புனல் ஓடிப்போன பின் வெண்மையாய் மெத்துமெத்தென்று மணல் பரந்து கிடந்தது ஓடை; பார்க்கப் பார்க்க ஆசையாயிருந்தது குழந்தைக்கு; சரி, தன் காலைப் பதித்துத் தடம் செய்ய வேண்டுமென்று ஏன் தோன்றுகிறது. - பிரதீபன்

இந்தக் கவிஞர் யாரென்று தெரியவில்லை. ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து சித்தார்த் இக்கவிதையைப் படிக்கத் தந்த நாளிலிருந்து மனத்துக்குள்ளேயே குடிலமைத்துத் தங்கிவிட்ட அழகான கவிதை!

பரந்த மணற்பரப்பில் தன் கால் தடத்தைப் பதித்துப் பார்க்க வேண்டுமென்று ஏன் தோன்றுகிறது குழந்தைக்கு... மலைகளைப் பார்க்கும்போது மேலே ஏறிப் பார்க்க வேண்டுமென்று ஏன் தோன்றுகிறது மனிதர்களுக்கு... சிட்டுக்குருவியைப்போல வானில் சிறகடித்துப் பறக்கத் தூண்டும் விழைவின் ஊற்றுமுகம் எங்கிருக்கிறது... இயற்கையின் வலிமையை, அதன் பிரமாண்ட ஆகிருதியை மனிதன் எப்போதும் ஒரு சீண்டலாகவே எதிர்கொள்கிறானா... அதை வெல்லத் துடிக்கும் முயற்சியின் சாதகமான விளைவுகளைத்தான் அவன் தனது மகத்தான கண்டுபிடிப்புகளாகக் கொண்டாடித் தீர்க்கிறானா... ஆனால், மனிதனின் முயற்சிகளுக்கும் அவன் அடைந்துவிட்டதாக நினைக்கும் வெற்றிகளுக்கும் அப்பால், பேருருக்கொண்டு நின்று இயற்கை தனக்குள் மெள்ள புன்னகைத்துக்கொள்கிறது.

நுவரேலியா - இப்படி நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் ஓர் அழகான மலையரசி. இலங்கை - ராமாயணத்தின் முக்கியக் கதைக்களம் என்பதால் ராமாயணக் காட்சிகளோடு தொடர்புபடுத்தப்பட்ட இடங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. `இது ராவணன் தங்கிய குகை', `இந்த அருவியில்தான் சீதை குளித்தாள்', `இது ராவணனின் புஷ்பக விமானம் தரையிறங்கிய ஓடுதளம்', `இதெல்லாம் சஞ்சீவி மலையின் பாகங்கள் உடைந்து விழுந்து உண்டான குன்றுகள்' - இப்படி உள்ளூர் மக்களும் சுற்றுலா வழிகாட்டிகளும் தங்களின் கற்பனை வளத்தால் இலங்கையை மேலும் மேலும் வசீகரமானதாக மாற்றுகின்றனர். அந்த வகையில், இந்த நுவரேலியாதான் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த ‘அசோகவனம்.’

`நுவரேலியா என்ற நகருக்கு அப்பெயர் வந்த காரணம் அனுமன் அசோகவனத்தை எரித்த ஒளியினால் ஏற்பட்டது என்பர். அசோகவனம் நுவரேலியாவுக்கு அருகேயுள்ள ஹக்கல பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியாகும். அப்பகுதியில் பல அசோக மரங்களுண்டு. அவ்விடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டதன் நினைவாக சீதைக்குக் கோயில் இன்றுமுண்டு. சீதை பல்லாங்குழி விளையாடியதைக் எடுத்துக்காட்ட ஏழு குழிகள் கோயிலுக்கு அருகே உள்ளது. அனுமன் தன் பாதம் பதித்த அடையாளமும் உண்டு' என்று யாழ்ப்பாணத்தவராகிய பொன்.குலேந்திரன் இலங்கை பற்றிய தனது `20 மரபுக் கதைகள்' நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ராமன் வந்து தன்னை மீட்கும் நாளை எதிர்பார்த்து ஊணுறக்கமின்றி சீதை குளிக்காமல், உடை மாற்றாமல் புகைபடிந்த சித்திரம்போல அசோகவனத்தில் காத்திருந் தாளாம். அவளைச் சுற்றிலும் ஏராளமான அரக்கியர்கள் காவலுக்கு இருந்தார்களாம். என்றாலும் சீதை எப்போதாவது, ‘போரடிக் கிறதே’ என்று தன்னிடம் அன்பாயிருந்த அரக்கி திரிசடையுடன் பல்லாங்குழி விளையாடி பொழுதைக் கழித்திருக்கலாமில்லையா...அதன் நினைவாகத்தான் அந்த ஏழு குழிகள்.

