லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

நினைவில் காடுள்ள மிருகத்தை

எளிதில் பழக்க முடியாது.

என் நினைவில் காடுகள் உள்ளன.

- கே.சச்சிதானந்தன்

லையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் `நினைவில் காடுள்ள மிருகம்' என்ற கவிதை வரியை தமிழ் எழுத்தாளர்கள் / வாசகர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் நிச்சயம் எடுத்தாண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வரிசையில் இப்போது நானும் சேர்ந்துகொள்கிறேன். உண்மையில் மனிதர்களும்கூட நினைவில் காடுள்ள மிருகங்கள்தாம் இல்லையா... சிவப்பு ரிப்பன் கட்டப்பட்ட பரிசுப்பெட்டி போல காடு மனிதனை தன்னைத் திறந்து பார்க்கச் சொல்லித் தூண்டிக்கொண்டேயிருக்கிறது. பெட்டிக்குள் இருப்பது என்னவென்று அறிந்து கொள்ள விழையும் அதே கிளர்ச்சியை, வழிகளற்ற வாசல்களற்ற காட்டுக்குள் நுழையும்போதும் மனித மனம் அடைகிறது.

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

இலங்கையில் நுவரேலியா என்ற மலையிலிருந்து கீழிறங்கி, மறுநாள் ‘யால தேசிய வனம்’ என்னும் வனத்துக்குள் நுழைவதற்கு முன்பாக இதே மனக்கிளர்ச்சியை நான் அடைந்தேன். இரவெல்லாம் தூக்கம் பிடிக்காமல் புரண்டுகொண்டிருந்தேன். நாங்கள் அப்போது திஸ்ஸமகாராம என்னும் இடத்தில் ஒரு ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்தோம். அவர்கள் வீடு கட்டத் தேர்ந்தெடுத்திருந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகப்பெரிய இரும்பு வாயிற்கதவு. திறந்ததும் இருபுறமும் அழகான பூந்தோட்டம். நடுவில் நீண்ட பாதை. அதன் முடிவில் அழகான வீடு. வீட்டின் பின்னால் சிறு சிறு குடில்களைப்போல உணவருந்தும் இடங்கள். அதை தாண்டி சிறு மைதானம். அதையும் கடந்தால் மரத்தில் கிளையின் மீது அமைக்கப்பட்ட சின்னஞ்சிறு மர வீடு. அதற்கும் பின்னால் சிறு ஓடையும், அதன் கரையிலிருந்த பெருமரத்தில் கட்டப்பட்ட பெரிய ஊஞ்சலுமாக ஓர் இனிய கனவு போல அந்த வீடு அமைந்திருந்தது.

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

ஆசை ஆசையாக ஓடிப் போய் ஊஞ்சலில் அமர்ந்த பின்புதான், அந்த ஓடை ஓடுவதை மறந்து நெடுநாளாகிவிட்டிருப்பது தெரிந்தது. கொசுக்கள் ஓட ஓட விரட்டியடித்தன. அறைக்குத் திரும்பி இணையத்தில் ‘யால தேசிய வனம்’ பற்றி தேடிப்படித்து, மறுநாள் சந்திக்கவிருக்கும் வனமிருகங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

‘யால’ பரப்பளவில் இலங்கையின் இரண்டாவது பெரிய காடு (ஈரோடு கோவை திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்தால் கிடைக்கும் நிலப்பரப்பை விடவும் பெரியது). இப்பெருங்காட்டை இலங்கை அரசு ஐம்பெரும் பிரிவுகளாக பிரித்துவைத்து இரண்டை மட்டுமே மக்கள் பார்வையிட அனுமதித்திருக்கிறது. இதற்குள் 44 வகையான பாலூட்டி விலங்குகளும் 215 வகை பறவையினங்களும் வாழ்வதாகக் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

உலகில் சிறுத்தைகள் செறிவுமிக்க இடங்களுள் யால தேசிய வனமும் ஒன்று. இக்காட்டிலுள்ள 46 ஊர்வன இனங்களில் ‘இலங்கைப் புடையான்’, ‘இலங்கை பறக்கும் பாம்பு’ போன்ற ஐந்து இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவை. முதலைகளும் இந்திய நாகம், கண்ணாடிவிரியன் போன்ற நச்சுப் பாம்புகளும் இங்குண்டு என்றெல்லாம் `சந்திரமுகி' பட வடிவேலு போல ‘உடையுதாம், சாயுதாம்’ என்று கூகுள் பீதியைக் கிளப்பியதில் மனமெல்லாம் ஆர்வமும் பயமும் நிரம்பி வழியத் தொடங்கின. உறக்கமே வரவில்லை. மீறி உறங்கினால், கனவில் விதவிதமாக பாம்பு களும், இருளுக்குள்ளிருந்து உற்று நோக்கும் சிறுத்தைக் கண்களும் வந்து வாரிச்சுருட்டி எழ வைத்தன.

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

மறுநாள் விடிகாலை 4:30 மணிக்கெல்லாம் காரில் கிளம்பி சீக்கிரமே ‘யால’வை அடைந்தோம். வனத்துக்குள் அழைத்துப் போவதற்காக வெளியே ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருந்தன. அவை பெரும்பாலும் அடர்பச்சை வண்ணத்தில் முக்கியெடுத்த, ஜீப்போடு இணைக்கப்பட்ட ஷேர் ஆட்டோ போல வித்தியாசமான வடிவிலிருந்தன. அவற்றில் இரண்டு பக்கமும், சற்றே பருமனான ஆள் வெளியே விழப்போதுமான அளவுக்கு அகலமான கம்பியில்லாத ஜன்னல்கள். எந்த யோசனையில் அப்படியான வண்டிகளை வடிவமைத்தார்கள் என்று தெரியவில்லை. பயணம் முழுவதும் சிறுத்தையை நேருக்கு நேராகச் சந்திப்பதை விடவும், ஜன்னலோரம் உட்கார்ந்து தூக்கக்கலக்கத்தில் கீழே விழுந்து சில்லறை சிதறாமல் திரும்பி வருவதே பெரும் சாகசமாக இருந்தது.

காட்டுக்குள்ளே கடலிருக்கு...
காட்டுக்குள்ளே கடலிருக்கு...

காட்டுக்குள் நுழைந்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக முதலில் தென்பட்டது ஒரு காட்டுக்கோழி. இன்னும் விடியவே ஆரம்பிக்காததால் காரிலும் ஜீப்பிலுமாக தூக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருந்த அம்முவை, “அம்மு... அம்மு! இங்கே பாரு கோழி... காட்டுக் கோழி!” என்று கூச்சல் போட்டு எழுப்பியிருக்கக் கூடாதுதான். அவள் சோம்பலாக அரைக்கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, “சரிம்மா.. கோழி தானே...” என்று கேட்டுவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டாள். அதன்பின் தொடர்ச்சியாக காட்டு முயல், காட்டுப்பூனை, காட்டு எருது, காட்டெருமை என்று நகரத்தில் பார்த்துச் சலித்த மிருகங்களின் ‘காட்டு வெர்ஷன்’களைத்தான் பார்க்க முடிந்ததே தவிர, மருந்துக்கு ஒரு சிறுத்தைகூட கண்ணில் படவில்லை.

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

போதாக்குறைக்கு, ‘வனத்துக்கு வாசல்களேது, காட்டுக்குள் பாதைகளேது’ என்றெல்லாம் கவித்துவமாக யோசித்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் அங்கே நாளொன்றுக்கு 400-க்கும் மேலாக சஃபாரி ஜீப்புகள் சுற்றிச் சுற்றி வந்ததில் தங்க நாற்கரச் சாலைகளும், எட்டுவழிச் சாலைகளும் தானாகவே உருவாகியிருந்தன. மரங்களினூடே தூரத்தில் அசைவு தெரிகிறதே, ஏதோ உருமல் கேட்கிறதே என்று ஆர்வமாகப் பார்க்கும் போதெல்லாம், மற்றொரு பச்சை வண்ண வாகனம்தான் எதிர்ப்பட்டது. போகிற போக்கில், ஜன்னல் வழியாகக் கையசைத்து கையசைத்தே மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் நண்பர்களாகும் அளவுக்குக் காட்டுக்குள் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தோம். முதலில் நுழைந்தபோது ஆர்வமாக மயில்கள், கொக்குகள், புள்ளிமான் கூட்டங்கள், பட்ட மரம் தழைத்தது போல காய்ந்த கிளைகளில் முளைத்திருந்த பச்சைப் பசுங்கிளிகள், தாமரை பூத்த குளங்கள் என்று எல்லாவற்றையும் ஆர்வமாகப் படமெடுத்த சித்து, ‘காட்டு விலங்குகள்’ என்று பாடத்தில் படித்திருந்த கொடிய விலங்குகள் ஒன்றைக்கூட நேரில் காணாமல் சப்பென்றாகி கேமராவை அதன் பையில் போட்டு பக்கத்தில் வைத்துவிட்டு நிம்மதியாகக் கண்ணசந்து விட்டார். நீங்கள் நினைப்பது சரிதான். ஆளே விழும்படியான அத்தனை பெரிய ஜன்னலில் கேமரா விழாதா என்ன... விழுந்து விட்டது. நல்லவேளையாக, பின்னால் வந்த ஜீப்பின் சக்கரத்தில் விழாமல் உருண்டு புரண்டு பள்ளத்தில் விழுந்தது. அதிலிருந்தவர்கள் இறங்கி, கேமராவை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் ஜீப்பை நிறுத்தி மிகச்சரியாக உடைமையாளரைக் கண்டுபிடித்து அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி கேமராவை ஒப்படைத்துவிட்டுப் போனார்கள்.

