Published:Updated:

`சீட் கன்ஃபார்ம் ஆகல, 50 ரூபாதான் இருக்கு' தாயின் தவிப்பும் டிடிஆரின் கனிவும்- ரயில்பெட்டிக் கதைகள்

ரயில் பயணம்
ரயில் பயணம் ( சு.சூர்யா கோமதி )

`என் மவ பள்ளிக்கூடம்போது, அவளை விட்டுட்டு நான் வேலைக்கு ஓடுவேன். அப்போ இப்படித்தான் நான் ஸ்கூல் கேட் தாண்டற வரை பார்த்துட்டே இருப்பா'' என்று என்னிடம் புன்னகையோடு சொன்னார். அப்படியானால் அந்த அம்மா எத்தனை முறை தன் மகளைத் திரும்பி பார்த்திருப்பார்

சனிக்கிழமை மாலை... லேசான தூறலைச் சிந்திய வானத்திலும் நிலா எட்டிப் பார்த்தது. திருவிழா கூட்டம்போல நெரிசலில் சிக்கியது எழும்பூர் ரயில் நிலையம். தன்னுடைய ரெகுலர் பயணிகளுக்காக முதல் நடைமேடையில் காத்திருந்தது ஆரோவில் எக்ஸ்பிரஸ். கூட்டம் அதிகம் இல்லாதபோதும், இருக்கைக்காகச் சண்டை போட்டுக்கொண்டிந்த இளம்பெண் மீது எல்லோரின் பார்வையும் திரும்பியது.

``இவங்களுக்கு இதே வேலையா போச்சு. ஒரு ஆளு சீக்கிரமா வந்துட்டு, தெரிஞ்சங்களுக்கு எல்லாம் இடம்பிடிச்சு வெச்சுப்பாங்க. பொம்பள புள்ளைங்க கக்கூஸ்கிட்ட நின்னுகிட்டு வருதேனுகூட யோசிக்காத ஜென்மங்க'' என்று முணுமுணுத்தவாறு கடந்தார் டீ விற்பவர். எனக்கு ஏற்பட்ட அதே அனுபவங்களை மனதில் அசைபோட்டவாறே, அன்ரிசர்வேஷன் பெட்டிகளைக் கடந்து, ரிசர்வேஷன் கோச்சில் என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஜன்னல் சீட் கிடைத்ததில் கூடுதல் குதூகலம். வேடிக்கை பார்த்துகொண்டே செல்லலாம்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சாய் தர்மராஜ்

மறுநாள் விடுமுறை என்ற ஆசுவாசத்தை எல்லோருடைய முகத்திலும் உணரமுடிந்தது. வழக்கமாக ஹெட்செட் போட்டுக்கொண்டு, தன் பைகளைத் தலைக்குக் கொடுத்து தூங்கி வழிபவர்கள்கூட, பக்கத்து சீட்டில் இருந்தவர்களிடம் நாட்டு நடப்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிரெதிர் இருக்கையிலிருந்த நான்கு நண்பர்கள், தங்களுடைய பையையே ஸ்டாண்டாக மாற்றி பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, டிபன் பாக்ஸில் மெட்டு போட்டு கானா பாடல் பாடி அதகளம் செய்துகொண்டிருந்தனர் இன்னும் சிலர். ஜன்னல் சீட்டுக்காகச் சண்டை போட்டுக்கொண்ட சிறுமிகள், மஞ்சள் சாமந்தியை மாலையாக மாற்றிக்கொண்டிருந்த பெண்... எனப் பலவிதமான மனிதர்களைப் பார்க்கும்போது, அன்றைய பயணத்தில் நானும் இளையராஜா பாடலைக் கேட்க மறந்து, சூழலை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.

ரயில் கிளம்ப கால் மணி நேரம் இருந்தபோது, ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்த ஓர் இளம்பெண், இரண்டு கட்டைப் பைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்து ஏறினாள். அவசர அவசரமாகப் பைகளை லக்கேஜ் கேரியரில் அடுக்கிவிட்டு, கதவருகில் சென்று எட்டிப் பார்த்து, ``சீக்கிரமா வா... இவ்வளவு மெதுவாகவா நடந்துவருவ'' என்று சத்தம் போட்டாள். வியர்வையை முந்தானையில் துடைத்தவாறே செருப்பைத் தேய்த்துக்கொண்டு வேகவேகமாக வந்துசேர்ந்தார் 60 வயதிருக்கும் அந்தப் பெண்மணி.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

``ரயில் கிளம்ப இன்னும் நேரம் இருக்குங்க. பாவம்... ஏன் அவசரப் படுத்தறீங்க'' என்று நான் சொல்ல, ``ரயிலுக்கு நேரமிருக்கு, எனக்கு இல்லை'' என முகத்தில் அறைந்ததுபோலச் சொன்னாள். அந்த அம்மா இருக்கையில் அமர்ந்து நிதானிக்கும் முன்பே, ``சரி நான் கிளம்புறேன். வீட்டுக்குப் போயிட்டு போன் பண்ணு'' என்று சொல்லியபடியே ரயிலிலிருந்து இறங்கினாள் அந்த இளம் பெண். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அம்மா - மகள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தனக்குத் தேவைப்படும் எதையோ வாங்கித்தரச் சொல்லி எத்தனித்த அம்மா, மகளின் பரபரப்பில் அமைதியானார்.