சுற்றுலாப் பயணிகளுக்கு நுவரேலியா ஓர் அற்புதமான கோடை வாழிடமாக இருந்து வருகிறது. இதை `இலங்கையின் நீலகிரி' என்கிறார் எழுத்தாளர் கி.வா.ஜ. மலைகள், அருவிகள், ஏரிகள், தேயிலைத் தோட்டங்கள், கோல்ஃப் மைதானங்கள், பூங்காக்கள், வசதியான தங்குமிடங்கள் என ஒரு முழுமையான பேக்கேஜாக அமைந்திருக்கிறது.

கோடைக்காலங்களில் பெரும்பாலான இலங்கை மக்கள் நுவரேலியாவை நோக்கியே படையெடுக்கிறார்கள். நாங்கள் சென்றது ஜனவரியில் என்பதால் கூட்டம் அதிகமில்லை. மலையும் குளிரும் ஒன்றாகச் சேர்ந்து மனத்தை மயக்கின. எங்கள் பயணம் அத்தனை இனிமை யானதாக அமைந்ததற்கு நாங்கள் காரில் பயணித்ததும் ஒரு முக்கியமான காரணம். வழியெங்கும் அடிக்கடி காரை நிறுத்தி இறங்கி இதுவரை வாழ்நாளில் பார்த்தேயிராத பழ வகைகள், சுட்ட சோளக்கருது, இளநீர் என்று வாங்கிச் சாப்பிட்டோம். சாலையோரக் கடைகள், கோயில்கள், கடந்து செல்லும் மக்கள், பள்ளிக் குழந்தைகளை ஆசை ஆசையாக வேடிக்கை பார்த்தோம்.

இலங்கையில் ஒவ்வோர் உணவகத்திலும் எங்களுக்கு ஒரு புது அனுபவம் காத்திருந்தது. 90-களில், காலை உணவுக்காக நீங்கள் தமிழக உணவகங்கள் எதற்குள் நுழைந்தாலும், உள்ளே சுவரில் பதிக்கப்பட்ட பெரிய கண்ணாடி அலமாரிக்குள், பூரிகளை முன்பே சுட்டு குன்றுபோல அடுக்கிவைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல இங்கேயும் கண்ணாடி அலமாரிகள் இருந்தன. ஆனால், பூரிக்குப் பதிலாக தோசைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்ற உணவகத்துக்கு இரண்டு வாசல்கள். நாங்கள் பின்வாசல் வழியாக நுழைந்ததால், சித்து விஷயம் தெரியாமல், “எனக்கு மீல்ஸ் வேணாம். ரெண்டு தோசை மட்டும் கொண்டு வாங்க ப்ளீஸ்” என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, சில்லென்று ஆறி அவலாய்ப் போன ரப்பர் தோசையைப் பார்த்துத் திகைத்து, தட்டில் வைத்துக்கொண்டு வெகு நேரம் சாப்பிட முடியாமல் தவித்து, அரையும் குறையுமாகச் சாப்பிட்டு எழுந்தார்.

அந்த உணவகத்தில் ‘அரிசி பால் கேக்’ என்றொரு பண்டம் இருந்தது. அதிக கஞ்சித் தன்மையுள்ள அரிசியைப் பொங்கல்போல சமைத்து உப்பும் தேங்காய்ப்பாலும் சேர்த்துக் கிளறி தட்டில் கொட்டிப் பரப்பி, ஆறியதும் மைசூர் பாகுபோல பெரிய துண்டங்களாக வெட்டி வைத்துக்கொண்டு தொடுகறி / குழம்போடு சாப்பிடுவதுதான் ரைஸ் மில்க் கேக். பார்க்க அழகாக இருக்கிறதே என்று ஆர்டர் செய்தால், அதுவும் குளிரில் விறைத்திருந்தது. பருப்போடும் கோழிக் குழம்போடும் சாப்பிட, சூடில்லாவிட்டாலும் சுவையாகவே இருந்தது. அந்த இலங்கை பருப்புக்கறியைச் செய்து பார்க்க விரும்புவோர் நெய்யில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், தனி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த துவரம்பருப்பு அல்லது மசூர் பருப்பும் உப்பும் சேர்த்து கால் கப் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி கடுகு, கறி வேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டுங்கள். சுடுசாதத்தோடு திவ்வியமாகச் சேர்ந்து கொள்ளும்.

அங்கிருந்து கிளம்பி மலையேறி, முன்பதிவு செய்திருந்த ஹோட்ட லுக்குச் சென்று சேர்கையில் மாலையாகி இருந்தது. கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு பின் கிளம்பி கிரிகரி ஏரிக்குச் சென்றோம். ஏரிக்கரையை ஒட்டிய பரப்பில் குதிரைச் சவாரிக்காக குதிரைகளை நிறுத்தி வைத்துக்கொண்டு, சுற்றுலாப் பயணிகளை கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

அமுதினியை குதிரையில் ஏற்றும் போது, அபத்தமாக ‘நாமும் ஏறிப் பார்த்தாலென்ன?' என்று ஓர் எண்ணம் தோன்றியது. அதை நினைப்பிலேயே வைத்துக்கொள்ளாமல் வெளியிலும் சொல்லித் தொலைத்துவிட்டேன். ஏறச் சொல்லி சித்துவும் அம்முவும் வற்புறுத்தினார்கள். சரிதான் என்று பைக்கில் ஏறுவதுபோல ஏறப்போனால் அதன் முதுகைத் தொட்டதும் பயத்தில் கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஏற முடியாமல் நான் கூச்சல் போட, பதிலுக்குக் குதிரை மிரண்டு கனைக்க அந்த குதிரைக்காரப் பையன் குதிரையை முதலில் சமாதானப்படுத்திவிட்டு, என்னிடம் திரும்பி, “பயப்படாமல் ஏறுங்கோ அக்கா. நான் பார்த்துக் கொள்வேன்” என்றான். அவனை நம்பி அரைமனதோடு, பயமும் கூச்சமுமாக குதிரையில் ஏறி அமர்ந்ததும் பயம் இன்னும் பீடித்துக்கொண்டது. குதிரை அதுபாட்டுக்கு முன்னே நடக்க ஆரம்பிக்க, `நான் பார்த்துக்கொள்வேன்’ என்றவன் அவன்பாட்டுக்குப் பின்னால் சாவகாசமாகத் தன் சகாக்களுடன் பேசிக்கொண்டு நடந்து வந்தான். ‘அய்யய்யோ, குதிரை திடீர்னு வேகமா ஓட ஆரம்பிச்சா என்ன செய்வோம்... கர்ணனில் தொடங்கி குரு சிஷ்யன் வரை எத்தனை தமிழ்ப்படங்களில் பார்த்திருக்கிறோம்...’ என்றெல்லாம் கலங்கி, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வலம்வந்து, வாழ்வில் முதலும் கடைசியுமாக குதிரை ஏறியதற்கு சாட்சியாக, முகத்தில் பயம் தெரியாதபடிக்குச் சிரித்துக்கொண்டே போட்டோ எடுத்துக்கொண்டு கீழே இறங்கினேன்.

கிரிகரி ஏரி அத்தனை அழகான நீர்ப்பரப்பு. நீலவானும் மஞ்சு சூடிய மலைகளும் நீரில் வரைந்த ஓவியம்போல பிரதிபலித்துக் கொண்டிருந்தன. ஏரியில் மிகப்பெரிய அன்னப்பட்சிகள் நீந்துவது போல அன்ன வடிவப் படகுகளில் மக்கள் சவாரி செய்து கொண்டிருந்தார்கள்.