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

திடீரென ஓரிடத்தில் எங்கள் ஜீப் நிறுத்தப் பட்டது. உள்ளிருந்தவர்கள் பரபரப்பாக, “அதோ... அதோ... குளக்கரையில் முதலை!” என்றார்கள். தூக்கக்கலக்கமா, கிட்டப் பார்வை கோளாறா என்று தெரியவில்லை, எனக்கு முதலில் குளமே தெரியவில்லை. வெகுதூரத்தில் தெரிந்த குளத்தின் கரையில் முதலை ஒன்று வாய் திறந்து படுத்திருப்பதாக வாகன ஓட்டி சொல்ல, கூட இருந்தவர்கள் அது முதலையா, ஒடிந்து விழுந்த மரக்கிளையா என்றெல்லாம் யோசிக்காமல் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கழித்து, வாகனத்தை மீண்டும் நிறுத்தி விட்டு, “யாரும் சத்தம் போடாதீங்க. காட்டுக்குள்ள யானை குட்டியோட நிக்குது” என்றார்கள். நாங்களும் திடீரென வகுப்பறைக்குள் தலைமையாசிரியர் நுழைந்ததுபோல, கீழ்ப்படிந்து அமைதியாகக் காத்திருந்தோம். அரை மணிக்கூறு கழிந்தும் யானையோ, குட்டியோ வெளியே வந்து தரிசனம் தருவதாகத் தெரியவில்லை. ஒருவேளை `மனுஷப்பயல்களை காமிக்கறேன் வா' என்று யானை தன் குட்டியைக் கூட்டி வந்ததோ என்னவோ... மரங்களும் செடிகளும் அடர்ந்த பகுதிக்குள் இலைகளினூடாக அவற்றின் கரிய முதுகுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘அவ்ளோதானா, இதான் காடா?!’ என்கிற குழப்பமும் ஏமாற்றமும் முகத்தில் பரவியிருக்க, எல்லாரும் வெறுமனே மரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென, எவரும் முன்கூட்டியே அறிவித்திராத அப்பயணத்தின் உச்சகட்ட ஆச்சர்யத்தை சந்தித்தோம். அது… கடல். காட்டுக்குள்ளாகவே கடலிருக்கும் என்று நான் அது நாள்வரை கற்பனைகூட செய்து பார்த்ததில்லை!

தீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்

பழந்தமிழர்கள் தங்கள் வாழிடத்தை ஐந்திணைகளாகப் பிரித்திருந்தார்கள் என்று தமிழ்ப்பாடத்தில் படித்திருப்பீர்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று சொல்லித் தரும் தமிழ் இலக்கணம் `குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிவங் கொள்ளும்' என்று பாலை நிலம் உருவாகும் விதத்தையும் சொல்லியிருக்கிறது. ஆனால், இலக்கணத்தின் எந்த இடத்திலும் இப்படி முல்லையும் நெய்தலும் முயங்கிக்கிடந்து மயங்கவைக்கும் என்று நான் படித்ததே இல்லை. காட்டின் பின்னால் அத்தனை பெரிய கடல். கடல் என்றால் குவைத்தில் இருப்பதுபோல தண்ணீரின் பக்கத்திலேயே போய் நின்ற பின்னும், நாய்க்குட்டிகள் நக்குவதுபோல ஈர நாக்குகளால் தயங்கித் தயங்கி பாதங்களைச் சிற்றலைகளால் தொட்டுப் பார்க்கும் வளர்ப்புக் கடல் அல்ல... இது இந்தியப் பெருங்கடல். தொலைவில் நின்று பார்ப்பவரையும் இரைச்சலோடு சீறி வந்து மிரள வைக்கும் பேரலைகள் கொண்ட ஆக்ரோஷ நீர்ப்பரப்பு.

2004-ம் ஆண்டு வந்த சுனாமியில் இப்பகுதியில் 20 அடிக்கும் மேலான உயரத்தில் அலைகள் எழுந்ததாம். அந்த இயற்கைச் சீற்றத்தின்போது இவ்வனத்தைச் சுற்றியிருந்த பகுதியில் வாழ்ந்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தோடு, வனமும் பெருமளவில் சேத மடைந்ததாகப் பின்னர் தெரிந்து கொண்டோம்.

 முதலை தெரிகிறதா...
முதலை தெரிகிறதா...

அம்மு அப்பயணத்தை மகிழ்ந்து கொண்டாடினாள். அலைகளுடன் சிரித்து கோபித்து சண்டையிட்டு சமாதானம் செய்து விளையாடினாள். அவையும் அவள் கட்டிய மணல் வீட்டை நெருங்கி நெருங்கி வந்து ‘உடைச்சிருவேன், உடைச்சிருவேன்’ என்று பயமுறுத்தித் திரும்பிப் போய், அவள் எதிர்பாராத தருணத்தில் பாய்ந்து வந்து உடைத்துவிட்டு கை கொட்டிச் சிரித்தன. அம்முவும் `தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன்மேல் உள்ளம் ஓடி உருகல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்' என்று ஆண்டாள் கண்ணனை மன்னித்ததைப் போல, மனம் மகிழ்ந்து அலைகளை மன்னித்துவிட்டாள். நாங்களும் மனநிறைவோடு ‘யால தேசிய வனப்’ பயணத்தை நிறைவு செய்து அறைக்குத் திரும்பினோம்.

(வாருங்கள் ரசிப்போம்!)