Published:Updated:

ரயிலுக்கு 200 ரூபாய்... ஆட்டோவுக்கு 1000 ரூபாய்! - ரயில் பயணிகளின் சிரமம் போக்குமா அரசு?

ரயில்
ரயில்

"பேருந்து வசதி இல்லாததால் விடிய விடிய ஸ்டேஷன்ல தங்குற சூழல் இருக்கு. இரவு நேர சாப்பாட்டுக்கும் வழியில்ல. ஆட்டோவில் போலாம்னா ஆயிரக்கணக்கில் கேட்கிறாங்க."

கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் முடக்கம் செய்யப்பட்டன. இதனால் பெருமளவு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தால் அது நிச்சயம் சமூக பரவலாக மாறிவிடும் என்பதற்காகவே முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவைவிட பசி, பட்டினி மக்களை வாட்டி எடுக்கத் தொடங்கியது. சிறு தொழில்கள் பலவும் நசிவடையத் தொடங்கின. பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள்கூட சூழலைச் சமாளிக்க முடியாமல் வொர்க் ஃப்ரம் ஹோம், ஆள் குறைப்பு போன்றவற்றைக் கையில் எடுக்கத்தொடங்கின. வேலையிழப்பு காரணமாக வெளி மாநில தொழிலாளிகள் பலரும் தங்கள் ஊருக்கு நடந்து செல்லத்தொடங்கினர். இதற்கு மேலும் சூழலை சமாளிக்க முடியாததால் மக்கள் அனைவரும் கொரோனா பயத்திலிருந்து வெளியே வந்து பொருளாதார தேடலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.

தென்னக ரயில்வே
தென்னக ரயில்வே

ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்களில் சில, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி 2,500 ரயில்களில் 40,000 படுக்கைகள் வென்டிலேட்டர், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் செய்யப்பட்டன. போக்குவரத்துக்கான தேவை தொடங்கிய பிறகு, முக்கிய நகரங்களுக்கு மட்டும் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.

தமிழ்நாட்டில் தற்போது ஏசி வசதியில்லாமல் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 60 சதவிகித பயணிகளுக்கு மட்டுமே அனுமதி, இ-பாஸ் அவசியம், தக்கல் சேவை இல்லை எனப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்கள் சரியான நேரத் திட்டமிடல் இல்லாததால் மக்களுக்கு முழுமையான பயனைத் தரவில்லை என்பதே உண்மை.

1. விழுப்புரம்-மதுரை, மதுரை-விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் இண்டர்சிட்டி அதி விரைவு ரயில், காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்கிறது. அதே ரயில் மீண்டும் மாலை 4 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.20 மணிக்குப் மதுரை செல்கிறது.

2. கோவை-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ஜன சதாப்தி அதிவிரைவு ரயில், காலை 7.10 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்கிறது. அதே ரயில் மயிலாடுதுறையிலிருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்குக் கோவை வந்து சேர்கிறது.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

3. கோவை-காட்பாடி, காட்பாடி-கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் காட்பாடி அதி விரைவு ரயில், காலை 6.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு மதியம் 11.50 மணிக்கு காட்பாடிக்கு வந்துசேர்கிறது. காட்பாடியிலிருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.15 மணிக்குக் கோவை வந்து சேர்கிறது.

4. திருச்சிராப்பள்ளி-நாகர்கோவில், நாகர்கோவில்- திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில் இயக்கப்படும் திருச்சி அதிவிரைவு ரயில், காலை 6.00 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு மதியம் 1.00 மணிக்கு நாகர்கோவிலுக்கு வந்து சேர்கிறது. அதே ரயில் மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருச்சி வந்து சேர்கிறது.

மதியத்துக்கு பிறகு மதுரை, கோவை, திருச்சி நோக்கிச் செல்லும் ரயில்கள், இரவு 9 மணிக்குப் பிறகே அந்தந்த ஊர்களுக்குச் செல்கிறது. ஊரடங்கினால் இரவு 7 மணிக்குப் பிறகு போக்குவரத்து முடங்கிவிடுகின்றது. அதனால், ரயில்களில் இருந்து இறக்கி கிராமப்புறங்களுக்குச் செல்ல வேண்டிய மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி, இரவு முழுவதும் ரயில் நிலையத்திலேயே தங்கும் சூழல் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ரயிலில் பயணம் செய்த சில பயணிகளிடம் பேசினோம்.

ஹரி
ஹரி

விழுப்புரத்திலிருந்து மதுரை வரை பயணம் செய்த ஹரி என்பவர் "சில சொந்த காரணங்களுக்குச் சொந்த ஊர் செல்ல வேண்டிய சூழல். அதனால் ரெண்டு நாளைக்கு முன்னரே இ-பாஸ்க்கு விண்ணப்பிச்சுட்டேன். ஒரே நாளில் இ-பாஸ் கிடைச்சுருச்சு. ரயிலில் டிக்கெட்டும் புக் செஞ்சுருந்தேன். ரயில் கிளம்புவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பே ரயில் நிலையத்தில் பயணிகளை வரவழைச்சு செக் பண்ணது, ஒரு சீட்டுக்கு ஒருவரை மட்டும் உட்காரவெச்சதுனு மக்களோட பாதுக்காப்புக்காக ரயில்வேதுறை நிறைய மெனக்கெடுறாங்க. ஆனா, டைமிங்தான் பிரச்னை. விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட ரயில் இரவு 9.15 மணிக்குதான் மதுரை வந்து சேருது. மதுரையிலிருந்து எங்களோட சொந்த ஊரான பாளையம்பட்டி செல்ல 50 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யணும். ஆனால், பேருந்து வசதி இல்லாததால விடிய விடிய ஸ்டெஷன்ல தங்க வேண்டிதாகிடுச்சு. சாப்பாட்டுக்கும் வழியில்ல. ஆட்டோவில் போலாம்னா ஆயிரக்கணக்கில் கேட்கிறாங்க. 200 ரூபாய் செலவழிச்சு ரயிலில் பயணம் செய்துவிட்டு காருக்கோ, ஆட்டோவுக்கோ 2,000 ரூபாய் செலவு பண்ண முடியுமா சொல்லுங்க? ஒரே இடத்தில் நிறைய பேர் தங்கியிருப்பதால் கொரோனா வந்துருமோனு பயமாவும் இருக்கு. ரயிலில் நிறைய பேர் கூட சேர்ந்து வந்ததால டூவீலரை எடுத்துக்கிட்டு வந்து கூட்டிக்கிட்டுப் போங்கன்னு யார்கிட்டேயும் உதவிகூட கேட்க முடியல. சொந்தக்காரங்க வீட்டுக்கும் போக முடியாது.

இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்துல அரசு மக்களுடைய நலனுக்காக ரயில்வே பயணத்தை அனுமதிச்சது நல்ல விஷயம். ஆனா, மக்களுடைய நலன் கருதி நேரத்தை மட்டும் கொஞ்சம் மாத்தி அமைச்சா நல்லா இருக்கும்" என்கிறார்.

கோவைக்கு பயணம் செய்த ஆரோக்கிய கிங்ஸ்ஸியிடம் பேசினோம்.

"நான் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். சொந்த ஊர் மயிலாடுதுறை அருகில் இருக்கும் பட்ட மங்கலம். லாக்டௌன் அறிவிச்ச நேரம் சொந்த ஊருக்கு போயிட்டேன். இப்போ திரும்பி கோயம்புத்தூர் வர இ-பாஸ்க்கு அப்ளை பண்ணியிருந்தேன். மயிலாடுதுறையிலிருந்து மதியம் கிளம்பிய ரயில் இரவு 9.15-க்குதான் கோவை வந்துச்சு. கோவையிருந்து நான் தங்கியிருக்க பேரூர் செல்ல தனியார் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் ரூபாய் வாங்குறாங்க.

`ஜூன் 1 முதல் 200 ஏசியில்லாத ரயில்கள் இயக்கம்!’ - ரயில்வே அமைச்சகம் முடிவு #NowAtVikatan

மூணு மாசம் வேலையில்லாம திரும்பி வந்த சூழல்ல, இவ்வளவு கட்டணம் செலுத்துவது சிரமமா இருக்கு. இந்த ஊரடங்கு நேரத்தில் அரசு இவ்வளவு தளர்வுகள் கொடுத்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது முழுமையாக மக்களுக்கு உதவல. ஊரடங்கு முடிந்து பஸ்ஸெல்லாம் சாதாரணமா இயங்கும்வரை ரயில் விடும் நேரத்தை மாத்துனா நல்லா இருக்கும். இல்லைனா அந்த ரயில் வரும் நேரத்துக்கு சில பேருந்துகளை இயக்கலாம்" என்கிறார்.

இது குறித்து தென்னக ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசனிடம் பேசினோம். "இந்த இக்கட்டான சூழலில் வேறு வழியில்லை. எவ்வளவு தூரம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமோ அவ்வளவு நடவடிக்கைகளையும் தெற்கு ரயில்வே எடுத்திருக்கிறது. சில ஊர்களுக்கு இன்னும் தளர்வுகள் வழங்கப்படாத சூழலில் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டிய ரயில் சில முக்கிய நகரங்களிலேயே நிறுத்தப்படுகிறது. உதாரணமாகச் சென்னை வரை செல்லும் 'வைகை அதிவிரைவு ரயில்', 'இண்டர்சிட்டி அதிவிரைவு ரயில்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் மதுரைக்குப் புறப்படுகிறது.

மக்கல் தொடர்பு அதிகாரி குகநேசன்
மக்கல் தொடர்பு அதிகாரி குகநேசன்

ஒரு வழித்தடத்தில் ஒரு ரயில் மட்டும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ள சூழலில், ரயில் கிளம்பும் நேரத்தில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாத நிலை நிலவுகிறது. கொரோனா சமூக பரவலாக மாறுவதைத் தடுப்பதற்காகவே எல்லா ஊர்களுக்கும் இன்னும் ரயில் சேவை தொடங்கப்படாமல் இருக்கிறது. அவசியத்துக்காகக் கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் சில நாள்களுக்கு வேறு ஏதாவது மாற்று வழியை ஏற்பாடு செய்து கொள்வதுதான் இந்த பிரச்னைக்கான தீர்வாக அமையும்" கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு