லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

தீரா உலா: எமது இலங்கைச் செலவு!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

“காற்றில் வாழ்வைப்போல விநோத நடனம் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் இலைகளைப் பிடிக்கும்போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்துகொள்கிறது.''
- தேவதச்சன்

ஒவ்வொரு முறை இக்கட்டுரைகளை எழுதும்போதும் இப்படித்தான் ஆகிறது. சொல்லிச் சொல்லித் தீர்ந்தபின்பும் சொல்லை மிஞ்சிய அனுபவங்கள், வார்த்தைகளிலிருந்து தப்பித்து வழியில் எங்கோ நின்று விடுகின்றன. ‘இங்கேதானே வைத்தேன்’ என்று தட்டுத்தடுமாறி மூக்குக்கண்ணாடியைத் தேடுவதைப் போல, ஐந்தாம் மாடியிலிருந்து இறங்கி வந்தபிறகு வீட்டைப் பூட்டினோமாவென திகைப்பதைப் போல, நினைவுகளைத் துழாவித் துழாவி, சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டோமா என்ற சந்தேகத்துடனேயே இவற்றை உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தீரா உலா: எமது இலங்கைச் செலவு!

இலங்கைப் பயணம், எனக்கு வேறெந்தப் பயணத்திலும் இல்லாத அளவு, வாழ்நாளின் இறுதிவரை மறக்கவே இயலாத அனுபவங்களைக் கொடுத்தது. அது வாழ்வின் முதல் குதிரை சவாரி, முதன்முதலாகப் படகில் நடுக்கடல் வரை பயணம், முதல் ‘ஹோம் ஸ்டே’, முதன்முறையாக நிஜக் காட்டுக்குள் சுற்றியது என்று நிறைய சாகசங்களை உள்ளடக்கியது.

கீர்த்தினியின் இரண்டாவது பிறந்தநாளுக்கு இலங்கை செல்லலாம் என்பதை பயணத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகத்தான் முடிவு செய்தோம். அந்த திடீர் முடிவுக்கு, விசாவுக்காக மெனக்கெடத் தேவையில்லை என்பதும், பயணச்செலவு பெரிதாக கையைக் கடிக்காது என்பதுமே முதன்மைக் காரணங்களாக இருந்தன. ஆனால், சிறு வயதிலிருந்தே பரந்து விரிந்த பாரதத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போதெல்லாம் தாயின் காலருகில் நிற்கும் குழந்தை போலக் காட்சியளிக்கும் அந்த சிறிய கண்டத்தின் மீதான ஈர்ப்பும் தவிர்க்க முடியாத ஒரு குட்டிக் காரணமாயிருந்தது.

பயணத்துக்காக விமான டிக்கெட்டுகளை வாங்கி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும்போது கீர்த்தினிக்குக் காய்ச்சல் வந்தது. முதலில் வைரல் இன்ஃபெக்‌ஷன் என்று கணித்து ஓரிரு நாட்களில் தொண்டையில் நோய்த்தொற்று என்று ஆண்டிபயாடிக்குகள் ஆரம்பித்து, ஏழு நாட்களாகியும் காய்ச்சல் நிற்காததால், காது மூக்கு தொண்டை நிபுணரை சந்தித்து தொண்டையில் ஆரம்பித்த தொற்று காது வரையிலும் பரவியிருப்பதைக் கண்டுபிடிக்கும்போது பயணத்தேதி நெருங்கியிருந்தது. கீர்த்தினி ஏழு நாட்கள் கடும் காய்ச்சலில் இளைத்துத் துவண்டிருந்தாள். மருத்துவர், ‘எல்லாத்தையும் அழிச்சிட்டு திரும்ப மொதல்லருந்து தொடங்கலாம்’ என்று மருந்துகள் அத்தனையையும் மாற்றிக் கொடுத்தார்.