அவள் போவதை ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தவர் முகத்தில், மகள் ஒருமுறை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. சில நிமிடங்கள் கழித்து என்னிடம் திரும்பி, ``என் மவ பள்ளிக்கூடம் படிக்கும்போது, அவளை விட்டுட்டு நான் வேலைக்கு ஓடுவேன். அப்போ இப்படித்தான் நான் ஸ்கூல் கேட் தாண்டற வரை பார்த்துட்டே இருப்பா'' என்று என்னிடம் புன்னகையோடு சொன்னார். அப்படியானால் அந்த அம்மா எத்தனை முறை தன் மகளைத் திரும்பி பார்த்திருப்பார் என்று நினைத்தேன். அடிக்கடி `ஐ லவ் யூ' சொல்லும் என் மகளின் போட்டோவை, போன் டிஸ்ப்ளேயில் தொட்டுப்பார்த்துக் கொண்டன்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

மெதுவான குரலில் ரொம்பவும் தயங்கிக்கொண்டே, ``கொஞ்ச பையைப் பார்த்துக்கோ தாயீ... ரொம்பத் தாகமா இருக்கு தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர், சேலை நனைய, நனைய தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு, மகளுக்கு போன்செய்து, ``பஸ் ஏறிட்டீயா?'' என்று கேட்டார். எதிர்முனையில் மகளின் எரிச்சலான பதில் வந்திருக்க வேண்டும். அதை அவரின் முகமே காட்டிக்கொடுத்தது. ரயில் புறப்பட்டதும் அந்தத் தாயின் கவனம் சகப் பயணிகள்மீது திரும்பியது. லேசான புன்னகையுடன் எல்லோரையும் பார்த்துவந்தாள். கிராமத்து அம்மாக்களுக்கே உரிய சாந்தமான அன்பு ததும்பும் முகம். பார்த்தவுடனே நெருங்கிப் பேசத்தோன்றும்.

மதுரையிலிருந்து பேனா விற்று விழுப்புரத்தில் படித்து TNPSCக்கு தயாராகும் பாபு! - ரயில் பெட்டிக்கதைகள்

``ஏய்ய்ய் நம்ம மீசைக்காரருதான்டா இன்னைக்கு இந்த வண்டியில டி.டி.ஆர். வண்டி புதுச்சேரி போறதுகுள்ளே எத்தனை பேரைக் குதறப்போறாரோ'' என்று ஒரு குரல் டி.டி.ஆரின் காதுகளுக்குக் கேட்பது போன்று சத்தமாக ஒலிக்க, சில நிமிடங்களில், ``டிக்கெட் காட்டுங்க'' என்ற கறாரான குரலில் வந்து நின்றார் டி.டி.ஆர்.

``இந்த போனில் மெசேஜ் இருக்கு எடுத்து குடு தாயீ'' என்று பட்டன்கள் தேய்ந்த போனை, ரேகை தேய்ந்த கைகளுடன் நீட்டினார் அந்த அம்மா. இன்பாக்ஸில் நிரம்பி வழிந்த விளம்பர மெசேஜ்களுக்கு மத்தியில், ரயில்வே மெசேஜ்ஜைத் தேடி, டி.டி.ஆரிடம் கொடுத்தேன்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

``இது வெயிட்டிங் லிஸ்ட்ல 33 இருக்கு. உங்க டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலை. இது, டிக்கெட்டே இல்லாம பயணிக்கிற மாதிரி. ஃபைன் கட்டுங்க'' என்றார். பதறிய அம்மா, ``இல்லே சார் என் பொண்ணுதான் இதுல ஏத்திவிட்டுச்சு. ஒருமுறை நல்லா பாருங்க சார்''னு சொல்லும்போதே, ஃபைன் கட்டுங்க, இல்லேன்னா அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுங்க'' என்றார் டி.டி.ஆர். ``என்கிட்ட 50 ரூபாதான் சார் இருக்கு. ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோல போறதுக்காக வெச்சிருக்கேன். இந்த ரயில்லேயே ஓரமா உட்கார்ந்து வந்துக்குறேன் இறக்கி விட்றாதீங்க சாமீ'' என்று கை கூப்பினார். கண்கள் என்ன செய்வதென்று தவித்தன. ஒட்டுமொத்த ரயிலும் அமைதியாக, அவ்வளவு நேரம் கறாரான குரலில் பேசிய டி.டி.ஆர். "உங்க பொண்ணுக்கு போன் பண்ணிக் கொடுங்க'' என்றார்.

நடுங்கிய கைகளுடன் போன் செய்து நீட்டினார் அந்த அம்மா. டி.டி.ஆர் பேசுவதற்கு முன்பே, ``அம்மா பஸ் ஏறிட்டா சொல்ல மாட்டேனா? சும்மா கால் பண்ணிகிட்டே இருக்க'' என்று கோபமான குரல் வந்தது. எரிச்சலான டி.டி.ஆர், ``ஹலோ... உங்க அம்மா டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. கன்ஃபார்ம் ஆகிடுச்சான்னுகூடப் பார்க்காம ஏத்தி விட்டுடறதா? கையில 50 ரூபாய்தான் இருக்குங்கிறாங்க. நீங்க தனியா போகும்போது அவங்க இதைத்தான் பண்ணாங்களா. பெத்தவங்கள தவிக்கவிட்டுட்டு யாருக்காகச் சம்பாதிக்கிறீங்க? நாளைக்கு உங்க புள்ளையும் இப்படித்தான் பண்ணும்'' என்று குரலை உயர்த்திப் பேச மறுமுனையில் அமைதி.

``அவள் பாவம் தம்பி, வேலைக்குப் போற அவசரத்துல கவனிக்கல. இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததில்லே. பார்த்துக் கவனமாத்தான் செய்வா'' என்று மகளை விட்டுக்கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

``சரிம்மா... எங்க வேலையைச் செய்யணுமில்லே. நீங்க அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுங்க. நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு'' என்றபடி போனைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார் டி.டி.ஆர்.

அவ்வளவு நேரம் எந்தச் சலனமும் இல்லாமல் தலைகுனிந்து பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன், ``இவரு இப்படித்தான். பெரிய ஸ்ட்ரிக்ட் ஆபீஸர். ரயிலு என்ன இவரு அப்பா சம்பாத்தியமா? நீங்க கண்டுக்காம இருங்க'' என்றான்.

தாம்பரத்தில் ரயில் நின்றது. டி.டி.ஆர் அந்த அம்மாவை நெருங்க, அம்மாவின் கண்கள் கண்ணீர் சிந்தத் தொடங்கியது.``தம்பி... உங்க அம்மாவா நினைச்சுக்கோங்க. ஒரு ஓரமா உட்கார்ந்துக்கறேன்'' என்றார்.

டி.டி.ஆர் முகத்தில் முன்பிருந்த கறார் இல்லை. ``அம்மா... டி.டி.ஆராக நான் செய்ய வேண்டிய கடமை அதுதான். ஆனா, நானும் மனுஷன்தான். மனசு கேட்கலை. அதான் இந்த ஸ்டேஷன்ல இருக்கிற ஒருத்தருக்குப் போன் பண்ணி உங்களுக்கு ஓப்பன் டிக்கெட் எடுக்கச் சொல்லியிருந்தேன். இந்தாங்க வெச்சுக்கோங்க. ரிசர்வ் பண்ணினவங்க வந்துட்டா சீட்டைவிட்டு எழுந்து ஓரமா போயிடுங்க'' என்றபடி டிக்கெட்டை நீட்டினார்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
க.பாலாஜி

அழுகையை அடக்க முடியாமல் உடைந்து அழுத அந்த அம்மாவின் கண்ணீர், அங்கிருந்த எல்லோரின் மனதையும் கணக்கச் செய்தது. ஒரு சீட்டில் அந்த அம்மா உட்கார்ந்தபோது, நிம்மதியாக நன்கு சாய்ந்துகொண்டு உட்காரவில்லை. இரவல் இருக்கையில் உட்கார்ந்த அவஸ்தைதான் அவர் முகத்தில் தெரிந்தது. வேறு யாரேனும் வந்து எழுப்பிவிட்டுவிடுவார்களோ என்ற குழப்பமுகூட. அந்த நொடியில் அவரின் முகம் என் அம்மாவுடையதைப்போல தெரிந்தது. திகைத்துவிட்டேன்.

`அடுத்த வாரம் சொந்த ஊருக்குப் போகணும் டிக்கெட் போடு' எனச் சொல்லியிருந்த என் அம்மா நினைவுக்கு வந்தார். அதோடு, சிறுமியாக நான் இருந்தபோது, விடிய விடிய என்னை மடியில் படுக்கவைத்து பயணித்தது நினைவில் வந்தது. அதுதான் என் முதல் ரயில் பயணமும்கூட.

அம்மாவுக்கு போன் செய்தேன். ``அம்மா... ஊருக்குப் போக நாளைக்கே டிக்கெட் எடுக்கறேன்'' என்றேன்.``ஒரு சீட் போதும். நானும் பேத்தியும் ஒண்ணா படுத்துப்போம். புள்ளைய தனியா விட முடியாது'' என்றார். அம்மாக்கள் எப்போதுமே தேவதைகள்தாம்.

அடுத்த கட்டுரைக்கு