குதிரை, டோலி கணக்காக ஒரு சர்வீஸ் என்று! அட, ஹெலிகாப்டர் சர்வீஸ்! இது வேற லெவல் தரிசனம் போங்கள்! ஆம், அடிவாரத்தில் இருந்து மேலே கேதார்நாத் வரை ஒரு ட்ரிப். அதற்கு 2,500 மற்றும் 3,500 என்று இரண்டு பேக்கேஜ்களில் கட்டணம். ஆனால், ஆறு மாதத்திற்கு முன்னதாகவே புக் செய்ய வேண்டுமாம். உங்களுக்கு கேதார்நாத் போகும் ஐடியா இருந்தால்… இதை நோட் செய்துகொள்ளுங்கள்.

அப்படியே மெல்ல நடந்து கோயிலுக்குச் செல்லும் வரிசையின் அருகே சென்றுவிட்டோம். அங்கே பிரசன்னாவும் ரவியும் வரிசையில் இடம்பிடித்து வைத்திருந்தார்கள். அதில் சேர்ந்துகொண்டோம். அப்போது வெயில் வந்துவிட்டாலும், வெப்பம் நான்கு டிகிரிதான் இருந்தது. 4 டிகிரியில் வெயில்… ஆஹா! விநோதமாக இருந்தது.

கேதார்நாத் கோயில், இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் முக்கியமானது. இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந் ததாகவும், அவர்களே இக்கோயிலைக் கட்டி யதாகவும் கருதப்படுகிறது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில் களில் இதுவும் ஒன்றாகும்.

இதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. மகாபாரதப் போரில் தங்கள் ரத்த சொந்தங் களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொள்ள, பாண்டவர்கள் காசிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், சிவபெருமானை தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானைத் தேடி அலைந்து கொண்டிருக்கையில், நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர். பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனாலும், பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலைப் பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது. அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.

காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து, அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. இப்படித்தான் கேதார்நாத் லிங்கத்தைப் புராணங்களில் குறிப்பிடுகிறார்கள்.

இப்போ நம்ம கதைக்கு வருவோம். வரிசையில் மெல்ல நகர்ந்து கோயிலுக்குள் சென்றாகிவிட்டது. கோயிலுக்குள் கிருஷ்ணர், பாண்டவர்கள் மற்றும் நந்தி விக்ரகங்கள் இருந்தன. ஜோதிர்லிங்கம் கருவறையில் முக்கோண வடிவில் காட்சி அளித்தது. அதிகாலையிலேயே வரிசையில் நின்றுவிட்டதால், தரிசனம் சுலபமாக முடிந்தது. வெளியே வந்ததும் அகோரிகள், கேதார்நாத் கோயிலைக் காத்த பெரும்பாறை மற்றும் ஆதிசங்கரர் மகா சமாதி இப்படி நமக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தன.