Published:Updated:

நேரு, `அங்கிள்' ராகுல், மோடி, 40 நூறு ரூபாய்..! - மாமல்லபுரம் சீனியர் கைடின் நினைவுகள்

சீனுவாசன் - மாமல்லபுரம் கைடு
சீனுவாசன் - மாமல்லபுரம் கைடு ( தே.அசோக்குமார் )

ராகுல் காந்தி என்னைத் தனியாக அழைத்துச்சென்றார். கொஞ்சம் பணத்தை எடுத்து, ‘அங்கிள் வச்சுக்குங்க’ன்னு கொடுத்தார். எனக்கு வெலவெலத்துப் போச்சு. உடனே, என்னோட பேன்ட் பாக்கெட்டில் சொருகிவிட்டார். 40 நூறு ரூபாய் தாள்கள் அதில் இருந்தன.

மோடி- ஜின்பிங் மாமல்லபுரம் வருகையை உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மீடியாக்களும் அங்கே குவிந்திருக்கின்றன. தொல்லியல் சின்னங்களைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கைடுகளும் ஓய்வாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில், மாமல்லபுரத்தின் சீனியர் கைடான சீனுவாசன் என்பவரைச் சந்தித்து அவரின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

“எனக்கு 75 வயசாகுது. நான் 54 வருஷமா டூரிஸ்ட் கைடா இருக்கிறேன். அப்போ, மாமல்லபுரத்தில் மக்கள்தொகை மிகவும் குறைவு. மாமல்லபுரம் முழுக்கவே செம்மண் ரோடுதான். சரியான பேருந்து வசதிகள் கிடையாது. கடற்கரைக் கோயில் முன்பு 16 கிணறுகள் இருந்தன. அதைத்தான் குடிப்பதற்குப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்த கிணறுகளை மூடிவிட்டார்கள். அங்கே ஒரு சங்கு வியாபாரி, சங்குல பேரு எழுதிக் கொடுப்பார். மற்றபடி கடைகள் எதுவும் கிடையாது. சுற்றுலாப் பயணிகளும் ரொம்பக் குறைவாதான் வருவாங்க. இப்போது போல புல்தரைகள், கம்பி வேலிகள் கிடையாது. மெதுவா வளர்ந்து வந்த இந்தப் பகுதிக்கு, யுனெஸ்கோ அங்கீகாரத்தால பல நாடுகள்ல இருந்து சுற்றுலாப் பயணிகள் வர்றாங்க. உலக அளவுல மாமல்லபுரத்துக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.

1956-ல் பிரதமர் நேரு, சீன அதிபர் சூ-யென்-லாய் ஆகியோர் வந்தாங்க. அப்போ, நான் பள்ளிச் சிறுவன். அவர்களை தேசியக் கொடி அசைத்து வரவேற்றிருக்கிறோம். அதுபோல 1976-ல் இந்திரா காந்தி பிரதமரா இருந்தபோது, குடும்பத்தோட மாமல்லபுரம் வந்தாங்க. கேரளத்திலிருந்து வந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு இங்குள்ள சிற்பங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார். ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என எல்லோரையும் பார்த்தோம். அப்ப, ராகுல் காந்தி சிறுவனா துறுதுறுன்னு இருப்பார். அவர்கள், இங்குள்ள ஹோட்டல்ல மூணு நாள் தங்கியிருந்தாங்க. முதல் நாள், பாறைகள்மீது ஏறிப்பார்த்தாங்க. அப்போ, கட்டடங்கள் அதிகமா இல்லை. ஊரே பச்சைப் பசேல்னு தெரிஞ்சுது. அதனால சுற்றியுள்ள கிராமங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

ரெண்டாவது நாள், அருகில் உள்ள கிராமங்களுக்கு கார்ல பயணம் செய்தாங்க. திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில, ஓர் இடத்துல காங்கிரஸ் கொடி பறப்பதைப் பார்த்தாங்க. அந்தக் கொடியைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினாங்க. இங்க இருக்கும் காங்கிரஸ் தொண்டரைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அதிகாரிங்க உடனே விசாரிச்சு, அந்த காங்கிரஸ் தொண்டர் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க. இந்திரா காந்தியைப் பார்த்ததும் அவருக்கு ஒண்ணுமே புரியல. அவரோடு அங்கேயே உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசினாங்க. ‘நான் ஒரு விவசாயி. எங்க பகுதி, மணல் பாங்கான பூமி. சரியான நீர்ப்பாசனம் கிடையாது’னு சொன்னார். என்ன சாப்பிட இருக்குன்னு இந்திரா காந்தி கேட்டாங்க. கூழும், வாலை மீன் கருவாடும் வறுத்து வெச்சிருந்தார். இது என்னன்னு அதிகாரிகள்கிட்ட கேட்டாங்க. அதிகாரிகளும் அவருக்கு விளக்கிச் சொன்னாங்க. இதை நான் டேஸ்ட் பண்ணலாமான்னு இந்திரா கேட்டாங்க. அதிகாரிகள் வேண்டாம்னு தடுத்துட்டாங்க. இந்திரா காந்தி போனதுக்கப்புறம், அந்த விவசாயிக்காக அங்குள்ள குட்டைகளைச் சீர்படுத்திக் கொடுத்தாங்க.

