Published:Updated:

புல் தீவு... வேர்ப் பாலம்... சாகசக் குகை! - வடகிழக்கில் வசந்த சுற்றுலா!

டவ்க்கி நதி
பிரீமியம் ஸ்டோரி
டவ்க்கி நதி

பயணம்

புல் தீவு... வேர்ப் பாலம்... சாகசக் குகை! - வடகிழக்கில் வசந்த சுற்றுலா!

பயணம்

Published:Updated:
டவ்க்கி நதி
பிரீமியம் ஸ்டோரி
டவ்க்கி நதி

ஆயிரம் நவீன வசதிகள் நமது லௌகீக வாழ்க்கைக்குத் தேவைப்பட்டாலும், மனத்தின் மகிழ்ச்சியானது இயற்கை வனப்புகளில்தான் கொட்டிக்கிடக்கிறது. அப்படி ஒரு நெஞ்சூறும் பயண அனுபவத்தைக் காண, நானும் என் நண்பர் பிரசன்னாவும் முடிவெடுத்தோம். மலையையும் மழையையும் ஒன்றாகப் பார்க்க ஏதுவாக, மழைக்காலமான செப்டம்பரில் பயணத்தைத் திட்டமிட்டோம். மழை அதிகம் பெய்யும் மாநிலத்துக்கு, மழை சீசனில் செல்வதுதானே சரி?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களாக அடுத்தடுத்து அமைந்துள்ள மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள்தான் எங்கள் பயண இலக்கு. இயற்கை தன் மொத்த அழகையும் கொட்டி உருவாக்கிய இந்த இரண்டு மாநிலங்களுமே பரவச அனுபவத்தை அள்ளித்தருபவை. வடக்கு எல்லையாக பிரம்மபுத்திராவையும், தெற்கு எல்லையாக வங்க தேசத்தையும் கொண்ட மேகாலயா, மலைகளாலும் காடுகளாலும் கண்களுக்கு இயற்கை வனப்புகளைப் பந்தி வைக்கிறது. உலகில் அதிக மழை பெய்யும் பகுதிகள் இந்த மாநிலத்தில் இருப்பதால், வீசும் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கிறது. மாநில மக்கள் பேசும் காரோ, காசி ஆகிய மொழிகளின் ஒலி அவ்வளவு அழகு. மணிப்பூரைப் பொறுத்தமட்டில், இயற்கைக்குப் பஞ்சமில்லாத மாநிலம்தான். ஆனால், மியான்மரைக் கிழக்கு எல்லையாகக் கொண்டுள்ளதால், கொஞ்சம் திக் திக் உணர்வுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆன்மிகப் பிரியர்களுக்கும் இந்த மாநிலம் ஏற்றது. கோபியர்களுடன் கிருஷ்ணரும் ராதையும் இணைந்து ஆடுவதாக நம்பப்படும் ராசலீலையை விளக்கும் மணிப்புரி நடனம் இங்கு பிரசித்தம்.

கிராங்சூரி அருவி - ரூட் பிரிட்ஜ்
கிராங்சூரி அருவி - ரூட் பிரிட்ஜ்

முதலில் விமானம் மூலம் மணிப்பூர்த் தலைநகர் இம்பால் சென்றோம். எளிமையான ஓட்டு வீடுகள், சாலைகளில் ஊறும் கறுப்பு வண்ண ஆட்டோக்கள் என மொத்தச் சூழலும் கேரளாவை காப்பியடித்ததுபோல இருந்தது. அங்கு முதலில் சென்ற இடமான இமா கைத்தல் (ima kaithal), ஒரு மார்க்கெட். முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படுகிறது. ஆண்களுக்கு இங்கு கடைவைக்க அனுமதி கிடையாது. அதேபோல், பெண்களும் தன் அம்மாவிடமிருந்தோ, மாமியாரிடமிருந்தோதான் கடை நடத்த உரிமம் பெறமுடியுமாம். 500 ஆண்டுகள் பழைமையானது இந்த மார்க்கெட். `வெறும் மார்க்கெட்தானே' என்று நினைத்துவிட வேண்டாம். கெச்சலான குறுகிய இடத்தில் பெண்கள் மட்டும் அமர்ந்து வியாபாரம் செய்வதும், அங்கு புழங்கும் மனிதர்களும், சொல்லொண்ணா அனுபவத்தை நமக்குள் கடத்துகிறார்கள். மனிதர்கள் முதலில் படிக்க வேண்டியது, விதவிதமான மனிதர்களைத்தானே?!