அமுதினி ‘போலாம்’, ‘போலாம்’ என்று குதித்தாள். நுழைவுச்சீட்டு வாங்குமிடத்தில் உள்ளூர் கட்டணமும், அதைவிட பல மடங்கு அதிகமாக வெளிநாட்டவர்களுக்கான கட்டணமும் குறித்து வைத்திருந்தார்கள். ‘அம்மாடி! அப்படியே திரும்பி போயிடலாம்’ என்றேன்.

படகு ஏறலாம் என்று ஏரியை நெருங்குவதற்குள் நாடகத்தில் காட்சிகள் மாறுவதுபோல, திடீரென மேகங்கள் திரண்டு கறுத்து மழை பொழிய ஆரம்பித்தது. திகைத்துப் போனோம். கீர்த்து அன்றுதான், காய்ச்சல் தந்த சோர்விலிருந்து மீண்டு கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்திருந்தாள். மழையால் மீண்டும் உடம்பு கெடப்போகிறதோ என்று பயந்து அவசரமாக காருக்குத் திரும்பி மழை ஏதேனும் தயவு பண்ணுமாவெனக் காத்திருந்து அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

மறுநாள் காலை அறையை காலி செய்துகொண்டு கீழிறங்கத் தொடங்கினோம். விரைவிலேயே ‘சீதா எலிய’ என்னுமிடத்தை அடைந்தோம். இங்கே சீதைக்கென தனிக்கோயில் இருக்கிறது. சீதையம்மன் கோயிலின் கோபுரமும் வாயிலும் சாலையை ஒட்டியே அமைந்திருந்தாலும் கோயில் படியிறங்கிச் செல்லும்படியாக பள்ளத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

நீரூறிய பாறையில் நடப்பதுபோல கோயில் தரை சில்லென்று ஈரமாக இருந்தது. அருகிலேயே இனிமையாக சலசலத்து நீரோடும் ஓசை. கோயிலுக்குப் பின்புறம் வானுயர்ந்த அடர்ந்த மரங்களும், கொட்டும் அருவியும், பெருகியோடும் நதியும் இருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வழிபடவே தோன்றவில்லை. அங்கே நின்றால், வேண்டுவதற்கென்று எதுவுமில்லாமல், கவலையோ மகிழ்ச்சியோ இல்லாமல் மனம் வெற்றுத் தாளைப் போல வெறுமையாக ஆகி விடுகிறது.

கோயிலுக்குப் பின்னாலிருக்கும் அருவியில்தான் சீதை நீராடியதாகச் சொல்கிறார்கள். அங்கே பாறையில் அனுமன் பாதத்தடம் மஞ்சள் வண்ணத்தில் தனித்துக் காட்டப்பட்டிருக்கிறது. பக்தர்கள் மனத்தில் எதையாவது வேண்டிக் கொண்டு அருவி நீரில் ஒரு பூவை எறிகிறார்கள். பூ நீரோடு இணைந்து ஓடி ஆற்றில் போய்ச் சேர்ந்தால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் அருவியிலேயே மூழ்கிவிட்டால் காரியம் நிறைவேறாது என்றும் நம்புகிறார்கள். நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை.

கோயிலிருந்து சற்று தொலைவில் தெரிந்த கறுப்பு நிறமான மலையைச் சுட்டிக்காண்பித்து, ‘அது அனுமன் தீயிட்டதால் கருகிய பகுதி’ என்கிறார்கள். மரங்கள் கருமையாக இருப்பது மட்டுமல்லாது அங்கே நிலமும்கூட நெருப்பால் எரிந்தது போல கருமையாகத்தான் இருக்கிறதாம். அனுமன் சந்நிதியில் வணங்கித் திரும்புகையில் அவரது வானரப் படையைச் சேர்ந்த சிலர் நேரில் வந்து அருள்பாலித்தார்கள்.

கீர்த்து, “ம்மா! கொங்கு! கொங்கு!” என்று மகிழ்ந்து குதூகலித்தாள். அங்கிருந்து கிளம்பி வழியிலிருந்த பூங்கா ஒன்றில் இளைப்பாறி மீண்டும், ‘யால தேசிய வனம்’ நோக்கி பயணிக்கத் தொடங்கினோம். நுவரேலியா - அழகும் ஆச்சர்யங்களும் நிறைந்த பயணம்!

(வாருங்கள் ரசிப்போம்!)