ராஜீவ் காந்தி இறக்கிறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி, ராகுல் காந்தி மாமல்லபுரம் வந்திருந்தார். அப்போ, அவருக்கு விளக்கம் கொடுக்க ஒரு டூரிஸ்ட் கைடை ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஆனா, அவரால சரியான விளக்கம் கொடுக்க முடியல. உடனே என்னை அழைச்சுகிட்டுப் போனாங்க. நல்லா சிவப்பா, பார்க்க ரொம்ப அழகான இளைஞனா இருந்தார் ராகுல். அவருக்கு நான்தான் எல்லாத்தையும் விளக்கிச் சொன்னேன்.

சீனுவாசன், மாமல்லபுரம் கைடு
சீனுவாசன், மாமல்லபுரம் கைடு
தே.அசோக்குமார்

முடித்த பிறகு அருகிலிருந்தவங்கள சுற்றிப் பார்த்துட்டு, என்னைத் தனியா அழைச்சுக்கிட்டு போனார். கொஞ்சம் பணத்தை எடுத்து, ‘அங்கிள் வச்சுக்குங்க’ன்னு கொடுத்தார். எனக்கு வெலவெலத்துப் போச்சு. உடனே, என்னோட பேன்ட் பாக்கெட்ல சொருகிவிட்டார். 40 நூறு ரூபாய் தாள்கள் இருந்துச்சு. செக்யூரிட்டி ஆபீஸர்ஸ் எல்லாம் டேக் இட் ஈசின்னு சொல்லி தட்டிக் கொடுத்தாங்க. அது என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவமா மாறிடுச்சு.

ஜோதிபாசு, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள்ல இருந்து வந்த அமைச்சர்களுக்கும் கைடா இருந்திருக்கிறேன். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அர்ஜுனன் தபசு சிற்பத்தை விரும்பிப் பார்ப்பாங்க. ஜெர்மன்காரங்க மகிஷாசுரமர்த்தினி குடைவரைக் கோயிலையும் விரும்பிப் பார்ப்பாங்க. இஸ்ரேல்காரங்க, ஒவ்வொன்னைப் பற்றி தோண்டித்தோண்டி அதிகமான கேள்விகள் கேட்டு குடைச்சல் கொடுப்பாங்க. வெளிநாட்டுப் பயணிகள், அவங்க கலாசாரம் எப்படி இருந்தாலும், நம்ம கலாசாரத்துக்கு ஏற்ப எல்லார்கிட்டயும் பழகுவாங்க. பிசினஸ் சுற்றுலா வர்றவங்களவிட, கலாசார சுற்றுலா வர்றவங்க, ஒவ்வொன்னையும் நுணுக்கமா தெரிஞ்சிக்க ஆசைப்படுவாங்க. கோயில்ல எப்படி பூஜை செய்வது, காலை உணவான இட்லி, தோசை பத்தி கேட்டுத் தெரிஞ்சிக்குவாங்க. முட்டை பரோட்டோ போடுறதை ரசிச்சுப் பார்ப்பாங்க. அதுல கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்ப்பாங்க. சிலபேர், விவசாயம் செய்ற இடங்களைப் பார்ப்பார்கள். சின்னப் பசங்களை ஏன் ஸ்கூலுக்கு அனுப்புறீங்கன்னு கேட்பாங்க. சிலபேர், புடவை கட்டிக்க ஆசைப்படுவாங்க. கிராமங்களுக்குச் சென்று புடவை கட்டிக்கிட்டு வருவாங்க. இப்படி சுற்றுலா வர்ற வெளிநாட்டுப் பயணிகள் நம்ம கலாசாரத்தைப் பத்தி தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கிறாங்க.

மோடிக்காக தயாராகும் மாமல்லபுரம்
மோடிக்காக தயாராகும் மாமல்லபுரம்

மோடி-ஜின்பிங் வர்றதால, மாமல்லபுரத்தில் இப்போ ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி இருக்காங்க. இதனால மாமல்லபுரம் பார்ப்பதற்கு அழகா இருக்கு. இதை இப்படியே தொடர்ந்து பராமரிக்கணும். மோடியை நேரா பார்க்கணும்னு ஆசையா இருக்கு” என்கிறார்.

அவரின் ஆசை நிறைவேறட்டும்!

அடுத்த கட்டுரைக்கு