அடுத்து, வித்தியாசமான அனுபவத்தைத் தரும் லோக்தத் ஏரி. மிஸ் செய்யக்கூடாத இடங்களில் இது முதன்மை பெறுகிறது. இமா கைத்தலில் இருந்து லோக்தக் ஏரிக்குச் சென்றபோது, இரவு தொடங்கியிருந்தது. அன்று பௌர்ணமி. நிலவின் ஒளியில் ஏரியில் படகுப் பயணம் மேற்கொண்டது சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. லோக்தக் ஏரி, 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மிகப் பெரிய நன்னீர் ஏரி. ஏரிக்குள் பல சிறு தீவுகள் மிதக்கின்றன. ஏரியில் ஒரு வகையான புல் தண்ணீரிலேயே வளர்ந்து, முதிர்ந்து மக்கி, அதன்பின்பு அதன்மீதே மீண்டும் வளரும். பல ஆண்டுகளாக இது நடந்து, தண்ணீருக்கடியில் இருந்து ஐந்தடி அளவில் ஒரு மிதக்கும் படுக்கைபோல் அது ஆகியிருக்கும். அதனை, பம்டிஸ் (Phumdis) என்கிறார்கள். அதுவே, ஒரு மிதக்கும் தீவைப் போல் இருக்கும். அதன்மீது ஒரு வீடே கட்டலாம். வலுவாகத் தாங்கும். கிராம மக்கள் அதில் சிறு வட்டம் அமைத்து அதில் மீன் வளர்ப்பார்கள். ஒருவர் அதிக வட்டம் பராமரித்தால், அவர்தான் அங்கு பணக்காரர். இந்த ஏரியும், ஏரி சார்ந்த வாழ்வும் சிறப்பானது. மிதக்கும் நிலம், வீட்டைச் சுற்றிப் படர்ந்திருக்கும் பசுமை நிறைந்த மலைகள், குளிர் என்று அங்கு நிலவும் சூழல், நம்மைக் கட்டிப் போடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டவ்க்கி நதி
டவ்க்கி நதி
இமா கைத்தல் மார்க்கெட்
இமா கைத்தல் மார்க்கெட்

மறுநாள், விமானம் மூலமாக அசாம் சென்று, அங்கிருந்து ஷேர் டாக்ஸி மூலம் மேகாலயா சென்றோம். மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்(shillong) வந்தடைய இரவாகிவிட்டது. மறுநாள் காலை ஆறு மணிக்கு டாக்ஸி ஸ்டாண்ட் சென்று விட்டோம். ஷில்லாங்கில் நீங்கள் டாக்ஸி முன்பதிவு செய்யவில்லை என்றால், காலையில் ஆறு மணிக்கு டாக்ஸி பிடிப்பது நன்று. நேரம் ஆக ஆக டாக்ஸி கிடைக்காது. அதுமட்டுமல்ல, நேரமாகக் கிளம்பினால் மட்டுமே, நிறைய இடங்கள் பார்க்கலாம். அங்கு உணவு நம் தமிழ் உணவு போலத்தான் இருக்கும். சாம்பார், கூட்டு, பொரியல், சாதம், கீரை, கேப்பை ரொட்டி, சில கிராமங்களில் கஞ்சிகூடக் கிடைக்கும். சென்னையில் படித்த உள்ளூர் இளைஞர்கள் ஷில்லாங் மார்க்கெட் பகுதியில் `மெட்ராஸ் கஃபே' என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்திவருகின்றனர். எங்களுக்கு நாள்கள் குறைவாக இருந்ததால், சில முக்கியமான இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்தோம்.

டவ்க்கி நதி, ரூட் பிரிட்ஜ், மவ்லின்னாங் (இந்தியாவின் சுத்தமான கிராமம்) டவ்க்கி நதி, மிகச் சுத்தமான தெளிந்த நதி. வங்க தேச எல்லையில் அமைந்துள்ளது. மழைக்காலம் தவிர்த்து எப்போது சென்றாலும் நதிநீர் கண்ணாடிபோல் தெளிவாக இருக்கும். அங்கு படகுச் சவாரி உண்டு. 200 முதல் 500 ரூபாய் வரை ஆகும். டவ்க்கி பார்த்து முடித்துவிட்டு, அப்படியே ரூட் பிரிட்ஜ் பார்க்கச் சென்றோம். ரூட் பிரிட்ஜ் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகக் காணப்படுபவை. பெரும்பாலும் ரப்பர் மர வேர்களை இணைத்து, பாலமாக அமைத்திருப்பார்கள். இதில், ஆச்சர்யம் என்னவென்றால், அந்த வேர்கள் உயிர்ப்புடன் இருக்கும். அடுத்து, இந்தியாவின் தூய்மையான கிராமம் (Mawlynnong) மவ்லின்னாங் சென்றோம். அங்கு செல்லும்போதே இருட்டிவிட்டது. உண்மையில் அவ்வளவு சுத்தமாக இருந்தாலும், கிராமம்போல இல்லை. அனைத்தும் ஹோம் ஸ்டே. அதாவது, அங்குள்ள வீடுகளில் கட்டணம் செலுத்தி விடுதிபோலத் தங்கிக்கொள்ளலாம். அடுத்த இடமான சிரபுஞ்சியை நினைத்தபோதே, மனதுக்குள் மகிழ்ச்சியின் சாரல்.

மவ்ஸ்மாய் குகை
மவ்ஸ்மாய் குகை
லோக்தத் ஏரி
லோக்தத் ஏரி

மறுநாள் காலை ஐந்து மணிக்கே டாக்ஸியில் கிளம்பிவிட்டோம். சிரபுஞ்சி மலைச்சாரலும், அந்தக் குளிரும் சேர்ந்து ஏதோ இசைத்துக் கொண்டிருந்தது. சிறுவயதில் பாடப் புத்தகத்தில் படித்த இடமான சிரபுஞ்சி சென்றபோது அப்படி ஒரு ஆனந்தம். அங்கு மலை அதிகம் என்பதால், எங்கெங்கு காணினும் அருவிகள், ஓடைகள். சிரபுஞ்சியைச் சுற்றி நிறைய இடங்கள் உள்ளன. நாம் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம்.

கார்டன் குகைகள், மவ்ஸ்மாய் குகை, நோகாளிகை அருவி, கிராங்சூரி அருவி, செவன் சிஸ்டர்ஸ் அருவி இவற்றில், கார்டன் கேவ்ஸ் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். சிறிய பள்ளத்தாக்கு, நிறைய குகைகள், அவற்றில் அழகிய அருவிகள் என ஏதோ ஷங்கர் பட செட் போன்று பிரமாண்டம் காட்டுகிறது. சிறு ஊற்று இருந்தது. அதில், `100 சதவிகிதம் சுத்தமான நீர் வரும்' என்றார்கள். (நான் நம்பாமல், அதைப் பிடித்து வந்து மதுரையில் ஆறு மாதங்கள் வைத்து சோதித்தேன். உண்மைதான், நீர் கெட்டுப் போகவில்லை). அடுத்து, கிராங்சூரி அருவி. அது, தூரத்தில் தெரியும் போதே, உங்களை ஆச்சர்யபடுத்தும். நெருங்க நெருங்க சிலிர்ப்பு ஏற்பட்டு, அந்த நீல வண்ணம் நமக்குள் ரசவாதம் செய்யும். அந்த அருவிக்கரையோரம் டென்ட் அமைத்துத் தங்கலாம். அதேபோல், நோகாளிகை அருவி. ஒரு காட்டுக்குள் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுதாகக் கொட்டுகிறது. அந்த அருவி அமைந்திருக்கும் சூழல், பிரமாண்டம். தொடர்ந்து, நாங்கள் சென்ற மவ்ஸ்மாய் குகை, ஒரு நேச்சுரல் த்ரில்லிங் அனுபவத்தை வழங்கியது. அந்தக் குகையின் ஒருபுறம் உள்ளே சென்று மறுபுறம் வழியே வெளியில் வரவேண்டும். உள்ளே விளக்குகள் கிடையாது. அங்கு வரும் மெல்லிய இயற்கை ஒளியை வைத்துச் செல்லவேண்டும். அந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே, உள்ளே செல்போன் லைட், கேமரா பிளாஷுக்கெல்லாம் அனுமதி கிடையாது. அங்கங்கே ஒழுகும் நீர், குறுகிய பாதையில் படுத்தபடியே செல்வதென்று அந்தக் குகைவழிப் பயணம் முழுவதும் அட்வெஞ்சர் மோடுதான். கடைசியாகச் சென்ற, செவன் சிஸ்டர்ஸ் அருவியைச் சுற்றி, ஒரே பனி மூட்டம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காத்திருந்தும் பார்க்க முடியவில்லை. Wei Sawdong கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய அருவி. அருவியைவிட, அதற்குச் செல்லும் பாதை, ஒரு சிறிய சாகசப் பயணம் செய்ய வேண்டும். இதுபோக, பார்ப்பதற்குச் சுற்றுலா இடங்கள் ஏராளம். மேகாலயா மட்டும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால், குறைந்தது பத்து நாள்களாவது வேண்டும். சுத்தமான காற்று, நீர், குளிர், மலைகள், அருவிகள், த்ரில் அனுபவம் தரும் குகை எல்லாவற்றையும் அனுபவிக்க, வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்!

******

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொந்த வாகனம், பேருந்துகள் மூலம் அவ்வளவு தூரம் செல்வதென்பது சிரமம். அதனால், விமானம் அல்லது ரயில் பயணமே உகந்தது. விமானப் பயணத்தை காஸ்ட்லியாக நினைப்பவர்கள், ரயிலில் பயணிக்கலாம். அதேபோல், அந்த மாநிலங்களில் பயண இடங்களுக்குச் செல்ல, முன்பே டாக்ஸி புக் செய்துவிடுங்கள். வழிகாட்டிகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அங்கு போய் அவற்றைச் செய்ய நினைத்தால் கூடுதல் செலவாகும்.