Published:Updated:

`ஆன்மாவை சர்வீஸ் செய்யும் பயணங்கள்!' #MyVikatan

Representational image

15 ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒரு முறை நம்முடைய வாகனத்தை சர்வீஸ் செய்வது போல, ஆண்டுக்கு ஒருமுறை நம்முடைய ஆன்மாவை சர்வீஸ் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி பயணங்களே.

`ஆன்மாவை சர்வீஸ் செய்யும் பயணங்கள்!' #MyVikatan

15 ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒரு முறை நம்முடைய வாகனத்தை சர்வீஸ் செய்வது போல, ஆண்டுக்கு ஒருமுறை நம்முடைய ஆன்மாவை சர்வீஸ் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி பயணங்களே.

Published:Updated:
Representational image

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஸ்ரீமதி உமாசென், இந்திய ரயில்வேயின் அலுவலகம் இயங்கும் டெல்லியில் உள்ள பரோடா இல்லத்தின் மரப்படிகளில் ஏறி இரண்டாவது மாடியை அடைந்தபோது, மூச்சுத் திணறலால் அவரால் பேச முடியவில்லை. ஏறக்குறைய மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தார். அவரைப் பார்த்த ரயில்வே குமாஸ்தாவின் முகத்தில் கேலிப் புன்னகை. சாகப்போகும் தருணத்தில் காசி, ராமேஸ்வரம் சென்று சுற்றிப்பார்க்க ஆசைப்படும் இன்னொரு கிழவி என்ற எண்ணத்தோடு "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

மூச்சுத்திணறலுக்கிடையே, "எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார் உமாசென். "ஓ! குரூப் டூரா? நீங்கள் மிஸ்டர். தே-வைச் சந்தியுங்கள்" என்று இரண்டு மேசைகள் தள்ளி அமர்ந்திருந்த கண்ணாடிக்காரரைக் கைகாட்டினார் குமாஸ்தா. பெயரைக் கேட்டவுடன், அவரும் தன்னைப்போல ஒரு பெங்காலி என்றறிந்த உமாசென், நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார். தே- விடம் தான் வந்த காரணத்தைச் சொன்னார்.

Representational image
Representational image

மேற்கு வங்காளத்தில் உள்ள, உலகம் அதிகம் அறிந்திராத ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசென். இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். அவருக்கு குழந்தைகள் கிடையாது. பெரும் சொத்துக்கு சொந்தக்காரர்.‌ கடந்த சில ஆண்டுகளாகவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுவந்த அவர், வாழ்வின் அந்திமக் காலத்தில் இருப்பதை உணர்ந்தார். தன்னுடைய சொத்துக்களின் மூலம் தன் கிராமத்திற்கு ஏதேனும் செய்ய விரும்பினார். வெளி உலகத்தின் வாசனை படாத குக்கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து, மடியும் தன் கிராம மக்கள், இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றும், பல்வேறு வகைப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

அதற்காகத் தன் சொத்து முழுவதையும் விற்று ஒரு டிரஸ்ட்டை உருவாக்கினார். அந்தப் பணத்தில், அவருடைய கிராம மக்கள் ஒரு ரயில் பெட்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, இமயமலையில் இருந்து குமரி முனை வரை இந்தியாவில் இருக்கும் பல முக்கிய நகரங்களுக்கும், புண்ணியத் தலங்களுக்கும் சென்று வர வேண்டும் என ஆசைப்படுவதாகவும் அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்றும் தே'வை வேண்டிக்கொண்டார். உமாசென்னின் கிராமத்தைப் போன்றதொரு கிராமத்திலிருந்து வேலைக்கு வந்திருந்த தேவின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர், அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

