Published:Updated:

பயணத்தின் ருசி... தீரா உலா

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

பயணத்தின் ருசி... தீரா உலா

காயத்ரி சித்தார்த்

Published:Updated:
தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
தீரா உலா

நகர்தல் நதியின் தியானம்

வளர்தல் செடியின் தியானம்

சும்மாயிருத்தல் பாறையின் தியானம்

- யுவன் சந்திரசேகர்

நதி போல, செடி போல, பாறை போல இல்லாமல் எனக்கு தியானம் செய்ய பல வழிகள் உண்டு. சமைப்பேன், வாசிப்பேன், கோலம் போடுவேன், குழந்தையைக் கொஞ்சுவேன், இனிப்பு ருசிப்பேன், இலக்கின்றி நடப்பேன், கை வீசிக்கொண்டு கடைத்தெருவில் சுற்றுவேன், கோப்பை நிறைய தேநீருடன் பார்த்த திரைப்படங்களை மீண்டும் பார்ப்பேன்... இவ்வகைத் தியானங்களால் எல்லாம் மனம் நிறைவுறாதபோது பயணம் போவதற்கு ஆயத்தமாவேன்!

பயணத்தின் ருசி... தீரா உலா

நினைவுகளின் வால் பிடித்துப் பிடித்துப் பறந்தால் இன்னமும் நினைவிலிருக்கும் நம் முதல் நினைவைத் தொட்டுவிட முடியும்தானே? அப்படித் தாவித் தாவி, என் முதல் பயண நினைவைத் தொட்டெடுத்துப் பார்க்கிறேன். அதிகபட்சமாக என் வயது ஏழு இருக்கலாம் அப்போது. ஈரோட்டை ஒட்டியிருக்கும் கிராமத்தி லிருந்தோம். அங்கே ‘வடியான்’ (வடிவேலு என்பதன் மரூஉப் பெயர்!) என்றொருவர் இருந்தார். பெரும்பாலும் பேரூராட்சி எல்லையைத் தாண்டியறியாத அந்தக் கிராமத்து மக்களை குடும்பம் குடும்பமாக ஒன்றிணைத்து எல்லோருக்கும் தோதாக நாள் பார்த்து, பேருந்து ஏற்பாடு செய்து ‘வடியான் டூர்’ அழைத்துப் போவார். மக்களும் புளியோதரை, தக்காளித் தொக்கு, தயிர் சாதம், ஊறுகாயோடு பிள்ளைகளையும் மூட்டை கட்டி தூக்கிக்கொண்டு உற்சாகமாகக் கிளம்பி விடுவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தக் காலத்தில் மத்திய வர்க்கத்து மனிதர் களை, தத்தமது சொந்த வேலைகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, பயணம் என்ற பெயரில் பொதிமூட்டைகளும் புளியஞ் சோறுமாக வீட்டைவிட்டு வெளியேற்றும் சக்தி பெரும்பாலும் பக்திக்கு மட்டுமே இருந்ததென நினைக்கிறேன்.

தீரா உலா
தீரா உலா

செக்கு மாடுகளைப் போல வீட்டை மட்டுமே சுற்றி வரும் குடும்பத்துப் பெண்கள்கூட திடுமென `நாளும் கிழமையுமா காலங்காத்தால பழநியாண்டவர் கனவுல வந்து, `ஏனம்மிணி என்னய மறந்துபோயிட்டியா'ன்னு கேட்டுப்புட்டாரு. ஒருநடை போய் பாத்துட்டு வந்தாத்தான் நிம்மதி' என்று அவசர கதியாகக் கிளம்பி, மூன்று பஸ் மாற்றி அலைந்து, விஞ்ச்சுக்கு வரிசையில் காத்திருந்து, அந்தரத்தில் நகரும் பெட்டியில் திகிலுடன் பயணித்து, பழநி முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசித்துவிட்டு, கணவருக்கும் பிள்ளைகளுக்கும் மொட்டை போட்டு, பஞ்சாமிர்தம், விபூதிப்பொட்டலங்கள் சகிதமாக இரவிலோ, விடியற்காலையிலோ அயர்ச்சியுடன் திரும்புவார்கள். வந்ததும் பழையபடி நுகத்தை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு மீண்டும் வீட்டைச் சுற்றத் தொடங்குவார்கள். ஆனால், முன்பை விடவும் உற்சாகமாக!

எங்களுக்கும் இளமையில் பக்தியின் பெயரிலேயே பயணங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், சுசீந்திரம், மதுரை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்கள் கோயில்கொண்ட தலங்களாக இல்லா திருந்தால் அவற்றைப் பார்க்கும் பேறு கிட்டியிருக்காதென்றே தோன்றுகிறது.