 இலங்கை திருமண வைபவம் (2020)
இலங்கை திருமண வைபவம் (2020)

“மூணு நாள்கள் கழிச்சு வாங்க. நான் ஓகே சொன்னா நீங்க ஶ்ரீலங்கா போகலாம். நோ சொன்னேன்னா எல்லாத்தையும் யோசிக்காம கேன்சல் பண்ணுங்க” என்றார். அடுத்த மூன்று நாள்களும் காய்ச்சல் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், சரியாக 4 மணி நேரத்துக்கொரு முறை வந்து கொண்டிருந்த காய்ச்சல் கொஞ்சம் தாமதித்து வந்தது. நான்காம் நாள், அவளை பரிசோதித்துவிட்டு, “ஓகே.. ஶ்ரீலங்கா உங்களை வரச் சொல்லுது. அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே கீர்த்தினி” என்றார் டாக்டர். இப்படி ஆரம்பமே த்ரில்லிங்காகத் தொடங்கிய பயணம் சென்று திரும்பும் வரையிலும் அப்படியே தொடர்ந்தது. அவளுக்கு அடுத்த ஏழு நாட்களுக்கு ஆன்ட்டிபயாடிக் கொடுக்க வேண்டியிருந்ததால், கைக்கு அடக்கமாக மருந்து பாட்டில் கொள்ளும் அளவுக்கு ஐஸ் பெட்டியும் உள்ளே உருகாத ஐஸ் பாக்கெட்டுகளும் வாங்கி வைத்து கையோடேயே தூக்கிக்கொண்டு சுற்றினோம். இலங்கை சென்ற மறுநாளே காய்ச்சல் வருவது நின்று விட்டது என்றாலும், மருந்தின் வேகத்தினாலோ, அலைச்சலாலோ பெரும்பாலும் தூங்கிக்கொண்டேயிருந்தாள்.

அவளது உடல்நலனைக் கருத்தில் கொண்டு கொழும்புவில் தொடங்கி கண்டி, பின்னவால நுவரேலியா, யாள, மிரிஸ்ஸா, காலி எனச் சுற்றி மீண்டும் கொழும்புவில் முடியும் மிகச் சிறிய தென்னிலங்கைப் பயணத்தையே மேற்கொண்டோம்.

ஜனவரி 22-ம் தேதி மாலை `நல்லபடியா போய்ட்டு பத்திரமா ஊர் போய்ச் சேரனும் ஆத்தா' என்று மலையனூர் மாரியம்மனை மானசீகமாக வேண்டிக்கொண்டு பெட்டி, குட்டிகளுடன் கிளம்பி, 5 மணி நேரம் விமானத்தில் பயணித்து, அழகான விமானப் பணிப்பெண்களிடமிருந்து `ஆய்புவான்' (வணக்கம்) என்ற சிங்கள வார்த்தையைக் கற்றுக்கொண்டு கொழும்பு சென்று இறங்கினோம்.

விமானத்தில் சரியாகத் தூங்காததால் காரில் ஏறியதும் தூங்கத் தொடங்கிய நான் விழிப்பு வந்ததும் ஏராளமாக அதிர்ச்சியடைந்தேன்.

 கண்டித் திருமணம் (1938)
கண்டித் திருமணம் (1938)

கொஞ்சமும் மாற்றமில்லாமல் கேரளாவின் ஆழப்புழா நகருக்குள் போய்க்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது. முதன்முதலாக வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் கொஞ்சம் காசு சேர்த்து துபாய்க்கோ, சிங்கப்பூருக்கோ செல்வது நல்லது. ஏனெனில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எளிதாக ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடித்து விடலாம்போல அத்தனை ஒற்றுமை. ஒரே மாதிரியான மலைகள், அருவிகள், காடுகள், மரங்கள், ஏரிகள், சாலைகள், சாலையோர வியாபாரிகள், குப்பை கூளங்கள், கொசுக்கள், இளநீர்க் கடைகள், விளம்பரங்கள் வரையப்பட்ட காம்பவுண்ட் சுவர்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள், மூன்றே மாதங்களில் ஆங்கிலம் பேச வைக்கும் Spoken English வகுப்புகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜனவரியென்றும் பாராமல் சென்னையில் வறுத்தெடுக்கும் அதே மொட்டை வெயில் வேறு!

பின்னவாலவில் இறங்கியதும் வெயில் தாளாமல், அம்மு அடம்பிடித்து வெள்ளைக்காரச் சீமாட்டிகள் அணிவதைப் போல பெரிய தொப்பி வாங்கினாள். பேசத் தெரியாத கீர்த்துவும் அக்காவின் தலையில் வண்ணமயமான தொப்பியைப் பார்த்ததும், என் கையிலிருந்து சாய்ந்து அவள் தொப்பியைப் பிடித்திழுக்கத் தொடங்கினாள். வேறு வழியின்றி, அவளுக்கும் ஒன்று வாங்கி மாட்டிவிட்டதும் அது நெற்றியிலிருந்து இறங்கி பாதிக் கண்களை மறைப்பது பிடிக்காமல், அடுத்து அதை எப்படியாவது தலையிலிருந்து கழற்றுவதற்கான போராட்டத்தை ஆரம்பித்தாள்.

 ஹோம் ஸ்டே - கீர்த்துவின் பிறந்தநாள்
ஹோம் ஸ்டே - கீர்த்துவின் பிறந்தநாள்

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் சாலையில் 90 கி.மீ பயணித்து இடப்புறம் திரும்பினால் வருவது பின்னவால கிராமம். யானைகள் சரணாலயத்துக்குப் புகழ் பெற்றது. அங்கே போனால் ஏறத்தாழ 100 யானைகளை ஒன்றாக ஒரே இடத்தில் பார்க்கலாமென்றும், பெரிய யானைகளுக்குப் பழங்களும், குட்டி யானைகளுக்கு புட்டிப்பாலும் நாமே புகட்டலாம் என்றும் சொன்னார்கள். நாங்கள் போகவில்லை. மாறாக வழியில் ஒரு ஆற்றில் சிறிதும் பெரிதுமாக யானைகள் குளிப்பதை சற்று தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தோம். அதற்கே ஏராளமாக வெளிநாட்டவர்கள் அங்கே குழுமி நின்று, குட்டி யானைகள் நீரில் விழுந்து புரண்டு திளைப்பதையும், தும்பிக்கையால் நீரை உறிஞ்சி முதுகுக்குப் பின்னால் விசிறிக் கொள்வதையும் கனத்த கேமராக்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

கீர்த்து முதன்முதலாக யானைகளை நேரில் பார்க்கிறாள். வியப்பில் கண்களை அகல விரித்துக்கொண்டு மகிழ்ச்சியில் துள்ளினாள். எல்லோரும் யானைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நான் சாலையில் சிறிய கும்பலுக்கு நடுவே ஊர்வலமாக நடந்து போய்க் கொண்டிருந்த மணமக்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இலங்கையின் பாரம்பர்ய திருமண உடை அத்தனை ஆடம்பரமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்த உடைகளை வாடகைக்கும் தருகிறார்களாம். கேரளப்புடவைகள் போல வெளிர் சந்தன வண்ணத்தில் அதே நிற சரிகை பார்டர் வைத்த புடவையும், அதே வண்ணத்தில் நகைகளும், கைகளிலிருந்து தரை வரை பூத்திறங்கிய பூங்கொத்துமாக அந்த மணப்பெண் அவ்வளவு அழகாக இருந்தாள்.

மணமகனின் பாரம்பர்ய திருமண உடை மிகவும் கனமானதாகவும் சிக்கலானதாகவும் தெரிந்தது. நம்மூர் சித்தப்பா, மாமாக்களின் சஃபாரி டிரஸ் போல திருமணத்தைத் தவிர வேறெங்குமே அதை அணிய முடியாதென நினைக்கிறேன். பின்னவாலவிலிருந்து கிளம்பி கண்டியில் ஹோம் ஸ்டே முறையில் தங்கினோம்.

நாங்கள் தங்கிய வீடு ஆற்றின் கரையில் இருந்தது. வீட்டின் மேல் பகுதி முழுவதையும் எங்களுக்கு ஒருநாள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். கொசுவலை போர்த்திய வெண்ணிறப் படுக்கைகளோடு இரண்டு ஏசி அறைகள், டி.வி, புத்தகங்கள், தொலைபேசி மற்றும் பாரம்பர்ய கலைப் பொருட்களோடு அழகிய கூடம், அடுப்பு, மிகச் சில பாத்திரங்கள், டீத்தூள், சர்க்கரை ஆகியவற்றோடு சமையலறை, இடுப்புயர மதில்சுவரோடு காற்றோட்டமான டைனிங் ஹால், அங்கிருந்து எட்டிப்பார்த்தால் அருகில் சலசலத்தோடும் ஆறு என்று அந்த வீடு ரம்மியமாக இருந்தது.

வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் உறவினர்களை உபசரிப்பது போல அக்கறையாக கவனித்தார்கள். பிரெட், வெண்ணெய், ஜாம், பால், முட்டை எனும் வழக்கமான காலை உணவுடன் எங்களுக்காக அரிசிச்சோறும், பட்டை கிராம்பு தாளித்து தேங்காய்ப்பால் ஊற்றி சமைத்த துவரம்பருப்பும், நீர்ப்பசலைக்கீரை தோரனும் செய்து கொடுத்தார்கள். அன்றிலிருந்து ஶ்ரீலங்கன் தால் எங்களது ரெகுலர் மெனுவில் இணைந்துகொண்டது. அவ்வீட்டுச் சிறுவனுடன் அம்மு ஒட்டிக்கொண்டு இரவில் அங்கேயே படுத்துறங்குகிறேன் என்று அடம்பிடித்தாள்.

மறுநாள் காலை ஜனவரி 24 அன்று கீர்த்துவின் பிறந்தநாளுக்காக குடும்பமே சேர்ந்து பலூன்கள் கட்டி கூடத்தை அலங்கரித்துக் கொடுத்தார்கள். கீர்த்து தூங்கியெழுந்து ஊரில் தாத்தா பாட்டிகளிடம் ஆசி பெற்று புத்தாடை அணிந்து ஃப்ரஷ்ஷாக இருந்தாள். ஆனால் சித்து, தவறுதலாக இரவு கொடுக்க வேண்டிய மருந்தை காலையிலேயே கொடுத்து விட்டதால், கண்களைச் சொக்கிக்கொண்டே கேக் வெட்டி விட்டு திரும்பவும் தூங்க ஆரம்பித்துவிட்டாள். அதனால் புகழ்பெற்ற கண்டி கதிர்காம முருகரை சந்திக்க முடியாமல் நுவரேலியா கிளம்ப வேண்டியதாயிற்று.

அங்கிருந்து கிளம்பும்போது, வருடாவருடம் பள்ளி ஆண்டு விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும் உணர்வுதான் இருந்தது. காரிலேறிய பின்னாக அவ்வீட்டுச் சிறுவன் ஓடிவந்து, முதல் நாள் இரவு அம்முவுக்கும் அவனுக்கும் சண்டை வரக் காரணமாயிருந்த சின்னஞ்சிறு பந்தை ஜன்னல் வழியே அம்முவிடம் நீட்டினான். அம்மு புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு, காரின் பின் கண்ணாடி வழியே அவனுக்கு கையசைத்துக்கொண்டே வந்தாள். கார் நுவரேலியா நோக்கி ஓடத் தொடங்கியது.

பின்குறிப்பு: ‘செலவு’ என்பதற்கு பயணம் என்ற பொருளும் உண்டு. பழந்தமிழ் இலக்கியத்தில் ‘செலவழுங்குதல்’ என்ற பதம் பயணத்தை தவிர்த்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திரு.வி.க அவர்கள் தனது இலங்கைப் பயணம் குறித்து எழுதிய நூலின் பெயர் ’எனது இலங்கைச் செலவு’.

(வாருங்கள் ரசிப்போம்!)