உமாசென் கனவு கண்டது போல, அவர் கிராமத்தைச் சேர்ந்த 44 ஆண்களும் பெண்களும் அவர்கள் வாழ்நாளின் மிகச் சிறந்த தருணங்களைக் காண ஏழு மாத பயணத்தைத் தொடங்கிய போது, உமாசென் உயிரோடு இல்லை. அந்த 44 பேர்களையும் வழிநடத்த, அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியராகப் பணிபுரிந்த ஆஸின் உடன் பயணித்தார். கனடா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஹெதர் உட்ஸ், ஏழு மாதங்களும் அவர்களுடனே பயணம் செய்து அவர்களைச் சுற்றி நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பதிவுசெய்தார். அந்த அனுபவங்களை Third Class Ticket என்ற நூலாக வெளியிட்டார். இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்த அந்தக் கிராமத்து மக்கள், ஏழு மாதங்களுக்குப் பின்னர் தங்களைத் தாங்களே கண்டுபிடித்தார்கள் என்பதே அந்தக் கதையின் கரு.‌

Representational image
Representational image

சிவபெருமானின் வாழ்விடமாக அவர்கள் நினைத்திருந்த இமய மலையையும், மூன்று கடல்கள் சந்திக்கும் இடமாகச் சொல்லப்படுகின்ற இராமேஸ்வரத்தையும் கண்டு களிக்கிறார்கள். முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் வெறுப்புக்குரியவர்களாக நினைத்திருந்தவர்கள், அவர்களிடம் இருக்கும் மனிதர்களைத் தங்கள் அனுபவங்களின் மூலம் காண்கிறார்கள். கிராமிய வாழ்க்கையின் சாதிக் கட்டமைப்புகளை உடைத்தெறிகிறார்கள். கல்லூரியில் படிக்கும் இளம்பெண்களைப் பார்த்து வெட்கி, ஊருக்கு வந்தவுடன் தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினார்கள். அவர்களோடு வந்த சமையல்காரன் பாதியில் ஓடி விட, வேறு வழியின்றி பல்வேறு வகை உணவுகளை சுவைத்துப் பார்க்கிறார்கள்.

மிட்டு, ஒரு மட்பாண்டக் கலைஞன். ஊட்டியில் ஒரு பாதிரியாரின் இருப்பிடத்திற்கு அருகில் தங்கி இருக்கும்போது, இவன் மண்ணைப் பிசைந்து ஒரு சிலையை வடிக்கிறான். அதைப் பார்த்த பாதிரியார் பிரமித்துப் போய்விடுகிறார். அவனை ஒரு காதல் ஜோடியின் சிலையை வடிக்கச் சொல்லி, அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறார். ரின்னு என்ற பெண், பயண வழியில் பார்க்கும் காட்சிகளை சித்திரமாக வரைகிறாள். இந்தக் கூட்டம், கல்கத்தா கலைப்பொருள்கள் காட்சியகத்துக்குச் செல்லும்போது, காட்சியகத்தின் காப்பாளர், ரின்னு வரைந்த படங்களைப் பார்த்து அவற்றை காட்சியகத்தில் வைப்பதற்கு கேட்கிறார். ஒரு படத்திற்கு ஐம்பது ரூபாய் தரத் தயாராக இருக்கிறார் (இது நடந்த ஆண்டு 1969)

Representational image
Representational image

முதன்முதலாகத் தங்கள் கிராமத்தின் எல்லைகளை விட்டு வெளியே வந்த அந்த எளிய மக்களை, செல்லும் வழியெல்லாம், பெரும்பாலோனோர் பிச்சைக்காரர்களைப் போலவே நடத்தியிருக்கிறார்கள். மைசூருக்கு அருகில் இருக்கும் பிருந்தாவன் தோட்டத்தில் இவர்களைப் பார்த்த ஒரு வெளிநாட்டுக்கார், பிச்சைக்காரர்கள் என்றெண்ணி புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். புகைப்படம் எடுத்த பின்னர் இவர்களுக்குப் பணமும் தருகிறார்.‌ இவர்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்து, பயணத்தில் கற்றுக்கொண்ட சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களுடைய கதையை அவருக்குப் புரியவைக்கிறார்கள். அதைக்கேட்டு பிரமித்துப் போன அந்த ஆங்கிலேயர், அவர்களை விருந்துக்கு அழைக்கிறார்.

இந்த எளிய மக்கள் உயர்தர உணவு விடுதிக்குச் சென்று, ஆங்கிலேயர்கள் வரவேற்க, உண்டு மகிழ்கிறார்கள். பயணத்தின் இடையில், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஆஸின், நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். அவர்களோடு வந்த ஒரு முதிய பெண்ணும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார். ஏழு மாதங்கள் கழித்து தன் கிராமத்துக்கு வந்து சேர்ந்த அந்த மக்களுக்கு, வாழ்க்கையின் முழுப் பொருளையும் அந்தப் பயணம் அளித்தது. பயணங்கள் அற்புதமான அனுபவங்களைத் தரக்கூடியவை. எவ்வளவு ரசிக்கக்கூடிய வேலையாக இருந்தாலும், அந்த வேலையைத் தொடர்ந்து செய்யும்போது சோர்வு ஏற்படும்.‌ 15,000 கிலோமீட்டருக்கு ஒரு முறை நம்முடைய வாகனத்தை சர்வீஸ் செய்வதுபோல, ஆண்டுக்கு ஒருமுறை நம்முடைய ஆன்மாவை சர்வீஸ் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி பயணங்களே.

சாலை வழியாகவே இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். தொடர்ந்தார்போல் ஒரு மாதம் மருத்துவப்பணியிலிருந்து விடுப்பு எடுப்பது சாத்தியம் இல்லை. அதனால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த முறை உறுதியாக முடிவுசெய்து, 24. 2. 2020, மாலை 6 மணிக்கு தர்மபுரியிலிருந்து நானும் என் சகோதரர்கள் குமாரும், சம்பத்தும், என் உறவினரும், ஓட்டுநருமான கேசவனும் புறப்பட்டோம். ஒரு வாரத்திற்கு முன்பாகவே என்னவெல்லாம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்பதற்கு பட்டியல் போட்டு, எல்லாவற்றையும் சரிபார்த்துத்தான் புறப்பட்டோம். புறப்பட்டு 5 நிமிடம் கழித்து கேசவனிடம், `வண்டியின் ஒரிஜினல் ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் காகிதங்கள் இருக்கிறதா?' என்று கேட்டபோது, திடுக்கிட்டுப் போனார்" சார்.

பாஷாவோட மேஜை டிராயரில் வைத்து பூட்டிவச்சேன், மறந்துட்டேன்" என்று சொன்னார். நண்பர்கள் வழி அனுப்ப, புகைப்படம், வீடியோ எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டு, திரும்பப் போவதற்குப் பிடிக்கவில்லை. எனவே, காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, கேசவனை ஷேர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பினோம். மறுபடியும் கேசவனிடமிருந்து போன். `பாஷா, மேஜையைப் பூட்டிவிட்டு சேலத்துக்குப் போய்விட்டார்' என்று. அப்புறம், பூட்டு திறக்கிறவனை கூட்டிக்கொண்டு வந்து, பூட்டைத் திறந்து, ஆர்சி புக்கோடு கேசவன் வருவதற்கு முக்கால் மணி நேரம் ஆயிற்று. ஒரு வழியாகப் புறப்பட்டோம்.

பயணம்
பயணம்

எங்கள் முதல் நிறுத்தம், அனந்தப்பூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தி என்ற ஊர். நாங்கள் கடைசியாகப் போய் சேரும் இடத்தை இன்னமும் முடிவுசெய்யவில்லை. தங்கும் இடங்களை ஏற்கெனவே தேர்வுசெய்து, அறைகளையும் பதிவு செய்து வைக்கவில்லை. இந்தப் பயணத்தைப் பொறுத்தவரை அடுத்த நாள் எங்கே போவது என்பதை முந்தைய இரவு முடிவுசெய்து பயணிப்பது என்று முடிவெடுத்திருந்தோம். தர்மபுரியிலிருந்து கூத்தி வரை தேசிய நெடுஞ்சாலை. தலைக்கு நேர் வகிடு எடுப்பது போல தென் இந்தியாவின் நடுக்கோடாக இந்தச் சாலை செல்கிறது. நான் கூகுள் மேப்ஸை பெரிதும் நம்புகிறவன். மாலை வேளையில், பெங்களூருக்கு உள்ளேயே போவது போல கூகுள் வழிகாட்டியது. ஆச்சரியம்... ஆனால் உண்மை! எங்கேயும் டிராஃபிக் ஜாம் இல்லாமல் பெங்களூரைக் கடந்துவிட்டோம். பெங்களூருக்கு வெளியே, ஒரு நல்ல உணவு விடுதியில் உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு, கூத்திக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த விடுதியில் தங்கினோம்.

கூத்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். பெங்களூரிலிருந்து கூத்தி சேரும்வரை வழியில் உயரம் குறைந்த சிறிய குன்றுகள் மட்டுமே‌ தென்பட்டன.‌ எங்கள் ஊரில், இவற்றை 'குட்டை' என்று அழைப்பார்கள். மரங்கள் இல்லாத சிறிய மேடுகள். கூத்தி குன்றில் உள்ள கோட்டை, ஏறத்தாழ 10 கிலோமீட்டர் சுற்றளவுகொண்டது. கி.பி 1076 முதல் கி.பி 1126 வரை இங்கே ஆட்சிசெய்த சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன், இந்தக் கோட்டையை நிர்மானித்தான். பின்னர், நாயக்க மன்னர்கள், முகலாய மன்னர்களான ஔரங்கசீப், ஹைதர் அலி ஆகியோர் வசமிருந்து கடைசியாக பிரிட்டிஷார் கைக்கு வந்தது. காலை எழுந்தவுடன், கூத்தி கோட்டைக்குச் சென்றோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவரான சர் தாமஸ் மன்றோ இங்கே பலமுறை வந்து தங்கி நிர்வாகம் செய்திருக்கிறார். இந்திய வேளாண் சமூக வரலாற்றின் மைல்கல்களில் ஒன்றான ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர், மன்றோ.

பயணம்
பயணம்

தருமபுரியின் துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். அவர் வெட்டிய குளம், இன்றைக்கும் தருமபுரியில் இருக்கிறது. தொப்பூர் மலைப்பாதையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பின்புறம் இருக்கும் கிணறு, வழிப்போக்கர்களுக்காக மன்றோவால் வெட்டப்பட்டது. தொல்லியல் துறையின் செயலாளராக இருக்கும் திரு. உதய சந்திரன் 'இந்தியாவின் மிகச்சிறந்த கலெக்டர்' என்று மன்றோவை குறிப்பிட்டுப் பேசினார். சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த மன்றோ, இந்தப் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கூத்திக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டிகொண்ட என்ற இடத்தில் காலரா நோயால் தாக்கப்பட்டார்.

தான் பிழைக்க மாட்டோம் என்று உணர்ந்த மன்றோ, நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார். இறந்துபோன மன்றோ, கோட்டையின் அடிவாரத்தில் இருக்கும் ஆங்கிலேயர்களின் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரோடு பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரியும், இதேபோல காலராவின் பாதிப்புக்குள்ளானார். அந்த அதிகாரியின் கடைசி விருப்பம், இறந்த பிறகு தாமஸ் மன்றோவின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான். இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்து பகுதியில் பிறந்து, நாட்டுக்காக வாழ்ந்து, மறைந்த தாமஸ் மன்றோவின் சவப்பெட்டி, பின்னர் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளாக மறு அடக்கம் செய்யப்பட்டது.

கூத்தி மலையடிவாரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், பல வெள்ளைக்கார அதிகாரிகள், பெண்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கே, ஒரு ஐந்து வயது குழந்தையின் கல்லறை இருக்கிறது. அந்தக் கல்லறையின்மீது பின்வரும் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது :

"எங்கள் அன்பை உன் மீது பொழிந்தோம்

இவ்வளவு விரைவாக எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்

எங்கள் ரணங்களுக்கு ஒரே ஆறுதல்

மண்ணை விட்டுச் சென்றாலும்

சொர்க்கத்தில் நீ வாழ்கிறாய் என்பதே."

பயணம்
பயணம்

தங்கள் மண்ணையும் உறவுகளையும் பிரிந்து, ஆபத்து நிறைந்த கடலில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, உயிரை துச்சமென மதித்துப் போரிட்டு, உலகெங்கும் தங்கள் ஆட்சியை நிறுவிய ஆங்கிலேயர்கள், தங்கள் நாட்டை உலகத்தின் மிகச் சிறந்த நாடாக மாற்றினார்கள். தங்கள் மொழியை உலக மொழியாக்கினார்கள்.

வாருங்கள் பயணிப்போம்!

- மருத்துவர் இரா.செந்தில்