தீரா உலா
தீரா உலா

ராமேஸ்வரக் கிணறுகளில் குளிரில் நடுநடுங்கிக் குளித்ததும், பாம்பன் பாலம் அந்தப் பருவத்தின் வியப்பெனவே நீண்டதும், தாணுமாலயன் என்ற சொற்சேர்க்கையை அப்பா சொல்லக்கேட்டு வியந்ததும், திருச்செந்தூர் மணற்பரப்பில் கிடந்து உறங்கியதும், குமரிக்கடலில் கதிரவனைப் போன்றே மூழ்கியெழுந்ததும், படகேறிப் போய்ப் பார்த்த விவேகானந்தர் பாறையும், தன் நிழல் தரையில் விழாது என நம்பச் சொன்ன தஞ்சை கோபுரமும், சிதம்பரத்தின் ஆயிரம் கால் மண்டபமும், கண்ணாடிப் பிம்பங்களென நாற்றிசையிலும் அளவெடுத்தாற்போல உயர்ந்து நின்ற மீனாட்சி கோயிலும் இன்றும் நேற்றென என் நினைவில் இருக்கின்றன.

விடியலில் தெரியும் அதே ஊர்ப்புறங்கள், அந்திக்கருக்கலில் முற்றிலும் வேறாகத் தெரியும் அற்புதத்தை ரசிக்க பயணமும் ஒரு ஜன்னல் சீட்டும் அவசியம் தேவை.

பாதையெங்கும் பச்சை போர்த்திய வயல்கள், பாசிபடர்ந்த குளங்கள், வழித்துணையாக ஓடிவரும் வாய்க்கால்கள், அணிவகுத்து நிற்கும் மரங்கள், ஆசையாகக் கையசைக்கும் குழந்தைகள், வழிகாட்டும் அண்ணன்கள், வாசலில் கோலம் போடும் அக்காக்கள், வீட்டுத் திண்ணைகளில் இராத் தங்க அனுமதித்த அன்பான பெரியவர்கள், கைக்குழந்தைக்குப் பாலும், எங்களுக்கு ஹார்லிக்ஸுமென ஆற்றிக் கொடுத்துவிட்டு காசு வாங்க மறுத்த டீக்கடை மாமாக்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், அங்கே நடுநிசியிலும் அலறும் ஒலிபெருக்கிகள், பரோட்டா சால்னாக்கள், ஒவ்வொரு கோயில் வாசலிலும் அடம்பிடித்து வாங்கிக்கொண்ட பலூன்கள், கலர் கண் கண்ணாடிகள், சுழலும் வண்ணக் காற்றாடிகள்... இத்தனையும் பயணத்திலன்றி வேறு எதில் கண்டிருந்தாலும் கேட்டிருந்தாலும் என் பால்யத்தில் பசு மரத்தாணிகளாகப் பதிந்திருக்காது. இப்போது யோசித் தால் இவையனைத்திலிருந்தும் மேலெழுந்து நிற்பது வழி நெடுகிலும் சந்தித்த மனிதர்களின் அன்பென்றே தோன்றுகிறது. அதுவே பயணத்தின் ருசி. அதுவே ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் மனத்தில் வீழ்படிவாகத் தேங்கும் அனுபவம். மீண்டும் மீண்டும் பயணிக்கவென சிறகு விரிக்கும் மனிதர்கள் இந்த அனுபவத்தை ருசிக்கவே வெளியே கிளம்புகிறார்கள்.

உலா
உலா

சிறு வயதில் ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ பக்தியின்பாற்பட்டு அமைந்திருந்த என் பயணங்கள், படிப்பு நிமித்தம், பணி நிமித்தமென ஒருகட்டத்தில் என் தினசரிகளுள் ஒன்றாக மாறின. அப்போது பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப் பாளராகவும் இருந்தேன்.

வாரம் முழுக்க ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம் என்று சுற்றிக் கொண்டேயிருந்தபோதும் அது அலுக்கவே அலுக்காத வேலையாகத் தோன்றியது, அதிகாலையிலும் நண்பகலிலும் இரவிலுமாக எல்லாப் பொழுதுகளிலும் பயணிக்க வேண்டி யிருந்ததால்தான்.

விடியலில் தெரியும் அதே ஊர்ப்புறங்கள், அந்திக்கருக்கலில் முற்றிலும் வேறாகத் தெரியும் அற்புதத்தை ரசிக்க பயணமும் ஒரு ஜன்னல் சீட்டும் அவசியம் தேவை.

ஒருமுறை முன்பதிவு செய்ய நேரமின்றி காஞ்சிக்குச் செல்ல அவசரமாக டிக்கெட் எடுத்து ரயிலில் பொதுப்பெட்டியில் ஏறியிருந்தேன். பெட்டி நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் ஆண்கள். நிற்க இடம் கிடைத்ததே பெரிதென்ற நிலைமை. ஒரு மணி நேரத்தில் கால்கள் கடுக்க ஆரம் பித்தன.

பெட்டியின் மறுமூலையில் குடும்பமாக அமர்ந்திருந்தவர் களில் வயதான பெண்மணி அங்கிருந்து என்னை கையசைத்து அழைத்தார். `என்னையா...' என்று விழித்து, பின் மெல்ல கூட்டத்தினுள் நீந்தி அவர்களை அடைந்தேன்.

இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களின் ஆறு வயது, எட்டு வயதுப் பிள்ளைகளைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டு, அனைவரும் நெருக்கி அமர்ந்துகொண்டு என்னை அமரச் சொன்னார்கள். தயங்கி உட்கார்ந்த என்னிடமிருந்து மனதார நன்றி எனும் சொல்லெழுந்தது. அச்சொல்லை உதடுகளை முந்திக்கொண்டு முதலில் சொன்னது கால்களா, நெகிழ்ந்து நின்ற மனமா என்பதில் எனக்கு இன்னமும் குழப்பமிருக்கிறது.

சின்னஞ்சிறு உதவிதான். ஆனால், சுமப்பதற்கு எத்தனை பாரமானதாயிருக்கிறது. எங்காவது இதை இறக்கிவைத்துவிட வேண்டும் என்பது போல... இனியும் இதைச் சுமக்கவியலாது என்பதைப் போல... நானும் என்னால் இயன்றபோதெல்லாம் பிறரிடம் அதை இறக்கிவைக்கிறேன். எடுத்துப் போங்கள் என கை மாற்றிக் கொடுக்கிறேன். அவர்களும் புன்னகையுடன் நெகிழ்ச்சியுடன் பெற்றுப் போகிறார்கள்தாம். ஆனால், அந்த உதவி, அக்கணநேரக் கருணை, அதன் மெல்லிய ஈரம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. உண்மையில் இந்த உலகம் காய்ந்து கருகிவிடாமல் காத்து நிற்பது இம்மெல்லிய ஈரம்தான்!

எங்கே விட்டேன்..? தினசரி பயணங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேனில்லையா! திருமணம் முடிந்ததும் விமானத்தில் முதல் முறையாகத் தனியே பயணித்து குவைத் வந்து சேர்ந்தேன். எங்களுடையது காதல் திருமணம். எல்லோர் வீட்டிலும் மணமகன் மணப் பெண்ணுக்குத்தானே திருமணப் பொருத்தம் பார்ப்பார்கள்... எனக்கு மட்டும் மாமனார் மாமியாருக்கும் சேர்த்தே பார்த்தது போல அப்படியொரு பொருத்தம்.

எனக்குப் புகைப்படம் எடுத்துக்கொள்ளப் பிடிக்கும். என் மாமனார் பிறவிப் புகைப்படக் கலைஞர். கணவரும் கனமான கேமராக்களில் வகை வகையாக லென்ஸ்களைப் பொருத்தி விதவிதமாக எடுப்பார்.

எனக்குத் திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். இங்கே வாரா வாரம் கோயிலுக்குப் போவதுபோல, தியேட்டருக்குப் போவது வழக்கமாக இருந்தது. கணவரின் மடிக்கணினி முழுக்க உலகத் திரைப்படங்கள்.

எனக்குச் சாப்பிடப் பிடிக்கும். என் மாமியார் தினமும் இரண்டு குழம்பு, மூன்று வகை தொடுகறிகள் எனப் பிரமாதமாகச் சமைப்பார். கணவரோ அமெரிக்க, அரேபிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, சீன, தாய் உணவுகள் அனைத்தையும் விரும்பிச் சாப்பிடுவார். இந்தப் பட்டியலில் முக்கியமானது, முன்பே சொன்னதுபோல எனக்குப் பயணங்கள் மிகப் பிடிக்கும்.

இங்கே அப்பாவும் அம்மாவும் அமெரிக்க, ஐரோப்பிய, கிழக்காசிய நாடுகள் பெரும்பாலானவற்றைச் சுற்றி முடித்தவர்கள். இந்தியாவுக்குள்ளும் அவர்கள் போகாத இடங்கள் மிகச் சொற்பம். உண்மையில் என்னை விடவும் இந்தப் பயணக்கட்டுரை எழுதத் தகுதியானவர்கள் அவர்கள் இருவருமே.

இனி, நீங்கள் எங்களுடன் கைகோத்து வரலாம். லெபனீய பனிமலைகளில் எங்களுடன் சேர்ந்து உலவலாம். எகிப்திய மர்மங்களைக் கண்டு அதிசயிக்கலாம். துருக்கிய ஓட்டமான் சாம்ராஜ்யத்தின் நீண்ட நெடிய மன்னராட்சியின் கீழ் வாழலாம். இலங்கையின் நீண்ட தெருக்களில் சுற்றலாம். எத்தனை குழந்தைகள் பாடியும் லண்டன் பாலம் இன்னும் வீழாமல் கம்பீரமாக நிற்பதை ரசிக்கலாம். சிங்கையின் ஒழுங்கு கண்டு திகைக்கலாம். வளைகுடா பாலைவனங்களில் ஒட்டகத்தின்மீது பயணிக்கலாம்.

வாருங்கள் ரசிப்போம்!

 உலா
உலா

நான்...

காயத்ரி சித்தார்த்... தமிழ் முனைவர். குவைத்தில் வசிக்கிறேன். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். கணவர் சித்தார்த் வெங்கடேசன், மென்பொருள் வல்லுநர். எங்கள் செல்ல மகள்கள் அமுதினி, கீர்த்தினி.

நாங்கள் சென்றுவந்த பயணங்களைப் பற்றிய அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். இனி நீங்கள் காயு, சித்து, அம்மு, கீர்த்துவென்றும் எங்களை அழைக்கலாம்!