Published:Updated:

தீபாவளிக்கு கார் பயணமா... இந்த விஷயங்களில் கவனம் தேவை! #safetravels

எந்தப் பிரச்னையுமின்றி இனிமையாக உங்கள் பயணத்தை மேற்கொள்ள இந்த விஷயங்களில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபாவளி ஃபீவர் ஆரம்பித்துவிட்டது. இந்நேரம் பல பேர் பைகளில் துணியை மடித்துவைத்துக்கொண்டு, எப்போது சொந்த ஊருக்குக் கிளம்பலாம் என்று காத்துக்கொண்டிருப்பீர்கள். சிலர் எப்போதோ கிளம்பி வீட்டை அடைந்திருப்பீர்கள். மற்ற நாள்களில் பயணிப்பதைவிட தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகைகள் சீசனில் பயணிக்கும்போது நமக்குக் கூடுதல் கவனம் தேவை. முக்கியமாக டிராவல் டிப்ரஷனிலும், ஆர்வத்திலும் பல தவறுகளும் கவனச் சிதறல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்தப் பிரச்னையுமின்றி இனிமையாக உங்கள் பயணத்தை மேற்கொள்ள இந்த விஷயங்களில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கார்
கார்

1. மற்ற நாள்களில் சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல 2 மணிநேரம்தான் ஆகும். ஆனால், பண்டிகை விடுமுறை என்றால் தாம்பரம் செல்லவே 3 மணிநேரம் ஆகிவிடும். பேருந்து மற்றும் ரயில்களில் செல்பவர்கள் விடுமுறைக்கு ஒரு நாள் முன்பே கிளம்புவதுதான் சரி. ஆனால், கார்களில் செல்பவர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் சென்றால் வாகன நெரிசல்களைத் தவிர்க்கலாம். எப்படியும் டோல்கேட்டில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் என்பதால், அதை மனதில் வைத்து உங்கள் நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

2. மெட்ரோ சிட்டியிலிருந்து கிளம்புபவர்கள், எனக்கு விடியற்காலை செட் ஆகாது என்பவர்கள், முந்தைய நாளே ஏதாவது ஒரு ரயில்நிலையத்திலோ அல்லது மெட்ரோ ஸ்டேஷனிலோ வாகனத்தை பார்க் செய்துவிட்டு அடுத்த நாள் பார்க்கிங் சென்று அங்கிருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினால் கொஞ்சம் டிராஃபிக்கைத் தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

3. பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் பயணத்தின்போது பெட்ரோல்/டீசல் நிரப்புவதைத் தவிர்க்கலாம். முந்தைய நாள் இரவே எரிபொருள் நிரப்பிவிட்டால் பெட்ரோல் பங்க் டிராஃபிக்கை குறைக்கலாம்.

4. சுமார் 500 கி.மீ தாண்டி தொலைதூரங்களுக்குப் பயணிப்பவர்கள் உணவைப் பற்றி திட்டமிட்டுக்கொள்வது அவசியம். இங்கே டெக்னாலஜியை கொஞ்சம் பயன்படுத்துவோம். ஜொமோட்டோ, கூகுள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஹோட்டல்களின் நேரத்தைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நடுநிசி ஹோட்டல்கள் எங்கே இருக்கிறது என்பதை ஃபேஸ்புக், ஜொமோட்டோ, கூகுள் மேப்ஸ் போன்றவற்றில் பார்க்கலாம்.

traval
traval

5. பயணம் முடிந்து திரும்பி வருபவர்கள் எப்படியும் ஸ்வீட் பாக்ஸ், ஜூஸ், பழங்கள், தின்பண்டங்கள் என அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்புவீர்கள். இவையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுசென்று தின்றால் நல்லது. இருக்குதே என காரிலேயே மொத்தத்தையும் முடித்து விடாதீர்கள். முறுக்கு, லட்டு, சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிடும்போது, முதலில் உற்சாகமாக இருக்கும். ஆனால், இவை உடலை விரைவில் மந்தமாக்கித் தூக்கத்தை வரவழைக்கும்.

6. பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் உதவும். இதெல்லாம் லீவு நாள்களில் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் தண்ணீர் அதிகம் எடுத்துச்செல்லுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. டோல்கேட்டில் நேரத்தை மிச்சப்படுத்த காரில் போதுமான அளவு சில்லறை காசுகள் வைத்துக்கொள்வது உதவும்.

8. காரில் போகும்போது சீட் பெல்ட் கட்டாயம். முன் பக்கம் உட்கார்ந்திருக்கும் இருவரும் சீட் பெல்ட் போட வேண்டும். ரூல்ஸ் என்பதைத் தாண்டி பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

தீபாவளிக்கு கார் பயணமா... இந்த விஷயங்களில் கவனம் தேவை! #safetravels

9. களைப்பாக உணர்ந்தால் Service ரோட்டில் வண்டியைவிடுங்கள். தூக்கம் வந்தால் காரை நிறுத்திவிட்டு `வார்னிங் லைட்ஸ்’ ஒளிரவிடுங்கள். அனைத்துக் கதவு, ஜன்னல்களையும் மூடிவிட்டு ஒரு சின்ன தூக்கம் போட்ட பிறகு காரை ஓட்டலாம்.

10. டயர்களுக்குக் காற்று நிரப்பும்போது மறக்காமல் ஸ்டெப்னி வீலுக்கும் காற்றை நிரப்புங்கள். டியூப்லெஸ் டயர்களாக இருந்தாலும்கூட ஸ்பேர் டியூப் இருப்பது நல்லது. காரணம், டியூப்லெஸ் டயரில் சைடு வாலில் பஞ்சரானால் காற்று நிற்காது. டியூப்லெஸ் டயருக்கான பஞ்சர் கிட், சீலன்ட் கிட் காருக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

11. பண்டிகை கால பயணத்தின்போது நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் வேகத்தில் கவனம் தேவை. அதிநவீன கார்களிலேயே அதிகப்படியான ஹெட்லைட் தூரம் 600 மீட்டர்தான். பழைய கார்களில் இது இன்னும் குறைவு. இரவில் பயணிக்கும்போது ஹெட்லைட் ஒளி தெரியும் தூரத்தைவிட 100 மீட்டர் முன்பு கார் நிற்கும் அளவு வேகத்தில் பயணிப்பது சிறப்பானது. குறைவான ஹெட்லைட் தூரம் என்றால் விசிபிலிட்டி சரியாக இருக்காது, அப்படியிருக்க அதிக வேகத்தில் போகவே கூடாது

12. வேகமாக ஓட்டவும் என்ஜாய் பண்ணவும் ஆர்வம் இருக்கும். அதற்காக, தேவையில்லாமல் ஓவர்டேக் செய்வது கூடாது. நீங்கள் பொறுமையாகப் போகிறீர்கள் என்றால், வேகமாக வரும் காருக்கு வழிவிடுவது அவசியம். ஒருவர் ஓவர்டேக் செய்யும்போது அவரிடம் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பது இருவருக்குமே ஆபத்து.

13. பண்டிகை காலம் என்றாலே டாஸ்மாக் கடைகளுக்கு வசூல் வேட்டை. போலீஸ் செக்கிங் அதிகம் இருக்காது என்ற நம்பிக்கையில் பல பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் எண்ணத்தில் இருப்பார்கள். இது அறவே கூடாது. உங்களுடைய உயிர் மட்டுமல்ல, உங்களைப்போலவே விடுமுறையை குடும்பத்தோடு கொண்டாடச் சென்றுகொண்டிருக்கும் பலருடைய உயிருக்கும் ஆபத்தை வரவழைக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

தீபாவளிக்கு கார் பயணமா... இந்த விஷயங்களில் கவனம் தேவை! #safetravels

பயணங்களில் தீபாவளி வெடிகளிடம் உஷார்!

1. கார்களில் பயணிப்பவர்களிடம் ஒரு குட்டி ஃபயர் எக்ஸ்டிங்குஷர் இருப்பது அவசியம். அதுமட்டுமல்ல, ஒரு முதலுதவிப் பெட்டியும் தேவை. இவை உங்கள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சாலையில் இருக்கும் உங்கள் சக பயணியின் பாதுகாப்புக்கும் உதவும்.

2. பயணத்தின்போது கார் ஜன்னல்களை மூடிவைத்துக்கொள்வது அவசியம். இதனால், வெடிச்சத்தங்களில் காதைக் கிழிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, வெடித்த பேப்பர்கள் காருக்குள் வந்து கார் சீட்டை பொசுக்காமல் இருக்கும். கையில் வெடி கொளுத்தும் சில சூப்பர் வில்லன்களிடம் இருந்தும் உங்கள் கார்களைப் பாதுகாக்கலாம்.

3. காரை பார்க் செய்யும்போது குறைந்தபட்சம் அடர்ந்த மரத்தின் கீழ் அல்லது ஏதாவது ஒரு கூரையின் கீழ் காரை நிறுத்துங்கள். பட்டாசு, ராக்கெட் போன்றவற்றால் ஏற்படும் பெயின்ட் சேதத்தை இது தவிர்த்துவிடும். காரை பார்க் செய்யும்போது ஜன்னல்களைக் கட்டாயம் மூடிவிட வேண்டும்.

தீபாவளிக்கு கார் பயணமா... இந்த விஷயங்களில் கவனம் தேவை! #safetravels

4. கார் கவர்களைப் பயன்படுத்த வேண்டாம். கார் கவர்கள் பிளாஸ்டிக் ஃபைபர்களால் ஆனவை. இவை சுலபமாக தீப்பிடிக்கக்கூடியவை. இதனால், நெரிசலான பகுதிகளில் வசிப்பவர்கள், காரை சாலையில் பார்க் செய்பவர்கள் கார் கவர்களை எடுத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் கார் கவர் மீது தண்ணீர் ஊற்றிவிடுங்கள். பண்டிகைக்கு கார் கவரை கழுவியதாகவும் இருக்கும்.

5. யாராவது சாலையில் பட்டாசு வெடிப்பதைப் பார்த்தால் 100 மீட்டருக்கு முன்பே நிறுத்திவிடுங்கள். சின்ன பட்டாசுகளால் கார் வெடித்துவிடும், தீப்பற்றிவிடும் என்றெல்லாம் பயப்படவேண்டாம். கார்களில் இருப்பது பாதுகாப்பானதுதான். ஆனால், இந்தப் பட்டாசுகளின் நெருப்பு காரை கார் கண்ணாடிகளையும், பெயின்ட்டையும் சேதமாக்கி உங்கள் காரின் அழகைத் தீர்த்துக்கட்டிவிடும்.

கொள்ளை அழகு, கொஞ்சம் ஆபத்து... இமயமலையின் `திக் திக்' சாலைகளில் ஒரு மெர்சல் பயணம்! #SpitiAdventure
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு