Published:Updated:

தீரா உலா: திமிங்கிலம் தேடி திரைகடல் ஓடி!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

தீரா உலா: திமிங்கிலம் தேடி திரைகடல் ஓடி!

காயத்ரி சித்தார்த்

Published:Updated:
தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
தீரா உலா
அறிய முடியாமையின் நிறம் நீலம்!
ஜெயமோகன்

முதன்முதலாக ஆக்ராவில் நின்று தாஜ்மஹாலை நேரில் பார்த்தபோது, எழுத்தாளர் ஜெயகாந்தனின் `விஸ்வரூபம் என்பது காட்டப்படுவதல்ல... காண்பது' என்ற மகா வாக்கியத்தை நினைவுகூர்ந்தேன். யானையின் காலடியில் நின்று அண்ணாந்து, அதனுருவை முழுதாகப் பார்க்க விரும்பும் சிற்றெறும்பு போல உணர்ந்த அக்கணம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இவ்வுலகில், இயற்கை என நம்மைச் சூழ்ந்து நிற்பவை அனைத்துமே பேருருக் காட்சிகொண்டவைதாம். நாம்தான் எதையும் காணாமல், நின்று மலைக்க நேரமில்லாமல் வாழ்க்கையைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறோம். நேற்றுப் பார்த்த செடியைப் பார்க்கும் அதே சலித்த கண்களோடு இன்று பூத்த பூவையும் பார்த்துக்கடக்கிறோம்.

தீரா உலா: திமிங்கிலம் தேடி திரைகடல் ஓடி!

மூச்சிரைக்க விரைந்தோடும் இவ்வாழ்க்கை யில், பயணங்களும் விழாக்களும் மட்டுமே நம் அன்றாடங்களின் நடுவே வேகத்தடைகளாக / நிறுத்தற்குறிகளாக வந்துபோகின்றன. அவ்வகையில், இலங்கையில் ‘யால தேசிய வனம்’ பார்த்து முடித்த பின்பாக, அடுத்து நாங்கள் செல்லவிருந்த இடம், அப்பயணத்தின் ஆச்சர்யக்குறியாக அமைந்தது. அது, மிரிஸ்ஸ.

கிரங்கவைக்கும் கித்தூள்!

மிரிஸ்ஸ, இலங்கையின் மிக அழகான துறைமுக நகரங்களில் ஒன்று. அதை அடைய நாங்கள் திஸ்ஸமஹாராமவிலிருந்து 125 கி.மீ சாலையில் பயணிக்கவேண்டியிருந்தது. மதியம் 2 மணி வாக்கில் அறையை காலி செய்து விட்டுக் கிளம்பினோம். அலைச்சலிலும் உண்ட மயக்கத்திலும் கண்சொக்கி உறங்கி விழிக்கையில் மாலையாகி இருந்தது.

வழியில் ஓர் மரத்தடியில் மண்சட்டிகளில் உறையூற்றப்பட்ட தயிரையும் கித்துள் பானி, தென்னைப் பானி என்ற பெயர்களில் பாட்டில்களில் நிரப்பப்பட்ட தேன் போன்ற பொருளையும் விற்றுக்கொண்டிருந்தார்கள். தயிர் நன்கு கெட்டியாகப் புளிப்பு வாசனை யில்லாமல் மணமாக இருந்தது. தயிரில் இந்தத் தேனை ஊற்றிச் சாப்பிடலாம் என்றார்கள். சரி, சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று தயிர்ச்சட்டியையும் வகைக்கு ஒரு தேனையும் வாங்கிக்கொண்டோம். பின்புதான் தெரிந்தது அது தேனல்ல.. வெல்லப்பாகு என்பது.

தீரா உலா: திமிங்கிலம் தேடி திரைகடல் ஓடி!

கித்துள் என்பது இலங்கையில் இருக்கும் ஒருவகை பனைமரம். இதைக் கூந்தற்பனை என்றும் உலத்தி என்றும் சொல்கிறார்கள். தென்னை மரத்திலிருந்தும், இந்தக் கூந்தற்பனையிலிருந்தும் பதநீர் இறக்கி அதிலிருந்து வெல்லப்பாகு காய்ச்சி பாட்டில்களில் அடைத்து விற்கிறார்கள். பார்க்க, தேன் போலிருந்தாலும் தேனென்று சொல்லி சாப்பிடக்கொடுத்தால் எங்கள் இரண்டு வயது கீர்த்துவே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மாறுபட்ட சுவையில் இருந்தது. இலங்கையில் வெல்லத்தைப்போலவே இதைப் பயன்படுத்தி நிறைய இனிப்பு வகைகள் செய்கிறார்களாம்.

பாரதியின் பாவுக்குப் பொருள் சொன்ன பரிதி!

மிரிஸ்ஸவில் நாங்கள் முன்பதிவு செய்திருந்ததும் ஹோம் ஸ்டே வகையறா தங்கும் விடுதிதான். அந்த வீடு ஒரு குன்றின் உச்சியில் இருந்தது. கார் செங்குத்தாக மேலே ஏறி வீட்டுவாசலில் நின்றது. மூன்றடுக்கு வீடு. எங்களுக்குக் கீழ்த்தளத்திலேயே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இரவாக இன்னும் நேரமிருந்தது. பெட்டிகளைப் போட்டுவிட்டு மிரிஸ்ஸ கடற்கரைக்குக் கிளம்பிச் சென்றோம். மிரிஸ்ஸ கடற்கரை இதுவரை நான் கண்டிருக்கும் கடற்கரைகளிலேயே அழகானது என்பேன். கடற்கரை முழுவதையும் பெரிய சல்லடையில் போட்டுச் சலித்தது போல அத்தனை நுண்ணிய வெண்மணல் எங்கும் கொட்டிக்கிடந்தது. அதைத் தொட்டால் பெரியவர்களும் குழந்தையாகி மண்ணில் விளையாடத் தோன்றும். அத்தனை மிருது. கடலின் அழகைச் சொல்லவே வேண்டாம். அப்போது மாலை 6 மணி. சூரியன் கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தான். குழந்தையொன்று வண்ணக் குடுவைகளைக் கவிழ்த்துக் கொட்டியது போல, மேலே வானிலும் கீழே கடலிலும் மஞ்சள், செம்மஞ்சள், பொன்னிறம், நீலம், அடர்நீலம், ஊதா, இளஞ்சிவப்பு என்று ஒழுங்கேயில்லாமல் அத்தனை வண்ணங்கள் தீற்றல்களாய் பரவியிருந்தன. சுழன்றுகொண்டே கீழிறங்கும் பொற்சக்கரமாய் சூரியன் ஒளியை வாரிச் செரிந்தபடி மறைந்துகொண்டிருந்தான்.

மகாகவி பாரதியார்,

எந்தன் உள்ளம் கடலினைப் போலே

எந்த நேரமும் நின்அடிக் கீழே

நின்று தன்னகத்து ஒவ்வோர் அணுவும்

நிந்தன் ஜோதி நிறைந்தது ஆகி

நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா!

என்று வணங்கி உருகி நின்றது ஏனென்று அந்தக் கடற்கரையில் எனக்கு அறிய தந்தான் கதிரவன்.

கடலை அச்சத்துடன் பார்க்கும் அம்மு...
கடலை அச்சத்துடன் பார்க்கும் அம்மு...

பார்த்துக்கொண்டிருக்கும்போதே மின்வெட்டுப் போல சட்டென்று இருள் கவிந்துவிட்டது. இருளென்றால் அருகிலிருப்பவர் முகம் தெரியாத அளவுக்கு அப்படியோர் அடர் இருள். சற்று தொலைவில், மணலில் உணவு மேஜைகள் அமைத்து ‘கேண்டில் லைட் டின்னர்’ வழங்கும் உணவகங்கள் இருந்தன. ஒரு `கடலுணவு' உணவகத்தில் சாப்பிட்டோம். நான் ரசித்து ருசித்த முதல் கணவாய் மீன் இலங்கையைச் சேர்ந்தது. அப்படியொரு சுவை. ஒரே நாளில் அத்தனை அனுபவங்களைத் தாளாது உடலும் மனமும் இனிமையாய்க் களைத்திருந்தன.

ஒரு நாளைக்கு நான்கு கோடி கூனி மீன்கள்!

மறுநாளும் விடியற்காலையிலேயே தயாராகி மற்றொரு சாகசப்பயணம் மேற்கொள்ள வேண்டி யிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக இந்திய மதிப்பில் 15,000 ரூபாயை முன்கூட்டியே செலுத்திவிட்டு இரவு அறைக்குத் திரும்பினோம்.

இலங்கை போகிறோம் என்று சொல்லும்போதே அமுதினியிடம் இந்த சாகசத்தைத்தான் முத்தாய்ப் பாகச் சொல்லியிருந்தோம். இலங்கைக்குள் நுழைந்த நாளிலிருந்து “அங்கே எப்ப போவோம்?” என்று அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருந்தாள். அன்றிரவு அவளிடம் ஆரவாரமாக அறிவித்தோம், “அம்மு! நாம நாளைக்கு காலைல கடலுக்குள்ள போய் திமிங்கிலத்தை நேர்ல பார்க்கப் போறோம்.”

தயிரும் கித்துள் பானியும்...
தயிரும் கித்துள் பானியும்...

அவளைப் போலவே எங்களுக்கும் மிகவும் ஆர்வமாயிருந்தது. நீலத் திமிங்கிலத்தை அதன் இருப்பிடத்துக்கே போனாலொழிய நேரில் பார்க்க முடியாது. வீட்டில் தொட்டியிலோ கண்காட்சியிலோ வைத்து வளர்க்கக்கூடிய ஆகிருதியா அது. நீலத் திமிங்கிலம், உலகிலேயே மிகப் பெரிய விலங்கு என்பதை பள்ளிப்பாடத்திலேயே படித்திருக்கிறோம். ‘அது சுமார் 30 மீட்டர் நீளமும் மற்றும் சுமார் 200 டன் எடையும் கொண்டது. அதன் நாக்கு, நன்கு வளர்ந்த ஒரு யானையைவிட பெரியது. இதயம் ஒரு கார் அளவு இருக்கும். அதனுடைய பெரிய ரத்த நாளங்களுக்குள் நம்மால் நீந்திச் செல்ல முடியும். அதன் வால்மட்டும், ஒரு சிறு விமானத்தைவிட பெரியது. அத்தனை பெரிய உடலை வைத்துக்கொண்டு அதனால் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்த முடியும். கடலில் மிக வேகமான விலங்குகளில் அதுவும் ஒன்று. நீலத் திமிங்கிலம், மிக சிறிய மீன்களைச் சாப்பிட்டு வாழ்ந்துவருகிறது. ஒரு நீலத் திமிங்கிலம் ஒரு நாளைக்கு சுமார் நான்கு கோடி கூனி மீன்களைச் சாப்பிட வேண்டும்’ என்பதையெல்லாம் கூகுளைக் கேட்டே தெரிந்துகொள்ளலாம். ஆனால், நடுக்கடலில் படகில் நின்று அதை நேரில் சந்திக்கும் அனுபவத்தை வேறெங்கிருந்தும் பெற முடியாதில்லையா... அதைத் தேடித்தான் மிரிஸ்ஸவுக்குச் சென்றிருந்தோம்.

மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் படகில் ஏறிவிட வேண்டும் என்று முன்பே சொல்லியிருந்தார்கள். எங்கள் நேரமோ என்னவோ நள்ளிரவிலிருந்து பலத்த இடியோடு மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. தொலைபேசியில் விசாரித்தால், `புயல் காற்று போலத் தெரிகிறது. காலையில் கடல் ஆக்ரோஷமாக இல்லாவிட்டால் போகலாம். இல்லையெனில் பயணம் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்படும். செலுத்திய தொகை திருப்பித் தரப்பட மாட்டாது' என்றார்கள். அன்று மாலையே நாங்கள் கொழும்பு செல்லவேண்டியிருந்தது. மறுநாள் கடல் பயணமெல்லாம் சாத்தியமே இல்லையென்பதால் கவலையோடு வருணபகவானை வேண்டிக்கொண்டு காத்திருந்தோம். விடியற்காலையில் கடல் சாந்தமடைந்திருப்பதாகத் தகவல் வந்தது. உற்சாகமாய் கிளம்ப ஆரம்பித்தோம். 'ஸீசிக்னெஸ்' (seasickness) வராமலிருக்க கூகுள் அறிவுரையின்பேரில் ஏராளமான முன்னேற்பாடுகள் செய்து கொண்டும், எங்கள் புத்திசாலித்தனத்தை நாங்களே மெச்சிக்கொண்டும் கிளம்பி துறைமுகத்தை அடைந்தோம்.

 கூந்தற்பனை
கூந்தற்பனை

40 அடி நீளமும் உள்ளே 40 இருக்கைகளும் கொண்ட படகு ஒன்று எங்களுக்காகக் காத்திருந்தது. பெரும் சாகசத்துக்குத் தயாராவது போல, பந்தாவாக லைஃப் ஜாக்கெட்டுகள் அணிந்துகொண்டு படகில் ஏறி அமர்ந்தோம். படகு கிளம்பியது. காலை உணவாகத் தேநீரும் பிரெட் சாண்ட்விச்சும் கொடுத்தார்கள். குழந்தைகள் தூங்கிவிட்டதால், வரவிருக்கும் விளைவுகளை அறியாமல் அவர்கள் பங்கையும் சேர்த்து நாங்கள் இருவருமே சாப்பிட்டு முடித்தோம். குளிர்ந்த கடற்காற்று முகத்தில் வீச குதூகலமாக அருணோதயத்தின் அழகை ரசித்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தோம்.

வயிற்றுக்குள் தோன்றிய பிரளயம்!

ஒரு மணி நேரம் கழிந்த பிறகுதான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. நாலா புறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலும் வானும் மட்டும்தான் இருந்தன. யாரோ இடுப்பில் வைத்து தூக்கி வரும் பிரமாண்டமான நீர்க்குடம் போல கடல் தளும்பித்தளும்பி படகை அலைக்கழித்தது. பக்கவாட்டிலிருந்து அலைகள் எழுந்து வாளித்தண்ணீரை வீசுவதுபோல நீரை வாரி உள்ளே எறிந்தன. உடலின் சமநிலை கன்னாபின்னாவென்று குலைந்ததில் வயிற்றுக்குள் பிரளயம் தோன்றி, வாய் வழியாகப் பீறிட்டது. அரை மணி முன்பாக, படகுக்காரர்கள் விநியோகித்த பாலிதீன் கவர்களை எதற்கென்றே தெரியாமல் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்திருந்தேன். அவ்விரண்டையும் அதன் பின்னாக, பரீட்சை எழுதும்போது உபதாள்கள் வாங்க கையுயர்த்துவது போல, சைகை காண்பித்துக் காண்பித்து வாங்கிய ஆறு கவர்களையும் உபயோகித்து முடிக்கையில், உடல் அடித்துப்பிழிந்த கந்தல் துணி போலாகியிருந்தது. சித்துவும் என்னுடன் சளைக்காமல் போட்டியிலிருந்தார். நல்லவேளையாகக் குழந்தைகள் நல்ல உறக்கத்திலிருந்தார்கள்.

வானிலிருந்து சூரியன் உக்கிரமாய் முறைத்துப் பார்த்ததில், கடல் தீப்பற்றிக் கொண்டதுபோல பிரகாசமாய் ஜொலித்தது. கோடிக்கணக்கான கண்ணாடித் துண்டுகளால் செய்யப்படத்தைப் போல நீர்ப்பரப்பு தகதகவென ஒளிர்ந்தது. நிஜ ஒளி வெள்ளம். கண்கள் கூசியதில் கன்னங்களில் நீர் வழிந்தது.

அத்தனை சோர்விலும் கூகுளின் முடியைப் பிடித்திழுத்து மனக்கண்ணில் நிறுத்தி, `வெறும் வயித்துல மாத்திரை போடுன்னு சொன்னியே வேற ஒண்ணும் சாப்பிடாம இருன்னு சொன்னியா...' என்று நன்றாகக் கேட்டுவிட்டுதான் ஓய்ந்தேன். வாயிலெடுப்பதுதான் நின்றதே தவிர, கடலின் கொந்தளிப்பில் படகு முன்னோக்கிப் போகிறதா அல்லது பின்னோக்கியா என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்குத் தலைசுற்றியது. நான் விழித்திருக்கிறேனா என்று எனக்கே தெரியாதபடி கண்கள் உள்ளே இடுங்கிக்கொண்டதில், முகத்தில் சைனாக்காரர்கள் சாயல் வந்துவிட்டது. உடல் படும்பாட்டைப் பார்த்து மனம் திகைத்து மூலையில் ஒடுங்கி நிற்க, சிந்தனைகள் பயத்தில் தொடங்கி தத்துவ விசாரத்தில் சென்று முடிந்தன. நாலாபுறங்களிலும் ‘நீலம்’, ‘ஆழம்’ என்னும் இரு சொற்கள் மட்டும் பேருருக்கொண்டு வியாபித்து நின்றன. பிரமாண்டம்... பிரமாண்டம்... என்று மனம் அடித்துக்கொண்டது. `நீலச் செப்பு திறந்து உள்ளிருக்கும் சிறுமுத்து போன்ற இப்புவியை எவரோ காட்டுகிறார்கள்' என்ற ஜெமோவின் வரி நினைவுக்கு வந்தது.

திமிங்கிலத்தையோ, டால்பின்களையோ

பார்க்க முடியாவிட்டால்...

நான் உச்சக்கட்ட பயத்தில், இனி நாம் மீண்டும் நிலத்தைப் பார்க்கவே போவதில்லை என்ற விரக்தி மனநிலைக்கு வந்திருந்தபோது தூங்கிக்கொண்டிருந்த அம்மு கண்விழித்தாள். ‘இதோ... இப்ப கவுந்துடுவேன்’ என்பது போல படகு முன்னும் பின்னுமாய் தீவிரமாக ஆடுவதையும், அச்சமூட்டும் கடற்பரப்பையும் கண்டு திகைத்து வீறிட்டு அழத் தொடங்கினாள். நான் சட்டென்று என் பயம் மறைத்து, அம்மாவாக மாறி அவளுக்கு தைரியம் சொல்லித் தேற்றினேன். சற்று நேரத்துக்கெல்லாம் படகு அணைக்கப்பட்டு திமிங்கிலத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. எங்கிருந்தோ வேறு சில படகுகளிலும் ஆட்கள் வந்து கேமராக்களை தயாராக வைத்தபடி நின்றார்கள். நிமிடங்கள் கழிந்தன. அரை மணி நேரம் ஆயிற்று. திமிங்கிலம் வரவே இல்லை. ஏமாற்றத்துடன் படகுகள் திரும்பிச் செல்ல ஆரம்பித்தன. திமிங்கிலத்தையோ, டால்பின்களையோ பார்க்க முடியாவிட்டால் கட்டிய தொகையைத் திருப்பித் தந்துவிடுவதாய் வாக்களித்திருந்தார்கள். ஆனால் திரும்பி வரும்வழியில், கூட்டம் கூட்டமாக மொழு மொழு டால் பின்கள் கடற்பரப்பில் தாவித் தாவி எழுந்து படகுடனேயே பயணித்து வந்தன. அம்மு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தாள். அப்பயணம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாய் அமைந்ததோடு, கப்பலில் பயணிக்க வேண்டும் என்று என் அடிமனத்தில் எரிந்துகொண்டிருந்த நெடுநாள் கனவை ‘உஃப்’ என்று ஊதி அணைத்துவிட்டது. மொத்தத்தில், நீலத் திமிங்கிலம் எத்தனை பெரியதெனப் பார்க்கப் போய்விட்டு கடல் எத்த்த்த்த்த்த்த்னை பெரியதெனப் பார்த்துத் திரும்பினோம்.

(வாருங்கள் ரசிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism